புதன், 13 ஜனவரி, 2016


தினமும் ஒரு தேவாரம்
திருநாவுக்கரசர் பாடியது

பாடல் நிகழ்வுக்கு முன் நடந்தது
தருமசேனார் ஆகிய திருநாவுக்கரசர் தீராத சூலை நோய் க்ண்டு சமணர்களால் தீர்க்கமுடியாதைத தனது சகோதரி திலகவதியாரை தஞ்சம் அடைந்து , திருஅதிகை வீரட்டானீஸ்வர் மூலம் சூலை ேநாய் நீங்கப் பெற்று , தான் முன் இருந்த சமண மதத்தை விட்டு சைவ மதம் மாறி அங்கேயே தங்கிவிட்டார். இது கண்டு பொறாமை கொண்ட சமணர்கள் அவரை மீண்டும் தங்கள் சமணமதத்திற்கு கொண்டு வர பெரும் முய்ற்சி செய்து, மன்னனிடம்இது பற்றி புகார் அளித்தனா்.
"மகாராஜாவே! எங்களெல்லாருக்குந் தலைவராய் இருந்த தருமசேனர், தம்முடைய சகோதரியாராகிய திலகவதியார் சைவசமயத்திலே நிற்கின்ற படியால், தாமும் அவர் போலாக விரும்பி, தமக்குச் சூலைநோய் வந்ததாகக் காட்டி, அது நம்மாலே தீர்ந்திலது என்று அவரிடத்திற்சென்று, முன்போலச் சைவசமயத்திலே பிரவேசித்து, நம்முடைய கடவுளை நிந்தை செய்தனர்" என்று சொன்னார்கள். உடனே பல்லவராஜன் கோபங்கொண்டு, "இதற்கு யாது செய்யலாம்" என்றான். அதுகேட்ட சமணர்கள் "உத்தமமாகிய நமது சமயமகிமையைக் கெடுத்து உம்முடைய ஆஞ்ஞையையுங் கடந்த அந்தத் தருமசேனரை நீர் அழைப்பித்துத் தண்டிக்க வேண்டும்" என்றார்கள். அப்பொழுது அரசன் மந்திரிமாரை நோக்கி, "இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனைப் பிடித்துக் கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தான்.
உடனே மந்திரிமார் சேனைகளோடு போய், திருவதிகையை அடைந்து திருநாவுக்கரசு நாயனாரிடத்திற் சென்று, "எங்கள் அரசன் இன்றைக்கு உம்மை அழைத்துக் கொண்டு வரும்படி எங்களை அனுப்பினான்; வாரும்" என்றார்கள். அதுகேட்ட திருநாவுக்கரசுநாயனார் "நாமார்க்குங் குடியல்லோம்" என்னும் மறுமாற்றத் திருத்தாண்டகத்தைப் பாடி, "நாம் நீங்கள் அழைத்தபடியே வரக்கடவேமல்லேம்" என்றார்கள். அதுகேட்ட மந்திரிமார்கள் அவரை வணங்கிப் பிரார்த்தித்து அழைக்க, "அவர் அடியேனுக்கு வரும் அபாயங்களுக்கெல்லாம் சிவபெருமான் இருக்கின்றார்" என்று போதற்கு உடன்பட்டார். அவர்கள் அழைத்துக் கொண்டு போய், அரசனெதிர் சென்று அறிவித்தார்கள். அரசன் அதைக்கேட்டு, பக்கத்திலிருந்த சமணர்களை நோக்கி; "இனி இவனுக்கு யாது செய்வோம்" என்று கேட்க; சமணர்கள் "நீற்றறையில் இடல் வேண்டும்" என்றார்கள். அரசன் சமீபத்தில் நின்ற ஏவலாளர்களை நோக்கி, "இவனை இவர்கள் சொல்லியபடியே செய்யுங்கள்" என்று ஆஞ்ஞாபிக்க; அவர்கள் அந்நாயனாரைச் சூட்டினையுடைய நீற்றறையினுள்ளே விட்டுக் கதவைப் பூட்டினார்கள். திருநாவுக்கரசு நாயனார் பரமசிவனுடைய திருவடி நிழலைத் தலைக்கொண்டு, "சிவனடியார்களுக்கு இவ்வுலகத்திலே துன்பம் வருவதுண்டோ" என்று அக்கடவுளைத் தியானித்து "மாசில் வீணையு மாலை மதியமும்" என்னுந் திருக்குறுந் தொகையைப் பாடித் தொழுது கொண்டு, அந்த நீற்றறையினுள்ளே எழுந்தருளியிருந்தார். அந்நாயனார் சிவபெருமானுடைய திருவடி நீழலாகப் பாவித்த அந்நீற்றறை வீணாகானமும் சந்திரனும் தென்றலும் இளவேனிலும் பொய்கையும் போலக் குளிர்ந்தது.
நீற்றறையில் பாடிய பதிகம் மாசில் வீணையும் என்ற பதிகம்
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை:
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும், வீசுகின்ற தென்றலின் சாயலும், செறிந்த இளவேனிலின் மாட்சியும், ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும்.
ஏழுநாட் சென்றபின், பல்லவராஜன் சமணர்களை அழைத்து, "நீற்றறையைத் திறந்து பாருங்கள்" என்று சொல்ல; அவர்கள் நீற்றறையைத் திறந்து நாயனார் யாதொரு ஊனமும் இன்றிக்களிப்புற்றிருத்தலைக் கண்டு ஆச்சரியமடைந்து, அரசனிடத்திற் சென்று, "அவன் முன்னே நம்முடைய சமயத்தில் இருந்து செய்த மந்திரசாதகத்தினாலே வேவாமற் பிழைத்துக் கொண்டான். இனி அவனுக்கு நஞ்சு ஊட்டுவதே தகும்" என்றார்கள். அரசன் "அப்படியே செய்யுங்கள்" என்று சொல்ல; அவர்கள் நாயனாருக்கு நஞ்சுகலந்த பாற்சோற்றை உண்ணக் கொடுத்தார்கள். நாயனார் அவர்களுடைய வஞ்சனையை அறிந்து, "நஞ்சும் அமுதாம்" என்று, நஞ்சுகலந்த அந்தப் பாற்சோற்றை உண்டு இருந்தார். சமணர்கள் அதைக் கண்டு "இவனுக்கு நஞ்சும் அமுதமாயிற்று. இவ்விடத்திலே இவன் பிழைப்பானாகில் நமக்கெல்லாம் நாசமுண்டாகும்" என்று பயந்து, அரசனிடத்திற்சென்று. "நாம் நஞ்சைச் சோற்றிலே கலந்து உண்பித்தும், நம்முடைய சமய நூல்களிலே கற்றுக் கொண்ட மந்திரவலியினாலே பிழைத்துவிட்டான். அவன் இறவாதிருப்பானாகில், எங்கள் உயிரும் உம்முடைய அரசாட்சியும் நீங்குவது திடம்" என்றார்கள்.
தொகுப்பு ; வை.பூமாலை
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக