செவ்வாய், 25 அக்டோபர், 2016

தேவார பாடல் பெற்ற தலங்கள் ( 5) திருவீழிமிழைலை

தேவார பாடல் பெற்ற தலங்கள் ( 5) திருவீழிமிழைலை

சம்பந்தரும் அப்பரும் அண்ணசாலை மடங்கள் அமைத்து பஞ்சம் 
தீர்த்த தலம்

திருவீழிமிழலை

இறைவர் திருப்பெயர் : நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.
இறைவியார் திருப்பெயர் :சுந்தரகுஜாம்பிகை,                                                                                                    அழகுமுலையம்மை.
தல மரம் : வீழிச் செடி / விழுதி செடி.
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம்.
வழிபட்டோர் : பிட்சாடனர், ரதிதேவி, வசிஷ்டர், காமதேனு, மனு முதலியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் -1சடையார்புன லுடையானொரு, 
2. தடநில வியமலை, 
3. அரையார் விரிகோவண, 
4. இரும்பொன் மலைவில்லா, 
5. வாசி தீரவே, காசு, 
6. அலர்மகள் மலிதர, 
7. ஏரிசையும் வடவாலின், 
8. கேள்வியர் நாடொறும், 
9. சீர்மருவு தேசினொடு, 
10. மட்டொளி விரிதரு, 
11. வெண்மதி தவழ்மதில், 
12. வேலி னேர்தரு கண்ணி, 
13. துன்று கொன்றைநஞ், 
14. புள்ளித்தோ லாடை.

  2. அப்பர்   - 1. பூதத்தின் படையர், 
2. வான்சொட்டச் சொட்டநின், 
3. கரைந்து கைதொழு, 
4. என்பொ னேயிமையோர், 
5. போரானை ஈருரிவைப், 
6. கயிலாய மலையுள்ளார், 
7. கண்ணவன்காண் கண்ணொளி, 
8. மானேறு கரமுடைய, 

3. சுந்தரர் -1.நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்




தல வரலாறு

வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.

இத்தலத்தில், திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்றார். இவ்வரலாறு திருமுறையில் கூறப்பட்டுள்ளது. கல்யாணசுந்தரரின் பாதத்தில் விஷ்ணு தம் கண்ணைப் பறித்து அருச்சித்த அடையாளம் உள்ளது.

சிறப்புக்கள்

இத்தல விநாயகர் - படிக்காசு விநாயகராவார்.
இத்தலத்திற்கு பூகைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தக்ஷிணகாசி, ஷண்மங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்ப்பணபுரம், தேஜிநீவனம் எனப் பத்துப் பெயர்களுண்டு.

இத்தலம் 23 திருமுறைப் பதிகங்களையுடையது.
திருமுறை மட்டுமன்றி, சேந்தனாரின் திருவிசைப்பாவும், அருணகிரிநாதரின் திருப்புகழும் பெற்ற சிறப்புடையத் தலமாகும்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.

சம்பந்தரும், அப்பரும் தங்கியிருந்த திருமடங்கள் வடக்கு வீதியில் கீழ்க்கோடியிலும் (சம்பந்தர்) மேற்குக் கோடியிலும் (அப்பர்) உள்ளன.

இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.

இத்தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனத்து, இரண்டாவது குருமூர்த்திகளான ஸ்ரீ மறைஞானதேசிகருடைய மாணவரான ஸ்ரீ மெய்ஞ்ஞான முனிவரால் இயற்றப்பட்டது - உள்ளது.

இக்கோயிலிலுள்ள வெளவால் நத்து (வாவல் நெற்றி) மண்டபம் மிகச் சிறப்பான வேலைப்பாடுகள் உள்ளதாகும். கோயில் திருப்பணிகள் செய்யும் ஸ்தபதிகள் சில தலங்களில் உள்ள அரிய திருப்பணிகள் நீங்கலாகச் செய்யும் ஒப்பந்தங்களில இம் மண்டபமும் ஒன்றாகும்.

வெளவால் நத்தி மண்டபம் - கல்யாண மண்டபம் உள்ளது; அழகான அமைப்பு - நடுவில் தூணில்லாமல், சுண்ணாம்பு கொண்டு ஒட்டப்பட்டுள்ள அமைப்பு - பார்ப்பவரை வியக்கச் செய்யும்.

இக்கோயில் மாடக் கோயில் அமைப்புடைது.
சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை "தன்றவம் பெரிய சலந்தரனுடலந் ........" என்ற சம்பந்தரின் வாக்கிலிருந்தும் அறியலாம்.

இறைவன் உமையை மணந்துக் கொண்ட தலம் என்னும நிலைக்கேற்ப, கர்ப்பக்கிருக வாயிலில் அரசாணிக்கால் என்னும் தூணும், வெளியில் மகாமண்டபத்தில் பந்தக்கால் என்னும் தூணூம் உள்ளன.

Vimanam
இத்தலத்தில் தான் மிழலைக் குறும்பர் என்னும் வேடுவர் விளாங்கனியை நிவேதித்து அருள்பெற்றார்.

சம்பந்தரும், அப்பரும் படிக்காசுப் பெற்று அவற்றைக் கடைத்தெருவிற்குக் கொண்டு சென்று பொருள்களை வாங்கிய கடைத்தெரு இப்போது ஐயன்பேட்டை என வழங்கப்படுகிறது. அங்கே உள்ள சுவாமி பெயர் - செட்டியப்பர், அம்பாள் - படியளந்த நாயகி. உற்சவமூர்த்தி தராசு பிடித்த கையோடும், அம்பாள் படியைப் பிடித்தக் கையோடும் காட்சித் தருகின்றனர். தலவிருக்ஷம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொன்றாக உள்ளதாக சொல்லப்படுகிறது. முதலில் சந்தனமாகவும், பிறகு சண்பகமாகவும், பின் வீழிச்செடியாகவும் உள்ளது. அடுத்து இருக்கவுள்ளது பலாமரமாகும்.

இத்திருக்கோயிலைச் சுற்றி; பத்ம தீர்த்தம், புஷ்கரணி, விஷ்ணு தீர்த்தம், திரிவேணி சங்கமம், குபேரதீர்த்தம், இந்திர தீர்த்தம், வருண தீர்த்தம், இலக்குமி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் முதலாக 25 தீர்த்தங்கள் உள்ளன.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு 
மயிலாடுதுறை - திருவாரூர் இருப்புப் பாதையில் பேரளத்தையடுத்துள்ள பூந்தோட்டம் நிலையத்திலிருந்து 10 கி. மீ. தொலைவில் உள்ள தலம். திருவாரூர், கும்பகோணம், பேரளம், ஆடுதுறை, பூந்தோட்டம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக