புதன், 6 ஜனவரி, 2016

இறையும் இசையும்


இறையும் இசையும் இசை என்பது இசைப்பது என்னும் பொருளையுடையது. ஒருவரது எண்ணங்களை , கருத்துக்களை, அறிவியலை மற்றொரு வருடைய கருத்தாகிய அறிவுடன் இசைப்பது. அறிவே இயற்றமிழ், அவ்வறிவை இசைப்பாடல்களால் மற்றவருக்கு இசைவிக்கும் பாடல்களே இசைத்தமிழ் பாடல்களாகும். நடிப்பால் மெய்ப்பாட்டால் அறிவைப் புரிந்து கொள்வதற்கு இசைப் பாடல்களும் நாடகமும் பெரிதும் துணைபுரிவன. இசைத்தமிழும் நாடக் தமிழும் இயலாகிய அறிவியலைத் தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை வளர்த்து வந்துள்ளது. காமத்தை வளர்ப்பதே இசை என்ற சமணர்கள் வாதத்தையும், கடந்து நமது சைவ சமயாச்சாரியார்கள் இசைப் பாடல்களாலேயே சைவத்தை , சிவபக்தியை வளர்த்தனர். இசையையும் நாடங்களையும் பயன்படுத்துவோரைப் பொறுத்து ப் பயன்களும் விளையும் . இக்கருத்தைத் தெளிவிக்க நீதி வெண்பாவில் ஒரு பாட்டு உண்டு. " வல்லவர்பாற் கல்வி மதமா ணவம் போக்கும் அல்லவர்பாற் கல்வி யவையாக்கும் - நல்லிடத்தில் யோகம் பயில்வார் உயர்ந்தோர் இழிந்தோர்கள் போகம் பயில்வார் புரிந்து. நீதி வெண்பா - 70 எனவே சைவர்கள்,சைவக் கருத்துக்களையும் தத்துவ அறிவியலையும் வளர்ப்பதற்கு இசைக்கலையைப் பெரிதும் பயன் படுத்தி கொண்டார்கள். இந்நிலை கி.பி. 3ஆம் நூற்றாண்டு காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. அவர் தான் தமிழ் இசைப்பாடல்களின் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். கி.பி. 7ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இசைத்தமிழை திரு ஞானசம்பந்தர் வளர்த்தார். ஏறத்தாள பத்தாம் நூற்றாண்டின் இறுதிவரை வாழ்ந்த திருமாளிகைத்தேவர் முதல் சேதியாராயர் வரை திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் இசைத்தமிழையும் இன்னுயிரான சைவத்தையும் வளர்த்தனர். இறைவனே ஏழிசையாயும், இசைப்பயனாயும் இருக்கின்றான் என்பார் சுந்தரர், கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகவும், பண் ஒன்றே இசைபாடும் அடியார்கள் குடியாக திருபுள்ளிருக்கு வேளூரில் இருப்பவன் என்று சம்பந்தரும், " நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகி " (அபிராமி அந்தாதி 49,) என்று அபிராமி அம்மையை அபிராமிப் பட்டரும் போற்றியுள்ள திறத்தா, இறையும் இசையும் இசைந்துள்ள பாங்கை நாம் உணரலாம். சைவ மதத்தினர் மட்டுமன்றி வைணவ அடியவர்களும் இசை மூலம்இறைவரை கவர்ந்தள்ளனர். ஆண்டாள் பாடிய திருப்பாவை இறைவரின் அவதாரமாகிய ஆண்டாள் நாச்சியாரே இசையைப்பாடி இறைவரைக் கவர்ந்துள்ளார் என்பது யாவரும்அறிந்ததே. இறைவர் துயில் எழுப்ப திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் இணைபிரியாத தன்மையினை விளக்கும், இறைவன் அந்தணன் உருக்கொண்டு மாணிக்கவாசகரிடம் வந்து, திருவாசகம் முழுவதையும் மாணிக்கவாசகர் சொல்லி பாட ஏடும் எழுத்தாணியும் கொண்டுஎழுதினார் , மாணிக்கவாசகர் பாட அதையும் இறைவரே தானே எழுதியது, இறைவர் தமிழ் இசையில் கொண்ட அளப்பரிய பந்தத்தைக் காட்டுகிறது. இத்துடன் இறைவரை தன் பக்தி நெறியில் ஆழ்படுத்த ஈர்க்க மூவர் பாடிய தேவாரப்பாடல்கள் அனைத்தும் இறையும், இசையும் சேர்ந்த பண்பினை காட்டுகிறது. வாய்வழிச் செய்தியாக ஆன்மிக ஆன்றோர்கள் கூறுவது அப்பர் என்னைப் பாடினார் சம்பந்தர் தன்னைப்பாடினார், சுந்தரர் பொன்னைப்பாடினார். என்ற கூற்றை நாம் இசைப்பாடல்களில் இறைவருக்கு தந்த ஈர்ப்பைக் காணலாம். "தமிழோடு இசைப்பாட மறந்தறியேன்," என்ற திருநாவுக்கரசரின் பாடல்வரிகள் தமிழ் இசையின் மூலம் இறைவரை ஆட்கொள்ள முழு ஆயுதம் தமிழ் இசைப்பாடல்களே என்பதை உணரலாம். தோத்திரப் பாடல்கள் யாவும் இறைவரின் திருவாக்குகளே என்று இறைவரே கூறியது என்பதும் காணலாம், இவ்வலிமை அறிந்த செந்தமிழ் மந்திரங்கள் பன்னிரண்டு திருமறைகள் தோன்றின, எனவே இறையும், இசையும் ஒன்றோரென்று இணைந்து, இறைவழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து, செந்தமிழ் மந்திரப்பாடல்கள் பாடி இறையோடு இணைவோம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக