தினமு்ம் ஒரு திருவாசகம்
மாணிக்கவாசக சுவாமிகள் பாடியது
இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.
இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
வேதமொழியர், வெண்ணீற்றர், செம்மேனியர்,
நாதப்பறையினர் அன்னே என்னும்,
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இந்நாதனார் அன்னே என்னும்.
*
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள்நின்று உருக்குவர் அன்னே என்னும்,
உள்நின்று உருக்கி உலப்புஇலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
பொருளின்பம்
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவன் வேதத்தின் பொருளானவன், வெண்ணீறு பூசியவன், செம்மேனி கொண்டவன், நாத தத்துவப் பறையைக் கொண்டவன், பிரம்மன், திருமாலுக்கும் நாதன் அவன், எனக்கும் அவனே நாதன்’ என்கிறாள்.
*
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் கண்ணில் கருஞ்சாந்து பூசியவர், கருணைக் கடலானவர், உள்ளே நின்று உருக்குகிறவர், அதன்மூலம் அழிவில்லாத ஆனந்தக் கண்ணீரைத் தருகிறவர்’ என்கிறாள்.
சொல்லின்பம்
அன்னே: அன்னையே , நாதர்: தலைவர் ,அஞ்சனம்: சாந்து
உலப்பு: அழிவு ,
தருவரால்: தருவார்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக