வியாழன், 19 நவம்பர், 2015


தினம் ஒரு தேவாரம் / அப்பர் பிரான் பாடியது ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 1 பின்னணி சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் கட்டப்பட்டு, கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்ற திருப்பதிகத்தைப் பாடிய நிலையில் இருந்ததும், நமச்சிவாயப் பதிகம் என்று அழைக்கப்படும் இந்த பதிகத்தின் பாடல்களையும், சிந்தித்த வண்ணம், தினம் ஒரு தேவாரம் என்ற பகுதியை தொடங்கினோம். சிவபிரானின் அருளால், அவருடன் பிணைத்துக் கட்டப்பட்ட கருங்கல் கடலில் மூழ்காது தெப்பமாக மாற, கடலில் மிதந்து சென்ற அப்பர் பிரான், கடலூருக்கு அருகில் கரையேறவிட்ட குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்கின்றார். இப்போது இந்த இடத்தில் கடல் நெடுந்தூரம் பின்வாங்கி உள்ளது. கடலூர் நகரம் அந்நாளில் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கூறும் சேக்கிழார் பெருமானார், கருங்கல் சிவிகையாக (பல்லக்கு) மாறியது என்று குறிப்பிடுகின்றார். பாங்கர் என்றால் அருகில் என்று பொருள். வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்தடை கருங்கல்லே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்தருளிவித்தனன் பூந்திருப்பாதிரிப் புலியூர் பாங்கரில். கடலில் மிதந்து வந்த அப்பர் பிரானைக் கண்ட தொண்டர் கூட்டம், மிகுந்த ஆரவாரத்துடன் அர அர என்ற கோஷத்துடன் வரவேற்றது. தொண்டர்கள் மகிழ்ச்சியால் எழுப்பிய பேரொலி நடந்த அதிசயத்தை மற்றவர்களுக்கும் உணர்த்தியது. இந்த அதிசயம் அப்பர் பிரானின் வாழ்வில், அவரது உயிரினைப் காப்பாற்றுவதற்காக இறைவன் நிகழ்த்திய நான்காவது அதிசயமாகும். நீற்றறை குளிர்ச்சி அளித்தது, ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமாக மாறியது, தலையை இடற வந்த யானை, வலம் வந்து வணங்கியது ஆகிய மூன்று அதிசயங்களின் விவரங்களை, நாம் இந்த தொகுப்பினில் ஏற்கனவே அனுபவித்தோம். கடலில் மிதந்து வந்து கரையேறிய இந்த சம்பவம் இன்றும் ஒவ்வொரு வருடமும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. கரையேறிய அப்பர் பெருமான், சிவபெருமானின் கருணையை நினைந்து, தன்னை வரவேற்றத் தொண்டர்களுடன் அருகிலிருந்த திருக்கோயில் சென்று சிவபிரானை வணங்கி எழுந்தபோது அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொழுந்தகை = யாவராலும் தொழத்தக்க; கொழுந்து = இளைமையான தொழுந்தகை நாவினுக்கரசும் தொண்டர் முன் செழும் திருப்பாதிரிப் புலியூர் திங்கள் வெண் கொழுந்தணி சடையரைக் கும்பிட்டு அன்புற விழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார் பாடல் 1 ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த் தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே விளக்கம் ஏன்றுதல் = தாங்கிக்கொள்ளுதல். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப்போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக்கொள்ளத் தெரியாமல் தவித்தபோது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துனையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயானாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் பெயர். திருவாரூர் தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தில் (5.07), தனக்குத் தமக்கையாரைத் தந்து அருளியவன் என்று சிவபிரானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாய் தந்தையரை இழந்து தவித்த சமயத்தில், தன்னக்கு இனிமேல் அம்மை யார் என்று கலங்கி நின்ற நிலையில் அம்மையாராகிய திலகவதியைத் தந்து அருளினார் என்று நயமாக கூறுகின்றார். இந்த பாடல் கொக்கரை குழல் வீணை என்று தொடங்கும் பதிகத்தில் காணப்படுகின்றது. ஒரு தாய் தனது குழந்தையைக் காப்பாற்றுவது போல், திலகவதியார் அப்பர் பெருமானை காப்பாற்றினார் என்று இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. எம்மையார் இல்லை யானும் உளேன் அலன் எம்மை யாரும் இது செய வல்லரே அம்மை யார் எனக்கு என்று அரற்றினேனுக்கு அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள். அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே மணிவாசகப் பெருமானும் ஒரு திருவாசகப் பாடலில் (பிடித்த பத்து பதிகம் மூன்றாம் பாடல்) சிவபெருமானைத் தனக்கு அம்மை, அப்பன் என்று கூறுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே மூன்றாய் உலகம் படைத்து என்ற குறிப்பினுக்கு, கீழ்க்கண்டவாறும் விளக்கம் அளிப்பதுண்டு. பொதுவாக இந்த உலகத்தில் உள்ளவற்றை மூன்று வகைப் பொருட்களாக சைவ சித்தாந்தம் பிரிப்பதை உணர்த்தியதாக கூறுவார்கள். அவன் (இறைவன்), அவள் (அனைத்து உயிர்கள்) அது (உலகும் உலகத்தில் உள்ள பொருட்களும்). இவையே பதி, பசு, பாசம் என்றும் அழைக்கப்படும். உகந்தான் என்று சொல்லப் படுவதற்கு காரணம், உயிர்களை அவை செய்த வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தும் இறைவன், உயிர்கள் தங்களது மலத்தினை நீக்கிக்கொள்ளும் பொருட்டு பல கருவிகளை அளித்திருப்பதால், உயிர்கள் அந்த கருவிகளை பயன்படுத்தி மலநீக்கம் பெற்று தன்னை வந்து அடையும் என்ற ஆசை உள்ளவனாக இறைவன் இருக்கும் நிலைதான். இறைவன் உயிர்களை உடலுடன் பொருத்தியதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அனைத்து உயிர்களுக்கும் துணையாக உடனும் இருக்கின்றான் என்ற கருத்தினை உட்கொண்டு அடியோங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகின்றார்,. மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுவது போல், (ஓர்தல் = உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) தனது மனத்தில் இறைவன் இருப்பதை அப்பர் பிரான் உணர்ந்தமையால், மனத்துள் இருக்க என்று இங்கே குறிப்பிடுகின்றார். பொழிப்புரை எனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் எனக்குத் தோன்றும் துணையாக இந்த உலகத்தில் படைத்து உகந்தவரும், எனது மனத்துள் இருப்பவருமாகிய சிவபிரான் என்னைத் தனது அடிமையாக ஏற்றுத் தாங்குகின்றான். தேவர்களுக்கு மிகவும் இனிமையானவனாக இருக்கும் சிவபிரான் தனது அடியார்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குகின்றான். திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை. பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக