தினம் ஒரு திருப்புகழ்
அருணகிரியார் பாடிது (பொது)
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ...... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் ...... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
வாராய் பேதாய் கேளாய் ... ஏ பேதை மனமே, வருவாயாக, நான்
சொல்லுவதைக் கேட்பாயாக.
நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது
ஊடே பாராய் ... நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள
மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல்,
உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக.
மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய் ... மாறாத
ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை
ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக.
பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய் ...
பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப்
பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை
ஆள்வாயாக.
நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார்
தாம் ... நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி
வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்?
தோரா வானோர் சேனை ஆதாரா ... தோல்வியே அறியாதவனும்,
தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே,
சூரா சாரல் புனம் மாது தோள் தோய் தோள் ஈராறா ...
சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின்
தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே,
மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே
வேலாலே சேதித்திடும் வீரா ... பெரிய சூரன் பொடிபட்டு விழ,
சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய
வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே,
சேயே வேளே பூவே கோவே ... சிவபெருமானின் குழந்தையே,
செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே,
தேவே தேவப் பெருமாளே. ... தேவனே, தேவர்களுக்கெல்லாம்
பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக