ஞாயிறு, 1 நவம்பர், 2015


தமிழ் வளர்த்த சமயக்குறவர்கள் நம் தாய் ஆம் தமிழ் மொழி கல்தோன்றி மண்தோன்றக்காலத்திலேயே தோன்றியது என பெருமை பெற்றுக் கொள்கிறோம். பண்டைக்காலத்திலேயே தமிழை வளர்த்த பெருமை சைவ மதத்திற்கும் உண்டு. சமயத்தை வளர்க்க ஒரு மொழி தேவை என்றாலும், அக்காலத்தில் வேதங்கள் யாவும் சமஸ்கிருதத்தில் இருந்தாலும் அதன் உள்பொருளை தமிழுடன் சைவ மதத்தை பரப்பிய நம் சமய குறவர்கள் மற்றும் சிவனாடியார்கள், மற்றும் பன்னிரு திருமுறை இயற்றிய ஆசிரியர்களின் பங்கு அளவிடக்கறியது. அவரகளின் சொல் நயம் இறைவனே வந்து அடியேடுத்துக் கொடுத்து தன்னையும், தமிழையும் பாடிய பாட்டுகள் அற்புத செயல்களை செய்தவை என்பதை யாவரும் அறிவர். அவர்களின் சமயத் தொண்டிற்கு தமிழ் உற்ற துணையாக இருந்தாலும், அவர்களால் தமிழ் இமலய வளர்ச்சி பெற்றதென்றால் மிகை ஆகா. தில்லையில் திருவாசகப் பாடல்களை மாணிக்க வாசகர் பாட தில்லை நடராஜ பெருமான் தன் கைப்பட ஓலைகளில் எழுதி வைத்துச் சென்ற " அழகிய சிற்றம்பல முடையான் " என்று இறைவனே எழுதி கைச்சாத்திட்ட திருவாசக ஏடு இன்றும் புதுச்சேரி அம்பலத்தாடி மடத்தில் பூசையில் உள்ளதை நாம் காணலாம். இறைவரால் எழுதப்பட்ட இந்த ஏடுகள் தமிழுக்கு இறைவர் தந்த மேன்மை. இறைவரையும் ஈர்க்கும் தன்மை தமிழுக்கு உண்டு. மேலும் இறைவர் திரு ஆலவாய் உடையான் சொக்கநாதப் பெருமான் திருவிளையாடல் புராண வரலாற்றில் ஏழை தருமிக்கு உதவி செய்வதற்காக தானே பாடல் எழுதி தமிழ் சங்கத்தில் அரங்கேற்றியதும், பன்னிரு திருமுறைகளில் 9ம் திருமுறையில் , மதுரையில் தன்னை அனுதினமும் அன்புக்கடல் பாடலகளால் பாடும் பாணபத்திரர் என்ற பாடகருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து உதவி செய்வதற்கு தானே ஏழுதிய கவிதை மடல் " மதிமலி புரசை "என்று சேரமான் பெருமானுக்கு ஏழுதிய தமிழ் கவிதை பன்னிரு திருமுறைகளில் அவரின் தமிழ் மேல் கொண்ட அன்பு வெளிப்படும். எனவே தமிழ் வளர்த்த பெருமை மதுரை ஆலவாய் சுந்தரர் சொக்கநாதர் அவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதை உணரலாம். சமயத்தை வளர்க்கும் சமய சான்றோர்கள் இறைவரை வசப்படுத்த இனிய இசையாலே முடியும் என்பதை உணர்ந்து இசையாலே இறைவனைக் கவர்ந்தார்கள். இந்த இசை சுருதியோடு கலந்து மனதைக் கவர அதற்கு உறுதுணைாக விளங்கியது தமிழ் மொழியே எனவே சமய சான்றோர்கள் தமிழ் திருப்பாடல்களாக பாடி இறைவனை நேசித்து அவரை தன்பால் ஈர்த்தார்கள். இசை என்பது இசைப்பது ஒருவரது எண்ணங்களை கருத்துக்களை அறிவியலை மற்றொரு வருடைய கருத்தாகியஅறிவுடன் இசைவிப்பது. அறிவே இயற்றமிழ், அவ்வறிவை இசைப்பாடல்களால் மற்றவருக்கு இசைவிக்கும் பாடல்களே இசைத்தமிழ் பாடல்களாகும். நடிப்பால், மெய்பாட்டால், அறிவை புரிந்து கொள்வதற்கு இைச்பாடல்களம், நாடகமும் துணைபுரிவன. இசைத்தமிழும் நாடக் தமிழும், இயலாகிய அறிவியலைத் தொல்காப்பியர் காலம் கி,மு. மூவாயிரம் முதல் இன்று வரை வளர்த்து வந்துள்ளது. அந்த பெருமை செந்தமிழ் நம் தமிழுக்கே பெருமை. காமத்தை வளர்ப்பதே இசை என்ற சமணர்கள் வாதத்தையும் கடந்து நமது சைவ சமயாச்சாரியர்கள் இசைப்பாடல்களாலேயே சைவத்தை, சிவ பக்தியை வளர்த்தனர். இசையையும் நாடங்களையும் பயன்படுத்துவோரை பொறுத்து பயன்களும் விளையும் இக்கருத்தை தெளிக்க நீதி வெண்பா பாடல் ஒன்றில் அறியலாம். "வல்லவர் பாற் கல்வி மதமா ணவம் போக்கும் அல்லவர் பாற் கல்வி யவையாக்கும் ... நல்லிடத்தில் யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் போகம் பயில்வார் புரிந்து .... நீதி வெண்பர் எனவே சைவர்கள் , சைவக் கருத்துக்களையும், தத்துவ அறிவியலையும் வளர்ப்பதற்கு தமிழோடு இசைக்கலையை பெரிதும் பயன் படுத்தியுள்ளார்கள். இந்த நிலை கி.பி. 3ம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது என்பதை அவர்தம் தமிழ் இசைப்பாடல்கள் நமக்கு முன் உதாரணமாக திகழ்கின்றன என்பதை அறியலாம். கி.பி ஏழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் நரசிம்ம வர்மன் காலத்தில் 24 பண்கள் வாயிலாக தேவாரமாகிய இசைத்தமிழை திரு ஞானசம்பந்தர் வளர்த்தார். கி,பி. 9ம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் வாழ்ந்த திருமாளிகைத்தேவர் முதல் சேதிராயர் ஈறாக திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் ஒன்பதிமர், புறநீர்மை, காந்தாரம், சாளரபாணி,நட்டராகம், பஞ்சமம், இந்தளம் முதலிய ஆறு பண்களால் இசைத்தமிழைபுயம் இன்னுயிரான சைவத்தையும்வளர்த்தனர். இறைவனே ஏழிசையும், இசைப்பயாயும் இருக்கின்றான் என்பார் சுந்தரர், கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகவும், பண் ஒன்றை இசைபாடும் அடியார்கள் குடியாக திருபுள்ளிருக்குவேளூரில் இருப்பவன் என்று சம்பந்தரும் " நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகி ( அபிராமி அந்தாதி பாடல் 49) என்று அபிராமி அம்மையை அபிராமி பட்டரும் போற்றி உள்ள திறத்தால் தமிழும் , இறையும், இசையும் இசைந்துள்ள பாங்கை நாம் நன்கு உணரலாம். ஒரு மொழி வளர்ந்து செழித்தோங்க கவிதை நயம் மட்டும் போதாது. அதன் எதுகை மோனை கொண்டு கவிதையும், கொச்சை மொழியில் இயல் என்ற பேச்சு வடிவு மட்டும் போதாது. அது படிப்பதறகு சுவையாக இருக்கலாம், ஆனால் அதன் உட்கருத்து யாரையும் ஈர்க்கும் தன்மை அற்றது. அதன் வளர்ச்சி அதனால் மக்களுக்கு கிடைக்கும் போதனை அதன் கொண்டு மக்களை கவரும் இனிய இசை அதன் பிரதிபலிப்பு இதனால்தான் அந்த மொழி சிறப்படையும், இதனைத்தான் செய்தார்கள் நம் சமயக் குறவர்கள் நால்வர் மற்றும் பன்னிரு திருமுறை சான்றோர்கள். அவர்கள் பாடிய தமிழ் இசைப்பாடல்கள் சமயத்தையும் அக, புற வாழ்விற்கு அறிவுரை கூறும் கருத்துக் களை பிரதி பலிக்க வேண்டும் அப்போதுதான் அம்மொழி செம்மொழியாக வளரும், எக்காலத்திலும் எவ்வினத்தவரும் கவரும் தன்மை பெறும். நம் பண்டை சமய இலக்கியங்களான பன்னிரு திருமுறைகளில் இல்லாத கருத்துக்களே இல்லை எனலாம், அக புற வாழ்விற்கும், மருத்துவம், மற்றும் இறைவழிக்கும் வழிவகை கூறுபவன இந்த திருமுறை பாடல்களே. அந்த வகையில் பன்னிரு திருமுறைகள் சைவ மதத்தை பரப்ப , வளர்க்க தோன்றியதாக இருந்தாலும் அதற்கு முழு வலுவூட்ட பயன் பட்டதே தமிழ் மொழியே . என்னதான் இறைவழிபாட்டிற்கு இறைவேதங்கள் சமஸ்கிருத்தை அடிப்படையாக பயன் படுத்திய காலத்திலேயே தமிழே இறைவழிபாட்டிற்கு முதன்மை படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழையே கடைப்பிடித்தனர் நம் சைவ சான்றோர்கள். இதனால் பிற எதிர் மதங்களுடன் போட்டி போட்டு சைவ மதங்களும் வளர்ந்தது நம் தமிழும் பெருமை பெற்றது. பன்னிரு திருமுறைகளாகிய செந்தமிழ் மந்திரங்கள் அளவிடற்ககரியன. செந்தமிழ் மந்திரஙகள் ஓதும் அடியவர்கள் மீது தீவினைகளால் வரும் துன்பங்கள் வாராது தடுப்பவன் சிவபெருமான் ஒருவரே. ஏனனெின் அவனுக்கு தமிழ்மீது கொண்ட ஈர்ப்பு. திருஞானசம்பந்தரின் முதல் பாடலில் " தோடுடைய செவியன் " என்று ஆரம்பித்துதன் பெருமையை சிறப்பிக்கவும், சிவனடியார்களின் வரலாற்றை உணர்த்த எழுதப்பட்ட பெரியபுராணம் தந்த சேக்கிழார், தமிழக்கும், ஓம் என்ற பிராணவ மந்திரத்தையும் இணைத்து "உலகெலாம்" என முடித்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளதை நாம் காணலாம். தேவாரம் என்றாலே தே - ஆரம் தெய்வத்தன்மை கொண்ட பாமாலை கொண்டது என்னும் பொருள்பட அமையப்பட்டது. பன்னிரு திருமுறைகளில் 9வது திருமுறை செந்தமிழ் திருவிசைப்பா என்பதாகும். 10வது தமிழ் முறை இதுவே தமிழ் கூறும் மந்திரமும் தந்திரங்களும் வைதிக, வேதிக, மருத்துவ முறைகளை கூறும் நூல். தமிழ் மணம் கொண்டு தனிச் சிறப்பு பெற்றது. 12 வது திருமுறையான பெரியபுராணம் சிவனடியார்கள் வரலாற்றுடன், சோழவள நாட்டின் சிறப்பு மற்றும் செங்கோல் மாட்சி பற்றியும் தன் சீர் தமிழால்பாடியுள்ளார் சேக்கிழார் பெருமானார். சுந்தரர் செந்தமிழ் பாட மாண்டவன் ( அவிநாசியில் முதலை உண்ட பார்ப்பன சிறுவன்) மீண்டான், எரிக்கப்பட்ட அங்கம் திருஞானசம்பந்தரின் பசுந்தமிழால் பூம்பாவைப் பெண்ணாக உருக்கொண்டு மீண்டு வந்தது. திருமறைக்காட்டில் பூட்டிய திருக்கோவில் கதவம் திறக்க திருநாவுக்கரசு நாயனார் செந்தமிழ் பாடித்திறக்கச் செய்தார். திறந்த திருக்கதவும் திருக்காப்பிடவும் திறக்கவும், ஆளுடைய பிள்ளையார் செந்தமிழ் மந்திரமாக செப்புகிறார். இவை யெல்லாம் கன்னித்தண்டமிழ்ச் சொல் என்று சிறப்பித்தமை யாகும். எனவே செந்தமிழ் மந்திரங்களை ஓதியும் படித்தும் பயன் ெப்ற்றோர் பலர் உண்டு காணலாம். திரு ஞானசம்பந்தர் பெருமான் தன்னுடைய பதிகப்பாடல்கள் அத்தனையிலும் கடைசி பாடலில் தன்னுடைய பெயரையும் தமிழின் பெருமையுடன் இப்பாடல்கள் ஓது நலம் பெறும் முறையினை கூறுவார். உதாரணமாக சில வரிகளை காணலாம். திருவெண்காடு பதியத்தில் "பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் வான் பொலியப்புகுவாரே" " ஞான சம்பந்தன் செந்தமிழ் சொல வலாரவர் தொல்வினை தீருமே" " ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே" "வண்தமிழ் கொண்டு இன்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே " " சூலப்படையானை சொன்ன தமிழ்மாலை கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே" " தண்டமிழ் கொண்டிவை ஏத்த சாரகிலா வினை தானே" "அற்றமிழ் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து உற்றன வல்லவர் உம்பராவரே." இது போல சுந்தரர் தன் பாடலில் " நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் நன்னெறி உலகெய்துவர்தாமே." இது போன்று தமிழ் பெருமை பெற தமிழ் தேவாரப் பாடல்கள், திருமுறைப்பாடல்களால் தமிழ் வளர்ந்தது என்பது நமக்கு தெளிந்த நீர் போல் காணலாம். திருச்சிற்றம்பலம் தொகுப்பு : வை. பூமாலை, மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com http://vpoompalani05.blogspot.in/ http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக