பாடல் பெற்ற திருத்தலங்கள் ... 2
திருக்காழி (சீர்காழி)
இறைவர் திருப்பெயர் : பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர் இறைவியார் திருப்பெயர் : பெரிய நாயகி, திருநிலைநாயகி தல மரம் : பாரிஜாதம் தீர்த்தம் : பிரம தீர்த்தம், காளி தீர்த்தம், சூல தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், வைணவ தீர்த்தம், இராகு தீர்த்தம், ஆழி தீர்த்தம், சங்க தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், பராசர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், கௌதம தீர்த்தம், வன்னி தீர்த்தம், குமார தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கேது தீர்த்தம், அண்ட தீர்த்தம், பதினெண்புராண தீர்த்தம், புறவ நதி, கழுமல நதி, விநாயக நதி முதலிய 22 தீர்த்தங்கள். வழிபட்டோர் : பிரமன், குருபகவான், திருமால், சிபிச்சக்கரவர்த்தி, காளி, பராசர முனிவர், உரோமசமுனிவர், இராகு, கேது, சூரியன், அக்னி, ஆதிசேடன், வியாசமுனிவர், முருகப் பெருமான், சந்திரன், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலியோர். தேவாரப் பாடல்கள் : சம்பந்தர்: - பிரமபுரம் 1. தோடுடைய செவியன், 2. எம்பிரான் எனக்கமுத, 3. கறையணி வேலிலர், 4. கரமுனம் மலராற், 5. இறையவன் ஈசன் திருவேணுபுரம் 1. வண்டார்குழலரிவை, 2. நிலவும் புனலும், 3. பூதத்தின் படையீனீர் திருப்புகலி 1. விதியாய் விளைவாய், 2. ஆடல் அரவசைத்தான், 3. உகலி யாழ்கட, 4. முன்னிய கலைப்பொருளும், 5. உருவார்ந்த மெல்லியாலோர், 6. விடையதேறி வெறி, 7. இயலிசையெனும், 8. கண்ணுதலானும்வெண், 9. மைம்மருபூங்குழல் திருவெங்குரு 1. காலைநன் மாமலர், 2. விண்ணவர் தொழுதெழு திருத் தோணிபுரம் 1. வண்டரங்கப் புனற்கமல, 2. சங்கமரு முன்கைமட, 3. கரும்பமர் வில்லியைக் திருப்பூந்தராய் 1. செந்நெலங்கழனி, 2. பந்துசேர்விரலாள், 3. தக்கன் வேள்வி, 4. மின்னன எயிறுடை திருச்சிரபுரம் 1. பல்லடைந்த வெண்டலை, 2. வாருறு வனமுலை, 3. அன்னமென்னடை அரிவை திருப்புறவம் 1. நறவ நிறைவண்டறைதார்க், 2. எய்யாவென்றித் தானவ, 3. பெண்ணியலுருவினர் திருச்சண்பைநகர் 1. பங்கமேறு மதிசேர், 2. எந்தமது சிந்தைபிரியாத சீர்காழி 1. பூவார் கொன்றைப், 2. அடலேறமருங், 3. உரவார் கலையின், 4. நல்லார் தீமேவுந், 5. நல்லானை நான்மறை, 6. பண்ணின்நேர்மொழி, 7. நலங்கொள் முத்தும், 8. விண்ணியங்குமதிக், 9. பொங்குவெண்புரி, 10. நம்பொருள்நம் மக்கள், 11. பொடியிலங்குந் திருமேனி, 12. சந்தமார் முலையாள், 13. யாமாமாநீ யாமாமா திருக்கொச்சைவயம் 1. நீலநன்மாமிடற்றன், 2. அறையும் பூம்புனலோடும், 3. திருந்துமா களிற்றிள திருக்கழுமலம் 1. பிறையணி படர்சடை, 2. அயிலுறு படையினர், 3. பந்தத்தால் வந்தெப்பால், 4. சேவுயருந் திண்கொடியான், 5. மண்ணில் நல்லவண்ணம், 6. மடல்மலிகொன்றை பல்பெயர்ப்பத்து 1. எரியார்மழுவொன்றேந்தி,, 2. அரனை உள்குவீர், 3. காடதணிகலங்கார, 4. பிரமபுரத்துறை பெம்மா, 5. ஒருருவாயினை, 6. பிரமனூர் வேணுபுரம், 7. விளங்கியசீர்ப் பிரமனூர், 8. பூமகனூர்புத்தேளுக், 9. சுரருலகு நரர்கள், 10. வரமதேகொளா, 11. உற்றுமை சேர்வது அப்பர் :- 1. மாதியன்று மனைக்கிரு, 2. பார்கொண்டு மூடிக், 3. படையார் மழுவொன்று சுந்தரர் : சாதலும் பிறத்தலும்
தல வரலாறு
- திருஞானசம்பந்தர் திருஅவதாரம் செய்த திருப்பதி. தோணியப்பர் அம்பிகையிடம் கூற, அம்பாள் ஞானப்பால் பொற்கிண்ணத்தில் கொடுக்க, சம்பந்தர் அருந்தி ஆளுடைய பிள்ளையார் ஆன பதி.
அவதாரத் தலம் : சீர்காழி வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : நல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) குருபூசை நாள் : வைகாசி - மூலம்
- திருஞானசம்பந்தர் பிறந்து, நடந்து, மொழி பயின்ற அவரது திருமனை திருஞானசம்பந்தர் தெருவில் உள்ளது. தற்போது அது தேவாரப் பாடசாலையாக இயங்குகின்றது.
- பிரம தீர்த்தக் கரையில்தான் சம்பந்தர் பெருமான் ஞானப்பாலையுண்டார்.
- இக்கோயில் வளாகத்தில் திருஞானசம்பந்தருக்குத் தனித் திருக்கோயில் உள்ளது.
- இத்தலத்திற்குப் பன்னிரண்டுத் திருப்பெயர்கள் உண்டு; அவை -
- பிரமபுரம் - பிரமன் வழிபட்டதால் இப்பெயர்.
- வேணுபுரம் - இறைவன் மூங்கில் வடிவில் (வேணு = மூங்கில்) தோன்றினான்.
- புகலி - சூரனுக்குப் பயந்த தேவர்களின் புகலிடமாய் விளங்கியது.
- வெங்குரு - குரு பகவான் வழிபட்டது.
- தோணிபுரம் - பிரளயகாலத்தில் இப்பதி தோணியாய் மிதந்ததால் இப்பெயர். பிரளய காலத்தில் இறைவன் தோணியில் காட்சித் தந்ததாலும் இப்பெயர்.
- பூந்தராய் - பூமியைப் பிளந்து சென்று இரணியாக்கதனைக் கொன்ற வராகமூர்த்தி (திருமால்) வழிபட்டது.
- சிரபுரம் - சிரசின் (தலை) கூறாய் உள்ள இராகுக் கிரகம் பூசித்தது.
- புறவம் - புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றது.
- சண்பை - சண்பை என்னும் கோரைப்புல்லால் மடிந்த தம்குலத்தோரால் நேர்ந்த பழி தீரக் கண்ணபிரான் (திருமால்) வழிபட்டது.
- சீகாளி (ஸ்ரீகாளி) - காளிதேவி, சிதம்பரத்தில் நடராசப்பெருமானோடு வாதாடிய குற்றம் நீங்க, வழிபட்டது.
- கொச்சைவயம் - மச்சகந்தியைக் கூடிய கொச்சை (பழிச்சொல்) நீங்கப் பராசரர் வழிபட்டது.
- கழுமலம் - மலத் தொகுதி நீங்குமாறு உரோமசமுனிவர் வழிபட்டது.
- குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீஸ்வரர் இலிங்கமாகவும், ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.
- சட்டைநாத சுவாமி இங்கு முக்கிய தெய்வமாகும். இரண்யனைக் கொன்ற நரசிங்கத்தைத் தடிந்து, அதன் தோலைச் சட்டையாகப் போர்த்துக் கொண்டதால், சுவாமித் இத்திருநாமத்தைக் கொண்டார்.
சிறப்புக்கள்
- "திருமுலைப்பால் உற்சவம்" இன்றும் சித்திரைப் பெருவிழாவில், இரண்டாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரின் நட்பைப் பெற்று, அவரால் அப்பர் எனப் பெயரும் பெற்றப் பதி.
- சுந்தரர் இங்கு வந்தபோது, இஃது, சம்பந்தப்பெருமான் அவதரித்தபதி என்று மிதிப்பதற்கு அஞ்சி நகர்புறத்து நின்று பாட, இறைவர் காட்சி தந்த பதி.
- திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தரை வணங்கி, அவருடைய பதிகங்களை யாழிலிட்டு வாசித்து, சம்பந்தருடன் இருக்கும் பெருமைப் பெற்ற பதி.
- கணநாத நாயனார் அவதரித்தத் திருப்பதி. இத்திருக்கோயில் வளாகத்தில் கணநாத நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
அவதாரத் தலம் : சீர்காழி. வழிபாடு : குரு வழிபாடு. முத்தித் தலம் : சீர்காழி. குருபூசை நாள் : பங்குனி - திருவாதிரை.
- பிற்கால சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மொத்தம் நாற்பத்தாறு உள்ளன.
- மாணிக்கவாசகர், பூந்துருத்திகாடநம்பி, பட்டினத்து அடிகள் - (திருக்கழுமல மும்மணிக்கோவை), நம்பியாண்டார் நம்பிகள் - (ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை, ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்,ஆளுடையபிள்ளையார் திருத்தொகை), அருணகிரிநாதர், தருமையாதீனத்துப் பத்தாவது குருமூர்த்தி சிவஞானதேசிகர், திருவாவடுதுறை ஆதீனத்து எட்டாவது குருமூர்த்தி மாசிலாமணி தேசிகர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அருணாச்சலக்கவிராயர் முதலியோர் சீர்காழியின் சிறப்பையும், திருஞானசம்பந்தரின் பெருமைகளையும் பாடிப் புகழ்ந்துள்ளனர்.
- சீர்காழி அருணாச்சலக்கவிராயர் இத்திருக்கோயிலுக்கு தலபுராணம் பாடியுள்ளார்.
- இது, தருமைபுர ஆதீனத்துக்குச் சொந்தமானது.
- இரண்டாம், மூன்றாம் குலோத்துங்கச் சோழன், வீரராஜேந்திரன், இராசகேசரி வர்மன், கிருஷ்ணதேவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
அமைவிடம்
அ/மி. பிரமபுரீசுவரர் திருக்கோயில், அ/மி. சட்டைநாத சுவாமித் திருக்கோயில், சீர்காழி & அஞ்சல் - 609 110. சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். தொலைபேசி : 04364 - 270235.
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில் சீர்காழி நிலையத்திலிருந்து 1.5-கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்து பாதையில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி வெகுவாக உள்ளன.
மயிலாடுதுறை - சிதம்பரம் இரயில் பாதையில் சீர்காழி நிலையத்திலிருந்து 1.5-கி.மீ. தூரத்தில் இருக்கிறது. மயிலாடுதுறை - சிதம்பரம் பேருந்து பாதையில் உள்ளது. கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி வெகுவாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக