சனி, 29 மார்ச், 2014


பட்டினத்தார் பாடல் இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். இவரது பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். கப்பல் வணிகம் மூலம் பெரும் பொருள் ஈட்டிய சிவநேசர் காலமாக உரிய வயதில் ஞானகலாம்பை சிதம்பரச் செட்டியார் சிவகாமியம்மையின் புதல்வியான சிவகலை என்பவரை திருவெண்காடருக்கு மணமுடித்தார். இல்லற வாழ்க்கை இனிதே நடந்தாலும் குழந்தையில்லா ஏக்கம் திருவெண்காடரை வாட்டியது. இறைவனிடம் முறையிட்டார். இறைவன் தாமே குழந்தை வடிவாய் சிவசருமர் என்ற சிவபக்தர் மூலம் திருவெண்காடரைச் சேர்ந்தார். அன்பு மகனை மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்தார். குழந்தை பெரியவனானதும் வியாபாரம் செய்ய அனுப்பினார். திரைகடலோடித் திரவியம் தேடிச் சென்ற மருதவாணன் கப்பல் நிறையத் தவிடு மூட்டையும் வரட்டிகளையும் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தான். மருதவாணனுக்குப் பித்துப் பிடித்து விட்டதோ என்றஞ்சிய அவர் வீட்டினுள்ளே சிறை வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள் வைரக்கற்கள் சிதறின. தவிடெல்லாம் தங்கமாக மின்ன திகைத்துப்போன திருவெண்காடர் தம் மகனைப் பாராட்டத் தேடுகையில் அவரோ தம் அன்னையாரிடம் சிறு பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டிருந்தார். மைந்தன் கொடுத்துவிட்டுச் சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும் ஓர் ஓலைச்சீட்டும் இருந்தது. அதில் ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’* என்று எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து கொண்ட திருவெண்காடர் தமது மைந்தனாக இதுநாள் வரை இருந்தது திருவிடைமருதூர் பெருமான்தான் என்பதை உணர்ந்து மனம் வருந்தித் துறவறம் பூண்டார். *“காதற்ற ஊசியும் வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின் இந்த வாசகமும் பாடலும் புதுச்சேரி கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை உணர்ந்து நடக்க வேண்டுகிறது. இந்தத் துறவு நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின் வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப் பாடுகின்றார். “அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா” “மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா” “மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா” “பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே” “மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே; திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே” “வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே; சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே” “மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே” “கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே” இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார். “ஐந்து புலனும் அடங்கேனே என்குதே; சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே” காமக் குரோதம் கடக்கேனே என்குதே நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே என்று அழுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக