சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாராம்
இழந்த பொன் பொருள் வந்தடைய ஓத வேண்டிய பதிகம்
பாடிய இடம் திருமுருகன் பூண்டி
சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாணாயனாரோடும் அந்தக் கொடுங்கோளூரிலே சிலநாள் இருந்தார். ஒருநாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற வன்மீகநாதருடைய திருவடிகளை நினைந்து; "பொன்னு மெய்ப்பொருளும்" என்று திருப்பதிகம் எடுத்துத் திருப்பாட்டினிருதிதோறும் "ஆரூரானை மறக்கலுமாமே" என்று பாடி, திருவாரூருக்குச் செல்லும் பொருட்டு அடியார்களோடு எழுந்து வழிக்கொண்டு சென்றார். செல்லும் பொழுது, சேரமான் பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்த அவரைப் பின்றொடர்ந்து போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு மந்திரிகளை அழைத்து தம்முடைய நகரத்திலிருக்கின்ற களஞ்சியத்திலுள்ள பொன், இரத்தினம், ஆபரணம், வஸ்திரம் சுகந்த வர்க்கம் முதலிய திரவியங்களெல்லாம் பல ஆட்களின் மேலே சுமத்தி அனுப்பும்படி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அப்படியே செய்தார்கள். சேரமான் பெருமாணாயனார் அந்தச் சுமையாட்களைச் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பரிசனத்துக்கு முன் செல்லும்படி அனுப்பி அவரைவிழுந்து நமஸ்கரிக்க; அவர் அவரை தழுவி விடைக்கொடுத்து, மலைநாட்டை நீக்கிச் சுரங்களையும், கான்யாறுகளையும், வனங்களையும் கடந்து, திருமுருகன்பூண்டி வழியே செல்லுதற்குத் திருவுளங்கொண்டு போனார். அதற்கு அயலிலே போம்பொழுது, பரமசிவன் தம்முடைய பூதகணங்களை நோக்கி, "நீங்கள் வேடவடிவங்கொண்டு சென்று சுந்தரனுடைய பண்டாரங்களைக் கவருங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க, அவைகள் சுந்தரமூர்த்தி நாயனாருடைய சுமையாட்கள் வரும் வழியிலே வேடுவர்களாகிப்போய், வில்லை வளைத்து நாண் பூட்டி அம்புகளைத்தொடுத்து "நாங்கள் உங்களைக் கொன்று போடுவோம்; இத்திரவியங்களெல்லாவற்றையும் போட்டுவிட்டு போங்கள்" என்று சொல்லி, கோபத்தினாலே குத்தி, அந்தத் திரவியங்களெல்லாவற்றையுங் கவர்ந்துகொண்டன. அவர்கள் துன்பத்துடனே ஓடிப்போய், சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்திலே சேர்ந்தார்கள். அவ்வேடுவர்களோ சிவாஞ்ஞையினாலே சுந்தரமூர்த்திநாயனார் பக்கத்தில் செல்லாமல் நீங்கிவிட; சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியிலே சென்று திருக்கோயிலிலே பிரவேசித்து, சுவாமியை வணங்கி, "கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்" என்று திருப்பதிகமெடுத்துத் திருப்பாட்டினிறுதிதோறும் "எத்துக்கிங்கிருந்தீ ரெம்பிரானீரே" என்று பாடியருளினார். உடனே கடவுளுடைய திருவருளினால் அவ்வேடுவர்கள் தாங்கள் பறித்த திரவியங்களெல்லாவற்றையும் அந்தத்திருக்கோயில் வாயிலிலே கொண்டு போய்க் குவித்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் அது கண்டு, சுவாமியை வணங்கி அவைகளை எடுத்துக்கொண்டு முன்னே செல்லும்படி சுமையாட்களை ஏவி, அவ்விடத்தை நீங்கி, கொங்கதேசத்தைக் கடந்து போய், திருவாரூரை அடைந்து, அங்கே சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்தார்.
சுந்தரமூர்த்தி நாயனார் திருமுருகன் பூண்டியில் தான் பெற்ற செல்வங்களை வேடுவர்கள் திருடர்களாக வந்து சுந்தரரிடம் கொள்ளையடித்துச் சென்ற பொன், பொருள்க் திரும்ப பெற பாடிய பதிகம் " கொடுகு வென்சிறை "
திருமுருகன்பூண்டி
பாடல் எண் : 1
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்
பாடல் எண் : 2
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 3
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 4
பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 5
தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர்
பாடல் எண் : 6
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
திருமுருகன்பூண்டி
பாடல் எண் : 1
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , முடைநாற்றம் சேய்மையினும் விரையச் சென்று நாறுகின்ற உடம்பையுடைய வடுகர்கள் வாழ்கின்ற இம் முருகன்பூண்டி , வளைந்த கொடிய வில்லையுடைய வடுக வேடுவர் , வருவோரைப் பொருந்தாத சொற்களைச் சொல்லி , ` திடுகு ` என்றும் , ` மொட்டு ` என்றும் அதட்டி அச்சுறுத்தி ஆறலைத்து அவர்தம் உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம் ; இம்மாநகரிடத்து இங்கு , சிறுகிய , நுண்ணிய இடையையுடைய எம்பெருமாட்டியோடும் நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
` விரவல் ` என்னும் தொழிற்பெயர் , எதிர்மறை ஆகாரமும் , மகர ஐகாரமும் பெற்று நின்றது , ` அழுக்காறாமை ` ( திருக் குறள் . அதிகாரம் . 17.) என்றதுபோல . அஃது ஆகுபெயராய் , அதனையுடைய சொல்லைக் குறித்தது . ` திடுகு , மொட்டு ` என்பன , அச்சுறுத்தும் சில குறிப்புச் சொற்கள் . பிறவுங் கொள்வராயினும் , எல்லாவற்றையும் எஞ்சாது கொள்ளுதல் தோன்ற ஆறலைப்பாரை , ` கூறைகொள்வார் ` என்றல் வழக்கு என்பதை , ` ஆறுபோயினாரெல்லாங் கூறைகோட் பட்டார் ` என்றல் பற்றி அறிக . ` கூறைகொண்டு ஆறலைக்குமிடம் ` என்றதனை , ` ஆறலைத்துக் கூறைகொள்ளுமிடம் ` எனப் பின்முன்னாக மாற்றி யுரைக்க . இகழும் நகரை , ` மாநகர் ` என்றது , இகழ்ச்சிக் குறிப்பினால் . ` இம் முருகன் பூண்டி ` எனச் சுட்டு வருவிக்க . ` மாநகர்வாய் ` என ஒன்றாக ஓதினாரேனும் , ` மாநகர் ` எனவும் , ` இதன்வாய் ` எனவும் இரண்டாக்கி உரைத்தல் கருத்தென்க . ` எற்றுக்கு ` என்பது , ` எத்துக்கு ` என மருவிற்று . ` இங்கு ` என்றது , திருக்கோயிலை . ` அப்பாற் போகலாகாதோ ?` என்பது , ஆற்றலான் வந்து இயையும் . இத்திருப் பாடல்களில் , ஈற்றடிகள் நீண்டி சைத்தன . ` எம்பிரானிரே ` என்றோதுதல் பாடமாகாது .
பாடல் எண் : 2
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமைசொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்க மழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , முல்லை மலரின் மகரந்தம் நறு மணத்தை வீசுகின்ற இம் முருகன்பூண்டி மாநகர் வருவோரை , வேடுவர்கள் , வில்லைக் காட்டி , வெருட்டியும் , பொருந்தாத சொற்களைச் சொல்லிக் கல்லால் எறிந்தும் , கையால் அறைந்தும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன் எல்லைக்குக் காவல் ஒன்றும் இல்லாமை நீர் அறிந்ததேயானால் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
` தாது ` என்றது , உதிர்ந்து கிடப்பனவற்றை . ` எல்லைக் காப்பு ` நான்காவதன் தொகை . அது , பகுதிப்பொருள் விகுதி . ` எல்லை காப்பது ` என்பது பாடமாயின் , ` இவ்வெல்லை தான் காக்கப்படுதல் சிறிதும் இல்லையாயின் ` என உரைக்க .
பாடல் எண் : 3
பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாள்தொறும்
கூறை கொள்ளுமிடம்
முசுக்கள் போற்பல வேடர் வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , வேடர் பலர் குரங்குகள் போலப் பிறர்பொருளைப் பறித்து வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அப்பாவிகள் , பாவம் என்பதொன்றையறியாராய் , விலங்குகளையே கொன்று தின்று , நாள்தோறும் பலரது உயிர்களைக் கொல்லுதலைத் துணிந்து செய்து அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; இதன்கண் நீர் , இழுக்கு நீங்கப் பிச்சை ஏற்று , இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
` பசுக்கள் ` என்பது , விலங்கின் பொதுவை உணர்த் திற்று . ` அப்பாவிகள் ` எனச் சுட்டு வருவிக்க . ` உயிர் ` என்பதும் , ` இழுக்கு ` என்பதும் , எதுகை நோக்கித் திரிந்தன . ` பிச்சை ஏற்கின்ற நீர் , பிறர் பொருளைப் பறித்தலையே தொழிலாக உடையவர் வாழ்கின்ற இடத்தில் இருத்தல் எதற்கு ` என்றவாறு . இழுக்கு நீங்குதலாவது . ` இரப்பவர் ` என்று இகழப்படாது , ` பெரியோர் ` என நன்கு மதிக்கப்படுதல் .
பாடல் எண் : 4
பீறற் கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாள்தொறுங்
கூறை கொள்ளுமிடம்
மோறை வேடுவர் கூடி வாழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏறு கால்இற்ற தில்லை யாய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , குற்றமுடைய வேடுவரே கூடி , ஆறலைத்த பொருளின் பங்காகிய பொருளை உடையவராய் , வாழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகர் , அவர்கள் , கிழிந்த உடையை உடுத்துக்கொண்டு , அதற்குள் உடைவாளையுங் கட்டிக்கொண்டு , வருவோரை அவ்வுடைவாளால் வெட்டி , நாள்தோறும் அவர்களது உடைகளைப் பறித்துக்கொள்ளும் இடம் ; உமது எருது கால் ஒடியாமல் நன்றாகவே இருக்கின்றதென்றால் , அதன்மேல் ஏறி அப்பாற் போகாமல் , இதன்கண் இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
` வெட்டனராய் ` என்பது பாடம் அன்று . ` பங்கியர் ` என்றதனை , ` வில்லியர் ` முதலியன போலக் கொள்க .
பாடல் எண் : 5
தயங்கு தோலை உடுத்துச் சங்கர
சாம வேதமோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கை யாளொடு
முருகன்பூண்டி மாநகர்வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம் பெருமானிரே , நீர் , விளங்குகின்ற தோலை உடுத்து , இன்பத்தைச் செய்கின்ற சாம வேதத்தைப் பாடிக்கொண்டு , அப்பாட்டினால் மயங்கி ஊரில் உள்ளார் இடுகின்ற பிச்சையை ஏற்று உண்பதற்கு வழி ஒன்றும் அறியீரோ ? பல இடங்களுக்குச் செல்ல வலிமையும் உடையீரென்றால் , தழுவுகின்ற , அணிகளை அணிந்த தனங்களையுடைய தேவியோடும் , இம் முருகன்பூண்டி மாநகரிடத்து இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
` உடுத்த ` என்பது பாடம் அன்று . ` சங்கரனே ` என்றும் ` ஓதுபவனே ` என்றும் உரைத்தல் பொருந்தாமை அறிந்து கொள்க . ` அறியீரோ ` என்னும் ஓகாரம் தொகுத்தலாயிற்று ; அதனை , எடுத்த லோசையாற் கூறியுணர்க .
பாடல் எண் : 6
விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர்மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங் கமழ்முரு
கன்பூண்டி மாநகர்வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , நீர் , கொட்டிப்பாடுதற்கு உரிய , தாள அறுதிக்கு ஏற்ப விட்டுவிட்டு ஒலிக்கின்ற ` ` கொக்கரை , கொடு கொட்டி , தத்தளகம் , துந்துமி , குடமுழா , என்னும் இவற்றை விரும்புவராய் உள்ளீரென்றால் , மற்றும் , ஊரவர் இட்ட பிச்சையை ஏற்று உண்பீரென்றால் , பலவகை அரும்புகள் அலர்ந்து மணங்கமழ்கின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து இங்கு எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
குறிப்புரை :
கொக்கரை முதலியன , வாச்சிய வகைகள் . ` மத்தளகம் ` எனப் பாடம் ஓதுதலுமாம் . இகரச் சுட்டினை , ` கொடு கொட்டி ` என்றதற்கு முன்னர் வைத்துரைக்க . ` ஆகில் ` என்றதனை , ` மகிழ்வீர் ` என்றதனோடுங் கூட்டுக .
பாடல் எண் : 7
வேத மோதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்றயலே
ஓத மேவிய ஒற்றி யூரையும்
உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளு
முருகன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரண மேது காவல்கொண்
டெத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , நீர் , வேதத்தை ஓதிக்கொண்டு , வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு , வெள்ளிய கோவணத்தை உடுத்து , பக்கத்தில் அலை பொருந்திய திருவொற்றியூரை உத்திர நீர் விழாவின் பொருட்டு விரும்புவீர் ; அங்குப் போகாமல் , வேடர்கள் , வருவோரைத் தாக்கி , அவரது உடையைப் பறித்துக் கொள்ளுகின்ற இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , யாது காரணத்தால் , எதனைக் காத்துக் கொண்டு , எதன் பொருட்டு இங்கு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 8
படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங்கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
முடவ ரல்லீர் இடரி லீர்முருகன்
பூண்டி மாநகர்வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம்பெருமானிரே , நீர் , தனிமையாக இல்லாது , படத்தையுடைய பாம்புபோலும் மிக நுண்ணிய இடையினையும் , பருத்த தோள்களையும் , வரிகளையுடைய நீண்டகண்களையும் உடைய இளமை பொருந்திய , ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்துள்ளீர் ; முடவரல்லீர் ; ஆகவே , பெயர்ந்து போதற்கண் இடரொன்றும் இல்லீர் ; அன்றியும் , நீர் , விரும்பிய இடத்திற்கு இடபத்தின்மேல் ஏறியும் போவீர் என்றால் , இம் முருகன் பூண்டி மாநகரிடத்து , இங்கு , எதன்பொருட்டு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 9
சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைகலனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையொர்
பாகம் வைத்துகந்தீர்
மோந்தை யோடு முழக்க றாமுரு
கன்பூண்டி மாநகர்வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக் கிங்கிருந் தீர்எம் பிரானீரே.
பொழிப்புரை :
எம் பெருமானிரே , வெள்ளிய நீற்றைச் சாந்தாகப் பூசிக்கொண்டு , வெள்ளிய பற்களையுடைய தலையேகலமாக ஏந்தி , முடியிற் சூடிய வெள்ளிய பிறையாகிய கண்ணியை அம் முடியின் ஒரு பாகத்தில் விரும்பி வைத்தவரே , நீர் , ` மொந்தை ` என்னும் வாச்சியத் தோடு , வேடர்கள் முழங்குதல் நீங்காத இம் முருகன் பூண்டி மாநக ரிடத்து , அணிகளைத் தாங்கிய தனங்களையுடைய மங்கை ஒருத்தி யோடு இங்கு எதன் பொருட்டு இருக்கின்றீர் ?
பாடல் எண் : 10
முந்தி வானவர் தாந்தொ ழும்முரு
கன்பூண்டி மாநகர்வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையொர்
பாகம் வைத்தவனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங்கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வார்இட
ரொன்றுந் தாமிலரே.
பொழிப்புரை :
தேவர் , ஒருவர் ஒருவரின் முற்பட்டு வணங்கு கின்ற , திருமுருகன்பூண்டி மாநகரிடத்து எழுந்தருளியிருக்கின்ற , பந்திற் பொருந்திய விரல்களையுடைய , பாவைபோலும் மங்கையை ஒரு பாகத்து வைத்துள்ள சிவபெருமானை , அவனுக்குத் தொண்டனாகிய நம்பியாரூரன் அன்பினாற் பாடிய இப் பத்துப் பாடல்களால் அவ்வெம்பெருமானைத் துதிப்பவர்கள் , துன்பம் ஒன்றும் இல்லாதவ ராவர் .
நம்பியாரூரன் அன்பிற்கிணங்கி இழந்த பொருட்களை மீட்டித்தந்த ஈசன் நாமும் இப்பதிக பாடல்களை பாடி நல்ல வழியில் இழந்த பொருட்களை மீட்டு பயன் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை