திங்கள், 2 நவம்பர், 2015

நாட்டில் நீர்வளம் செழிக்க, நல் நட்புக் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்


நாட்டில் நீர்வளம் செழிக்க, நல் நட்புக் கிடைக்க ஓத வேண்டிய பதிகம் சுந்தரரர் பெருமானார் திருவையாற்றில் பாடியது முன் மொழிதல் ; ஆருர் நம்பியும், சேரமான் பெருமாள் நாயனாரும், இனிய நண்பர்களாகப் பழகினார்கள். அது ேபாது பல தலங்களுக்கு இருவரும் சென்று பதிகங்கள் பாடி வணங்கினர். திருக் கண்டியூர் வணங்கி வெளியே வரும் பொழுது திருவையாறு திருக்கோவில் ராசகோபுரம் எதிர்தோன்ற சேரமான் பெருமான், திருவையாறு கோவில் சென்று இறைவனை பணிய வேண்டு ெமன்று கூறுதலும் ஆற்றில் ஓடம் முதலியவை செல்லாதபடி காவிரிப் பெருவெள்ளம் விலகி குளிர்ந்த மணலை பரப்பி வழிவிட, இருவரும் இறைவனின் கருணையை எண்ணி மகிழ்ந்து சென்று வழிபட்ட தலமாகும். அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனாய அருள்மிகு ஐயாறப்பர்( பஞ்சநதீஸ்வரர்) திருவடியை வணங்கி இப்பதிகத்தை ஓதினால் நீர் வளம் குறையாது, நல்ல நிலவளம் பெறவும் நல்ல நண்பர்கள் வாய்க்கப் பெற்று வளமான வாழ்வு பெறலாம், இருவரையும் சிவபெருமானார் அறிமுகம் செய்து வைத்து நல்ல உற்ற நண்பர்களாக்கினார். இதை உணர்த்தும் சேக்கிழார் பெரிய புராண பாடல் ; " செஞ்சொ்ற் றமிழ் நாவலர் கோனும் சேரர்பிரானும் தம்பெருமான் எஞ்ச லில்லா நிறையாற்றின் இடையே அளித்த மணல்வழியில் தஞ்சமுடைய பரிசனமும் தாமும் ஏறித் தலைச் சென்று பஞ்சநதி வாணரை பணிந்து விழுந்தார் எழுந்தார் பரவினார்" ` நம்மைச் சொற்றமிழ் பாடுக ` என்றும் ( தி.12 தடுத். புரா.70.). ` இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு ` என்றும் ( தி.12 தடுத். புரா.76.). ` ஆரூரில் வருக நம்பால் ` என்றும் ( தி.12 தடுத். புரா. 108). ` மழபாடியினில் வருவதற்கு நினைக்க மறந்தாயோ ` என்றும் ( தி.12 ஏ. கோ. புரா.72.). ` கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான் ` என்றும் ( தி.12 ஏ. கோ. புரா. 102.) பலவாறு நீர் பாடுவிக்கவே ஆங்காங்கும் வந்து பாடினேன் என்பார், ` பரவும் பரிசொன்றறியேன் ` என்றும், ` என்னையே துணையாகப் பற்றிநிற்கும் சேரமான் பெருமாளை வேறோராற்றால் முன்பே உம்மை வழிபடு வியாது ஒழிந்தேன் ` என்பார் ` பண்டே உம்மைப் பயிலா தேன் ` என்றும், ` எய்த நினையமாட்டேன் ` என்றும் அருளிச் செய்தார். முன்பு தாம் தனித்துச் சென்று வழிபட்டாராகலின், ( தி.12 ஏ. கோ. புரா.71.) சேரமான் பெருமாளோடு மீளச் செல்லாமையை, ` பயிலாதேன் ` என்றார் என்க. ஓலமிடுவாரைத் தாங்குவார் கொடுக்கும் எதிர்மொழியும், ` ஓலம் ` என்பதேயாகலின் இத் திருப்பதிகத்தைக் கேட்டருளிய இறைவனும், ` ஓலம் ` என்றான் என்க இப்பதிக பாடல்கள் சில ; பாடல் எண் : 1 பண் : காந்தார பஞ்சமம் பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொருள் ; கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன் ; இரவும் பகலும் உம்மையே நினைவேன் ; என்றாலும், அழுந்த நினையமாட்டேன் ; ஓலம்! பாடல் எண் : 2 எங்கே போவே னாயிடினும் அங்கே வந்தென் மனத்தீராய்ச் சங்கை யொன்று மின்றியே தலைநாள் கடைநா ளொக்கவே கங்கை சடைமேற் கரந்தானே கலைமான் மறியுங் கனல்மழுவும் தங்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : அடியேன் எங்கே செல்வேனாயினும் , முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக , சிறிதும் ஐயம் இன்றி , அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய் , சடைமேற் கங்கையும் , கையில் மானின் ஆண் கன்றும் , சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற , அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம் ! பாடல் எண் : 3 மருவிப் பிரிய மாட்டேன் நான் வழிநின் றொழிந்தேன் ஒழிகிலேன் பருவி விச்சி மலைச்சாரற் பட்டை கொண்டு பகடாடிக் குருவி யோப்பிக் கிளிகடிவார் குழல்மேல் மாலை கொண்டோட்டம் தரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : நீர் , பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு , யானைகளைப் புரட்டி , புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும் , காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள் , யான் , சிலர்போல , உறுவது சீர் தூக்கி , உற்ற வழிக்கூடி , உறாதவழிப் பிரியமாட்டேன் ; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன் ; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன் ; ஓலம் ! பாடல் எண் : 4 பழகா நின்று பணிசெய்வார் பெற்ற பயனொன் றறிகிலேன் இகழா துமக்காட் பட்டோர்க்கு வேக படமொன் றரைச்சாத்திக் குழகா வாழைக் குலைதெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : வாழைக் குலைகளையும் , தென்னங் குலைகளை யும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய , காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் , உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே , நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்தஉடுத்து நிற்றலால் , உம்மை அணுகிநின்று உமக்குப் பணி செய்பவர் , அதனால்பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன் ; ஓலம் ! பாடல் எண் : 5 பிழைத்த பிழையொன் றறியேன்நான் பிழையைத் தீரப் பணியாயே மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனுங் கொள்ளாமைக் கழைக்கொள் பிரசங் கலந்தெங்குங் கழனி மண்டிக் கையேறி அழைக்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட , மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி , மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று , வயல்களில் எல்லாம் நிறைந்து , வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய , காவிரி யாற்றங் கரைக்கண் உள்ள திருவை யாற்றை உமதாகிய உடைய அடிகேள் , அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன் ; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின் , அது நீங்க அருள்செய் ; ஓலம் ! தாம் விரும்பியவாறே சென்று வணங்கல் இயலாத வாறு காவிரியில் நீர்ப்பெருக்கை இறைவர் நிகழ்வித்தார் என்று கருதி இவ்வாறு வேண்டினார் . பாடல் எண் : 9 கதிர்க்கொள் பசியே யொத்தேநான் கண்டே னும்மைக் காணாதேன் எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் றம்மான் தம்மானே விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : என் தந்தை தந்தைக்கும் பெருமானே , மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய , காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , நான் உம்மை , பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன் ; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனா யினேன் ; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன் ; ஓலம் ! பாடல் எண் : 10 கூசி அடியார் இருந்தாலுங் குணமொன் றில்லீர் குறிப்பில்லீர் தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனுங் காண்கிலார் தேசம் எங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும் வாசந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ ! பொழிப்புரை : நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு , தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள் , அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும் , நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர் ; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர் ; உம்மை , உலகிற்குத் தலைவனாகிய திருமாலும் , தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர் ; பிறர் எங்ஙனங் காண்பார் ! ஓலம் ! முன்னைத் திருப்பாடல்காறும் இறைவர் யாதும் அருளாமையின் , இத் திருப்பாடலில் நம்பியாரூரர் அவரை இவ்வாறு நெருங்கி வேண்டினார் என்க திருச்சிற்றம்பலம் தொகுப்பு ;வை. பூமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக