வியாழன், 28 ஜனவரி, 2016

அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்

அன்றாட வாழ்விற்கு திருமுறைப் பாடல்கள்

பிறப்பில் அரிது மானடப் பிறப்பு. இந்தியாவில் பிற்பதற்கே ஒரு புண்ணியம் வேண்டும். அதிலும் தமிழகத்தில் இந்துவாக சைவ சமயத்தில் பிறப்பது என்பது பல பிறவிப் புண்ணியமாகும்.
1, சைவர்கள் காலையில் எழும்போது " சிவாய நம " என்று சிந்தித்தவாறு எழுதல் வேண்டும் என்கிறார் சிவமாய் தன்மையைப் பெற்ற திருநாவுக்கரசர் சுவாமிகள்
" சித்தமாரத் திருவடியே உள்கி நினைந்தெழுவார்
உள்ளம் ஏயவன் காண் " அப்பர் சுவாமிகள் தி.மு. 6

2. சிவாயநம என்று சிந்தித்தவாறு எழுந்து, கைகால் சுத்தம் செய்து,பல் துலக்கி, முகம் கழுவி, சிவாயநம் என்று சொல்லி திருநீறு நெற்றியில் அணிதல் வேண்டும். பிறகு குவளை நீர் அருந்த வேண்டும்.
3. உள்ளங்கையில் உளுந்து மூழ்கும் அளவு தண்ணீர் எடுத்து சிவாயநம என்று பத்து முறை சொல்லி தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்
4. ஒரிடத்தில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும். அமர்ந்து கீழ்க்காணும்பாடல்களை வாய்விட்டு பாட வேண்டும்.

சமயக்குருமார்கள் நால்வரை நினைந்து பாடவேண்டிய பாடல்

" பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி
வாழி திருவாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி " பெரிபுராணம்

சிவபிரானை நினைந்து பாடவேண்டிய பாடல்

" படைக்கலமாக உன் நாமத்தெழுத்து அஞ்சு என்நாவிற் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன்
அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே. திருநாவுக்கரசர்

இப்பாடலை பாடி முடித்தவுடன் 108 முறை ஆதி மந்திரமாகிய " சிவாய நம " என்ற சொல்ல வேண்டும்

குளிக்கும் போது பாடவேண்டிய பாடல்

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துகத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்கும் ஐயாறன் அடித்தலமே. திருநாவுக்கரசர்

சிவ பூசையின் போது பாடவேண்டிய பாடல்

"புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என்மனத்தே
வழுவாதிருக்க வரந்தர வேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்பாதிரிப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே. திருநாவுக்கரசர்

சாப்பிடும் முன்பு ( சிவபிரானுககு அர்ப்பணம் செய்து விட்டு உண்பது ) அருந்தமிழ் பாடல்

" அடியனேன் அறிவிலாமை கண்டும் என்அடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்து இங்கு அமுதுசெய் பரனே போற்றி
துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி ! பெரியபுராணம் 12

விளக்கு ஏற்றும் போது பாடவேண்டிய பாடல்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே. நாவுக்கரசர்

விளக்கை ஏற்றி பிறகு பாடி வணங்கவேண்டிய பாடல்

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவர்பளிங்கின் திரள் மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்த கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவவளர் தெய்வக் கூத்துக ந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே " திருவிசைப்பா தி.மு. 9

உறங்க செல்வதற்கு முன் பாடவேண்டிய பாடல்

" மஞ்சனே மணியுமானாய் மரகத் திரளுமானாய்
நெஞ்சளே புகுந்து நின்று ளநினைதரு நிகழ்வினானே
துஞ்சம் போதாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சல் என்று அருள வேண்டும் ஆவடு துறையுளானே. " திருநாவுக்கரசர் தி..மு. 4

படுக்கைக்கு செல்லும் முன்பு நம் உயிரை இறைவருடைய திருவடிக்கீழ் வைத்து விட்டு செல்ல வேண்டும்.
மிக அருமைப்பாடுடையது இப்பாசுரம் தமிழ் மக்கள் செய்த தவத்தின் பயனாய் இதுபோன்ற அரிய பாடல்கள் நமக்குகிடைத்துள்ளன.

மற்றவர்களை வாழ்த்தும் போது பாட வேண்டிய பாடல்

" மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதும்ஓர் குறைவிலைக்
கண்ணில் நல்லஅஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே. ஞானசம்பந்தர்

உலகம் நலம் பெற பாடவேண்டிய தீந்தமிழ் பாடல்

வையம் நீடுக மாமழை மண்ணுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறிதாம் தழைத்து ஓங்குக
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே, " பெரியபுராணம் 12

இப்பாடல்களை பாடுவதன் மூலம் நாம் நலமாக வாழ்வோம். உலகம் நலம்பெற வேண்டும் என எண்ணும் பொழுது நாம் நலமாக வாழ்வதற்கு இறையருள் முன்நிற்கும்..
திருச்சிற்றம்பலம்
நன்றி : தமிழ் வேதம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக