வியாழன், 19 நவம்பர், 2015


தினமும் ஒரு திருவாசகம் / மாணிக்கவாசகர் அருளியது திருப்பள்ளி எழுச்சி பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. 129 பாடலின்பம் போற்றி என் வாழ்முதல்ஆகிய பொருளே, புலர்ந்தது, பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில்நகை கண்டுநின் திருவடி தொழுகோம், சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ் திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே, ஏற்றுஉயர் கொடிஉடையாய், எமைஉடையாய், எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே. * அருணன் இந்திரன் திசை அணுகினன், இருள்போய் அகன்றது, உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அம்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன, இவைஓர் திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே, அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே. பொருளின்பம் என் வாழ்வில் அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானே, உன்னைப் போற்றுகிறேன், பொழுது புலர்ந்துவிட்டது, உன்னுடைய பூப்போன்ற திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்குகிறோம், உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலரும் அழகிய புன்னகையைக் கண்டு உன்னுடைய திருவடியைத் தொழுகிறோம், சேற்றில் தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, இடபக்கொடியை உடையவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எம்பெருமானே, பள்ளிஎழுந்தருள்வாய்! * இந்திரனுக்கு உரிய கிழக்குத் திசையில் சூரியன் தோன்றினான், இருள் விலகியது, எம்பெருமானே, சூரியன் மேலே எழ எழ, உலகில் வெளிச்சம் பரவுகிறது, உனது மலர்த் திருமுகத்தில் தோன்றும் கருணையைப்போல, அது எங்களை வாழவைக்கிறது, ஒருபக்கம் உன்னுடைய கண்களைப் போன்ற மலர்கள் நறுமணத்துடன் மலர்கின்றன, இன்னொருபக்கம் உன்னுடைய கண்களைப்போன்ற வண்டுகள் கூட்டமாகத் திரண்டு வந்து ஓசையிடுகின்றன இத்தகைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அருள்நிதியைத் தருவதற்காக வரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளிஎழுந்தருள்வாய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக