பாபநாசம் திருத்தலம் பாபநாசம் திருத்தலம்
இறைவர் அருள்மிகு பாபநாசநாதர்:
பாவங்கள் நீங்க பாபநாச ஈஸ்வரர் ,இத்தலத்தில் முன்னோர்களின் ஈமக் கரிகைகள் செய்ய இராமேஸ்வரம் போன்று மிக பிரசித்தி பெற்ற தலங்களில் இது மிகவும் சிறப்பு பெற்ற தலமாகும். திதிகள் ெசய்து பாவங்கள் கரைய புண்ணிய நதியாம் தாமிரபரணி நதியில் நம்மை தூய்மைப்படுத்தி புண்ணியம் தரும் ஸதலமாகும். நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
இறைவர் திருப்பெயர் : பாவநாசர், பாபவிநாசகர். இறைவியார் திருப்பெயர் : லோகநாயகி, உலகம்மை. தல மரம் : களா மரம். தீர்த்தம் : தாமிரபரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம். வழிபட்டோர் : அகத்தியர். வைப்புத்தலப் பாடல்கள் : சம்பந்தர் - பொதியிலானே பூவணத்தாய் (1-50-10), அயிலுறு படையினர் (1-79-1);அப்பர் - தெய்வப் புனற்கெடில (6-7-6), உஞ்சேனை மாகாளம் (6-70-8).
தல வரலாறு[தொகு]
பாபநாசம், பொதியின்மலை பாபநாசம் என்னும் இரண்டும் ஒன்றே. மக்கள் 'பாவநாசம்' என்றும் வழங்குகின்றனர்.
பொதிய மலைச் சாரலில் உள்ள பாபநாசம் என்னும் தலமே இவ் வைப்புத் தலம். சிவபெருமானுடைய திருக்கல்யாணத்தைத் தரிசிக்கச் சென்ற தேவர்கள் முனிவர்கள் முதலியோர் கூட்டத்தைத் தாங்கமாட்டாது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர அதைச்சமன் செய்யுமாறு திருவுளங்கொண்டு அகத்திய முனிவரை அழைத்து தென் திசைக்கு ஏகும்படிச் சிவபெருமான் கட்டளையிட, அவ்வாணையின்படி பொதிய மலைக்கு எழுந்தருளீய அகத்தியருக்கு கையிலையிலிருந்த தம்முடைய திருக்கல்யாணக் கோலத்தைக் காட்சி கொடுத்தருளியது பாபநாசம் என்னும் இத்தலத்தில், பாபநாசத்திற்கு மேற்கே ஒரு மைல் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியும் இதனால் 'கல்யாண தீர்த்தம்' என்று பெயர் பெற்றது.
அகத்தியர் கோயில் உள்ள இடம் பழைய பாவநாசம் என்றழைக்கப்படுகிறது. மலையுச்சியில் உற்பத்தியாகும் தாமிரபரணி சமபூமியில் இறங்குமிடமே பழைய பாவநாசமாகும்.
விக்ரமசிங்கபுரத்தில் - "நமசிவாயக் கவிராயர்" என்பவர் (ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் - உலகம்மை மீது அளவிறந்த பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். இவர் தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாவநாசத் திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது பரவசத்தில் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவார். ஒரு நாளிரவு இவர் பாடியவாறே வீடு திரும்பும்போது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே இவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெரித்து அம்பிகையின் மீது பட்டது. அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததைக் கூறினாள். விழித்த மன்னன் மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி யொன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொருச் சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது.
இங்குள்ள அகஸ்தியர் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் சிறப்புடையது.
சிறப்புகள்;
இத்தலம் சம்பந்தர், அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
தமிழ் முனியான அகத்தியருக்கு அம்மையும்-அப்பனும் திருக்காட்சி கொடுத்த இடம் இதுதான்.
இங்கு அகத்திய முனிவருக்கு தனிக்கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் போது அகத்திய முனிவர் அவரது கோயிலில் இருந்து அழைத்து வரப்படுவார். அவர் வந்து சேர்ந்தபிறகுதான் அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெறும்.
நெல்லையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பாபநாசம் திருத்தலம்.
இத்தலம் மாணிக்கவாசகரின் (திருவாசகத்திலும்) திருவாக்கிலும் இடம் பெற்றுள்ளன.
பெரிய கோயில், கோயிலின் முன் தாமிரபரணி ஆறு (பொருநையாறு) அழகாகப் பாய்ந்தோடுகிறது. நீராடும் வசதியுள்ளது.
சந்தனச் சோலைகளும் மூலிகைகளும் நிறைந்து தென்றலின் பிறப்பிடமாய்த் திகழும் பொதியமலை உச்சியில் தாமிரபரணி உற்பத்தியாகின்றது.
ஆண்டு முழுவதும் இடையறாது பாய்ந்தோடும் தாமிரபரணியில் மூலிகைச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் அருவி வீழ்ச்சியில் நீராடுவோருக்கு உடல் நலத்தைத் தருவதாகச் சொல்லப்படுகிறது.
பெருமான் கல்யாண சுந்தரராக எழுந்தருளி அகத்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் திருமணக் கோலக் காட்சித் தந்தருளிய தலமிதுவாகும்.
தீர்த்தம் - தாமிர பரணி, வேத தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பைரவ தீர்த்தம் முதலியன. (இவற்றுள் கல்யாண தீர்த்தமும் பைரவ தீர்த்தமும் மலையுச்சியில் உள்ளன.
சுவாமிக்கு பாவநாசர், வைராசர், பழமறைநாயகர், முக்களாமூர்த்தி, பரஞ்சோதி எனப் பல பெயர்கள் சொல்லப்படுகின்றன.
தன்னையடைந்தாரது பாவங்களைப் போக்குபவர் - பாவநாசர்; விராட்புருடன் வழிபட்டதால் - வயிராசர்; மூன்று வேதங்களும் களாமரங்களாக நின்று வழிபட்டதால் - பழமறை நாதர், முக்களாமூர்த்தி; மேலான சோதி வடிவாக விளங்குபவர் - பரஞ்சோதி என்பன பெயர்க் காரணங்களாம்.
சுவாமியின் கர்ப்பக் கிருகத்தைச் சுற்றிலும் அருமையான வேலைப்பாடமைந்த மிக நுண்மையான சிற்பங்கள் காணப்படுகிறன.
இக்கோயிலில் எண்ணெய் சாதம் என்ற ஒருவகை பிரசாதமும், அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படுகிறது.
பங்குனியில் தெப்பத் திருவிழாவும், தேர்த் திருவிழாவும், சித்திரை முதல் நாள் அகத்தியருக்குத் திருமணக் காட்சி தரும் விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.
அகத்தியர் நீர்விழ்ச்சி இதன் அருகில் உள்ளது. நன்கு நீர் குளிக்க சிறந்த நீர்வீழ்சசி
அமைவிடம் ;திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தென்காசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு . வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக