புதன், 6 ஜனவரி, 2016


தேவையா இந்த ஆடம்பரம்? சிதம்பரத்தில் வசித்த தில்லை வாழ் அந்தணரான உமாபதி சிவாச்சாரியார். செல்வாக்கு மிக்கவர். ஒருநாள் அவர் நடராஜருக்கு பூஜை செய்து விட்டு பல்லக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பல்லக்கின் முன் தீவட்டியுடன் பணியாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் என்பவர் இதைக் கண்டு சிரித்தார். உமாபதி சிவாச்சாரியாரின் காதில் விழும் படி, ""பட்ட மரத்தில் பகல் குருடு போவதைப் பார்' என்று கத்தினார். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "பட்டமரம்' என்றால் மரக்கட்டையில் செய்த பல்லக்கு. பகலில் நல்ல வெளிச்சம் இருந்தாலும், சுவாமி பல்லக்கில் திருவீதி உலா செல்லும் போது மரியாதை கருதி தீவட்டி பிடிப்பர். அதுபோல், சிவாச்சாரியாரும் தன்னை உயர்ந்தவராகக் கருதிக் கொண்டு, பல்லக்கில் பவனி சென்றதுடன், மரியாதைக்காக தீவட்டியும் பிடிக்கச் செய்திருந்தார். "தெய்வத்துக்குரிய மரியாதை மனிதனுக்கு தேவையா?' என்பதே சம்பந்தரின் கேள்வியில் இருந்த கருத்து. இதைக் கேட்ட சிவாச்சாரியார் பல்லக்கில் இருந்து இறங்கி, மறைஞான சம்பந்தரின் காலில் விழுந்தார். ""சுவாமி! அடியேனை தங்களின் மாணவராக ஏற்க வேண்டும்,'' என்று வேண்டினார். மறைஞான சம்பந்தரோ அவரிடம் ஏதும் பேசாமல், அங்கிருந்து நடக்கத் தொடங்கினார். சிவாச்சாரியாரும் அவரைப் பின்தொடர்ந்தார். செல்லும் வழியில் மறைஞான சம்பந்தர், ஒரு வீட்டின் வாசலில் நின்று பிச்சை கேட்டார். அந்த வீட்டார் அளித்த கூழை "சிவ பிரசாதம்' என்று சொல்லி கைகளில் ஊற்றச் சொல்லிக் குடித்தார். அப்போது அவரது கைகளில் இருந்து கீழே வழிந்த கூழை உமாபதி சிவாச்சாரியார் "குரு பிரசாதம்' என்று சொல்லித் தானும் குடித்தார். இதன் பின், மறைஞான சம்பந்தர் உமாபதி சிவாச்சாரியாரை தன் சீடராக ஏற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக