வியாழன், 31 மார்ச், 2016

உண்மை உயர்வு தரும்.

உண்மை உயர்வு தரும்.
(கதையும் கருத்தும்)

ஒரு ஊரில் பல பாவங்களையும் அஞ்சாமல் ஒருவன் செய்து வந்தான். அவனுடைய குருநாதர் பலமுறை இப்படி பாவங்களை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறிவந்தார், அவன் அதற்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் ஒன்றை மட்டும்கடைப்பிடிக்குமாறு கூறினார். செய்யும் பாவத்தொழில்களில் பொய் சொல்வதையாவது விட்டு விடு என்று அழுத்தமாகக் கூறினார்.  சீடனும் இதற்கு ஒப்புக்கொண்டான். " எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டேன்" என்று சத்தியமும் செய்து கொடுத்தான். ஒருநாள் இரவு அந்த ஊர் அரண்மனையில் திருடுவதற்கு சென்று ஒரிடத்தில் ஒளிந்திருந்தான்.

  அந்த நேரத்தில் நகரச் சோதனைக்காக மாறு வேடத்தில் அங்கு வந்த அரசன் திருடனைக் கண்டார். ஏன் இங்கே ஒளிந்திருக்கிறாய் என கேட்ட அரசனுக்கு அவன் " அரண்மனையில் திருடுவதற்காக வந்தேன் " என்று உண்மையைக் கூறினான் திருடன்.
 அரசன் திடுக்கிட்டான்,இவனுடைய செயல் முழுவதையும் கவனிக்க நினைத்த  அரசன் " நானும் இங்கே திருடுவதற்காகத்தான் வந்துள்ளேன். நீ திருடிக்கொண்டு வருவதில் பாதியை எனக்கு கொடு நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன் " என்றான் அரசன். 
 திருடன் அதற்கு உடன்பட்டு, மாறுவேடத்ததில் இருந்த அரசனைக் காவல் வைத்துவிட்டு, அரண்மனைச் சுவரில் துளைபோட்டு உள்ளே நுழைந்தான். அங்கே இருந்த ஒரு இரும்பு பெட்டியை உடைத்தான், உள்ளே இருந்த விலை உயர்ந்த 5 இரத்தினக்கற்களுள் நான்கினை மட்டும் எடுத்துக் கொண்டான். பங்கு போட வசதிக்காக 4 எடுத்துக் கொண்டான். மீத முள்ள இரத்தினக் கல்லை பெட்டியிலேயே வைத்து விட்டு வெளியே வந்தான். மாறு வேடத்தில் இருந்த அரசனுக்கு 2 கற்களை கொடுத்து விட்டு திரும்பினான். இவனுடைய முழு முகவரியையும் அரசன் கேட்டுத் தெரிந்து கொண்டான். பிறகு அரன்மனைக்கு சென்று பெட்டியைப் பார்த்தான் ஒரு இரத்தினக்கல்இருக்க கண்டு மகிழ்ந்தான்.
  மறுநாள் காலையில் மந்திரியை அழைத்து, " நம் அரன்மனையில் திரு்ட்டு போயிருப்பதாக தெரிகிறது. பெட்டியை திறந்து பார் " என்றார் அரசர். மந்திரி அவ்வாறே பெட்டியை திறந்து பார்த்தார் அதிலிருந்த ஒரு இரத்தினக்கல்ைல தான் எடுத்துக் கொண்டு அரசனிடம் " பெட்டியிலிருந்த இரத்தினக்கற்கள் எல்லாம் திருடு போய் விட்டன " என்றார்.
   அரசன் இரவு நடந்தவற்றை எல்லாம் மந்தரிக்கு எடுத்துரைத்தார். மந்திரியை வேலையிலிருந்து நீக்கி விட்டு, உண்மையைச் சொல்லிய அந்த திருடனை அழைத்து வந்து மந்திரியாக்கினார். 

 கருத்து ; உண்மை உயர்வைத் தரும் எனும் என்னும் தத்துவத்தை யாவரும் மனதில் இருத்த வேண்டும். குழந்தைகளுக்கு இளமை முதலே இதுபோன்ற கதைகளை சொல்லி அவர்களை நல்வழிப்படுத்தி வரவேண்டும். அவர்களுடைய வாழ்வு உயரும். செல்வம் சேர்த்து வைப்பது மட்டும்தான் பெற்றோருடைய கடமை என்று தற்காலத்தில் எண்ணுவதால் தான் இளைஞர் சமுதாயம் குறிக்கோள் இன்றி திசைமாறிச் செல்கிறது.

திருச்சிற்றம்பலம் / ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக