ஞாயிறு, 23 மார்ச், 2014

அன்பும் பற்றும்


அன்பும் பற்றும் " பிள்ளையாரப்பா........ ! நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் உனக்கு பாலாபிசேகம் செய்கிறேன்," " என்மகள் திருமணம் நடந்து விட்டால் நான் பழனிக்கு வந்து மொட்டை போட்டுக்கொள்கிறேன்." என பலர் தங்கள் விருப்பங்களுக்கேற்ப ஆண்டவனிடம் வேண்டுதல் ைவ்பபர், இந்த வேண்டுதல்கள் அனைத்தும் இறைவன் பால் கொண்ட அன்பாக கருதமுடியாது. அவையெல்லாம் வேண்டுதல்கள் அவையே அந்தந்த தேவையின் பொருட்டு ஏற்பட்ட பற்றைத்தான் காட்டும், இவற்றில் முன்னது " தான்" என்ற பற்று. பின்னது தன் மகள் மீது உள்ள பற்று , நம் வழிபாடுகள் உறவுகள் அனைத்தும் இன்ற பற்றை அடிப்படையாக வைத்தே அமைந்துள்ளன. அன்பு வேறு, பற்று வேறு தன்னைப் பெற்ற தாயிடம் பால் குடித்த ஞானசம்பந்தர் உமையிடமும் ஞானப்பால் உண்டார். பின் அவர் சமணத்தை அறத்து, சைவத்தைக் காக்க மதுரை வருகின்றார். மதுரைக்கு அரசி மங்கையர்கரசி அவரே ஞானசம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கின்றார், "அச்சிறு குழந்தையைக் கண்டதும் அன்பின் மிகுதியால் மங்கையர்கரசியிடமும் பால் சுரந்ததாம் !" இப்படிப் பாடுகிறார் கற்பனைக் களஞ்சயம் சிவப்பிரகாசர். இதுதான் உண்மை அன்பு. எதையும் எதிர்பாராது விளைவது அன்பு, மறு தேவையை ( பிரதி பிரயோஜனம் ) எதிர்பார்த்து உண்டாவது பற்று. அதுவே பாசம் எனப்படுகிறது, நாம் மற்றவர் மீது கொண்டுள்ளது பற்று. பற்றையே பாசத்தையே அன்பு என எண்ணி வாழ்கிறோம். ஆம் பற்றைப் பெருக்கி அதனையேய அன்பு என மயங்கி வாழ்கிறோம் இவ்வுலகமே பற்று என்கிறார் மாணிக்க வாசகர். " வைத்த நிதி, பெண்டீர், மக்கள் குலம், கல்வி, என்னும் பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளித்த ........ " என்றும் " எந்தை எந்தை சுற்றம் மற்றும் எல்லாம் என்னுடைய பந்தம் அறுத்து .............. " என்றும் பாடியுள்ளார், நாம் பெற்ற கல்வி, செல்வம், உறவு அனைத்தும் பற்று. அந்த மனக் குழப்பத்தைத் தெளித்தவன் இறைவன் என்று அவர் பாடுகிறார். இவ் உலகப் பொருள் அனைத்தும் பறறு, பாசம், இவற்றை விட்டு விலகுவோம், இதைக் கடந்து அன்பு உள்ள நெகிழ்வு மனஇளக்கம், இது எல்லோரிடத்தும் எல்லா உயிரிடத்தும் காட்டக் கூடியது. இதற்கு மட்டுமே கட்டுப்பட்டவன் இறைவன், அதனால்தான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டனர், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, மயிலுக்கு தன்னுடைய அங்கியை வழங்கினான் ஒரு மன்னன். அந்த உள்ள நெகிழ்வு அது, அன்பினால் தான் அவனை அடைய முடியும், "அன்பே சிவமாகிறது " என்றார் திருமூலர். மாணிக்கவாசகரும் " அன்பாய அன்பருக்கு அவரினும் அன்ப போற்றி " எனப்பாடுகிறார். அன்பை உடையவர் அன்பர். அவரிடத்தும் அன்பாக இறைவன் இருப்பார் இருக்கின்றார். ஞானசம்பந்தரது பல்லக்கை அப்பர் சுமந்தார். தொண்டருக்கு தொண்டர் ஆனார் அவர் , அவருக்கும் தொண்டன் இறைவன் அப்பரின் பால் அன்பு கொண்டு அவரை காணாமலே அவர்மீது அன்பு கொண்டு அவர் நாமத்தைக் கொண்டே உழவாரப்பணிகள் செய்துவந்தார் அப்பூதியடிகள், இப்படி போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிபவன் இறைவன். அதுபோல அடியாருக்கு நான் அடியேன் என்றார் சுந்தரர், அவருக்கும் அடியாரானார் சேரமான் பெருமான், அவருக்கும் அடியவன் இறைவன், இவரில் யாருக்கு யார் அடியார்? அன்பினால் விளைந்த இணைப்பு இது. எதையும் எதிர்பாராத அன்பு இது. " அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவலார் அன்பே சிவமா வதாரும் அறிகலார் அன்பே சிவமாவதாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே. " திருமூலர் எனவே நாமும் பற்றைவிட்டு எதையும் எதிர்பாராது அன்பை அனைவரிடமும் காட்டுவோம். அவ்வன்பே இறையைக் காட்டும், அவ் அன்பே இறையாக வரும், அன்பே சிவம் - சிவமே அன்பு திருச் சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக