புதன், 26 அக்டோபர், 2016

மறக்கொணா இருவர்

மறக்கொணா இருவர்



பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த

ஏராரும் மணிமன்றில் எடுத்ததிரு வடிபோற்றி”

Chidambaram_Nataraja_patanjali_vyaghrapadaதிருவாதவூரடிகள் எம்பெருமானது ஐந்தொழிற்கூத்து நிகழ்வதற்கு உரிமையுடைய திருத்தலமாகத் தில்லையை, “தில்லை மூதூர் ஆடிய திருவடி”, என்றும்,”தில்லையுட் கூத்தனே” என்றும் கூறியருளினார். தில்லை என்பது சிதம்பரம். அது, சித்+அம்பரம் என்னும் தொகைச்சொல். ‘சித்’ என்றால் ,‘ஞானம்’ என்று பொருள்; ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாசம்’ என்று பொருள். எனவே, சிதம்பரம் ‘ஞானாகாசம்’ஆகும். அந்த ஞானாகாசம் அண்டத்திலும் உண்டு; பிண்டமாகிய உடலிலும் உண்டு. அண்டத்திலுள்ளது, பராகாசம் என்றும் பிண்டத்திலுள்ளது , ‘தகராகாசம்’ எனவும் வழங்கப்படும். தகரம் – சிறுமை.

பராகாசம், தகராகாசம் எனும் இவ்விரண்டு ஆகாயங்களும் ‘பரை’ அல்லது ‘சித்சத்தி ’வடிவின. இவ்விரு ஆகாசங்களில் இருந்துகொண்டு ஐயன் ஐந்தொழிற் கூத்தியற்றி அண்ட பிண்டங்களை இயக்குகின்றான்.

பரமாண்டத்தின் இருதயகமலமாகக் கருதப்படுவது, புண்ணிய பூமியாகிய பாரதத் திருநாட்டின் அங்கமாகிய மாதவஞ்செய் தமிழ்நாட்டின் தில்லை மூதூர். தில்லை என்பதே பழமையான பெயர். சிதம்பரம் என்பது காலப்போக்கில் தோன்றி நிலைபெற்றுவிட்ட பெயர்.

இதயகமலத்தில் இறை என்னும் பதிப்பொருள் ஞானப்பிரகாசமாக, சிவப்பிரகாசமாக, அறிவொளியாக, அருட்சோதியாகத், தன்னை அன்பால் நினைவார் நினையும் வடிவில் எழுந்தருளுவதை தெய்வப்புலவர், “மலர்மிசை யேகினான்” என்று சுட்டினார்.

திருவாதவூர்ப் பெருந்தகை,

“மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி” என விரித்துரைத்தார். இந்த இதயகமலத்தை,’அனாகதம்’ எனும் பெயரால் யோகியர் குறிப்பர்.

மேலானது, உயர்ந்தது எனும் பொருள்படும் பரம் (supreme being) என்னும் பெயர் ஆண்பால் விகுதியேற்றுப் ‘பரன்’ எனவும், பெண்பால் விகுதியேற்றுப் ‘பரை’ எனவும் ஆகும். பரம்- சிவம்; பரன் –சிவன்; பரை- சிவசத்தி. பராகாசம் அல்லது ஞானாகாசம் சித்சத்தி வடிவம். பரையிடமாக நின்று உரையுணர்வுக் கெட்டா ஒருவன் பஞ்சாக்கரத்தால் வரைமகள் காணும்படிக் கருணையுருக் கொண்டு ஆடிதலைப் பேணுபவருக்குப் பிறப்பில்லை என்பது நம் ஞானசாத்திரமாகிய உண்மைவிளக்கம்.

பரை பக்குவ ஆன்மாக்களுக்குத் திருவருளாகச் சிவத்தைக் காட்டும்; பக்குவமிலாத ஆன்மாக்களுக்குச் சிவத்தை மறைத்து, மறைப்புச்சத்தியாகிய திரோதானமாக நின்று உலகத்தைக் காட்டும்.

சிவத்தைக் காட்டுவது ‘ஞானநடனம்’ என்றும், பிரபஞ்சத்தைக் காட்டுவது ‘ஊனநடனம்’ என்றும் சாத்திரம் பேசும். இவ்விரு நடனங்களின் இயல்பைத் திருவாதவூரிறை,

“ஊனை நாடக மாடுவித்தவா

உருகி நானுனைப் பருக வைத்தவா

ஞான நாடக மாடு வித்தவா

நைய வையகத் துடைய விச்சையே”

(திருச்சதகம் 95)

என்றருளினார்.

பிண்டமாகிய உடலில் இருந்துகொண்டு அதனை இயக்கும் உயிர்போல, உயிரின் உள்ளிருக்கும் தகராகாசமாகிய ஞானாகசத்தில் சிவம் இவ்விருவகை நடனங்களையும் இயற்றுகிறது; ஊன நடனத்தால் உலகபோகங்களை ஊட்டிப் பக்குவம் வரச் செய்கிறது; ஞான நடனத்தால் சிவானந்தமாகிய சிவபோகத்தை அருளுகின்றது. இதனை, “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, என்றும், “மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க” என்றும் மணிவாசகர் மொழிந்தருளினார்.

ஆணவ இருளினால் மறைப்புண்டு கிடப்பாருடைய கண்கள் ஞானாகாச வியாபகத்தில் வியாப்பியமாகக் கலந்திருந்தும் இந்தத் திருக்கூத்தினைக் காணும் தகைமை உடையன அல்ல. பலபிறவிகளிலும் ஈட்டிய சிவபுண்ணியப் பயனால் சிவகுருவின் அருள் கிடைத்து ஆணவ இருள் நீங்கப் பெற்றவரே இந்நடனத்தைக் காணும் பேறு பெறுவர். ஞான நடனக் காட்சியால் விளைவது அந்தமிலா ஆனந்தமாகிய சிவபோகம்.

chidambaram-kumbha-3சிவசத்தியால் மலவாசனை நீங்கப்பெற்ற ஆன்மா இச்சிவபோகத்தை ஞானசத்தியால் அனுபவிக்கும். இவ்வனுபவத்தைத் தெய்வச் சேக்கிழார், “உணர்வின் நேர்பெற வருஞ்சிவபோகம்” என்றார். இந்தப் போகம் ஐம்புலன்களின் வழி நுகரப்படும் ‘சுவை ஒளி ஊறு நாற்றம் ஓசை’ போன்றதொன்றன்று. ஞானம் அல்லது அறிவால் அனுபவிக்கப்படுவது.

அதனால், நம் அருணகிரி மாமுனிவரும், “ அறிய அறிய அறியாத அடகள் அறிய அடியேனும், அறிவுள் அறியும் அறிவூர அருள்வாயே” (உத்தரமேரூர்), “”பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் களமான, பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் தருள்வாயே” (கருவூர்), “எப்பொருளுமாய அறிவையறி பவரறியும் இன்பந்தனை” (பொது), “அறிவும் அறியாமையும் கடந்த அறிவுதிரு மேனி” பொது) எனப்பல திருப்புகழ் மறையில் எடுத்தோதியமை காண்க.

‘உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை” , “ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச்”சேருமாறு ஐம்பொறிகளாலும் அடையப் பெற்றவர்கள் நம் சைவசமயாச்சாரியர்களாகிய நால்வர். அவர்களுக்கும் முன்னதாக அருளப்பெற்றவர்கள், பதஞ்சலி முனிவர் , வியாக்கிரபாத முனிவர் ஆகிய இருவருமாவர்.

பதஞ்சலி முனிவர் ஆதிசேடனின் அவதாரமாகப் பூவுலகில் முனிவராகத் தோன்றியவர். அத்திரி முனிவரும் அவருடைய பத்தினியார் அநசூயா தேவியாரும் மகப்பேறு விரும்பித் தவம் முயன்றனர். எம்பெருமானை வணங்கிக் கொண்டிருந்த அநசூயாதேவியின் கரங்களில் இறைவனின் அருளால் ஆதிசேடன் சிறுநாகப் பாம்பின் குட்டியாகத் தோன்றினான். அச்சமடைந்த அநசூயாதேவி கையைஉதறினாள். பாம்புக்குட்டி அவளுடைய பாதங்களில் வீழ்ந்தது. அதனால் பதஞ்சலி என்று பெயர் பெற்று மனித உடலும் பாம்பின் வாலும் பெற்று வளர்ந்தது.

யோக சூத்திரம் செய்த பதஞ்சலி இம் முனிவரின் வேறாவர் என்பது அறிதல் வேண்டும்.

பதஞ்சலி முனிவரும் மத்தியந்த முனிவர் மைந்தரான வியாக்கிரபாத முனிவரும் தில்லையில் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இருவரும் செய்த தவம் சைவநெறிப்படிச் சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவே.

chidambaram-kumbha-2

இருவரும் தில்லைவனத்தில் தவம் செய்யும் நாட்களில் விடியும் முன்னெழுந்து வைகறைப்போதில் மரங்களின் மீதேறி மலர் பறிப்பர். பதஞ்சலி முனிவர் பாம்புடலினராதலின் மரக்கொம்புகளைச் சுற்றிப் படர்ந்து மேலேறுவர்.

மந்தியந்த முனிவரின் மைந்தர், மரங்களின் மீதேறிக் கோட்டுப் பூக்களைப் பறிக்கும்போது பனியீரத்தால் வழுவாதிருக்கும் பொருட்டுப் புலியின் கால்கலையும் மையிருளில் வண்டு புழு அரிக்காத மலர்களைக் காணக் கைவிரல் நுனிகளில் கண்களையும் இறைவனிடம் வேண்டிப் பெற்றார். புலியின் கால்களை வேண்டிப் பெற்றமையால் புலிக்கால் முனி எனப்பட்டார். இவர் வழிபட்ட்தால் தில்லை ‘புலியூர்’ எனப்பட்டது. புலிக்கு வடமொழியில் வியாக்ரம் எனப் பெயர். எனவே, இவர் விய்ரபாத முனிவர் எனப்பட்டார்.

முனிவர் இருவரும் ஆற்றிய தவவழிபாட்டினை ஏற்று மகிழ்ந்த எம்பிரான்,” இங்குக் கொள வேறேதும் உண்டோ” என வினவினான்.திருக்கூத்துக் கண்ட முனிவர் இருவருக்கும் இத்தரிசனத்திற்கு மேல் வேண்டுவதொன்றுமில்லை. ஆயினும், நிலவுலகில் ஆன்மாக்கள் படுகின்ற துயரினை நீக்கக் கருணையுள்ளம் கொண்டு, பெருமானே! மின்னல் போலும் வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினால் தரிசிக்கும்தோறும் நிறைந்த ஞானவொளியாகிய இச்சபையிலே, அன்பையுடைய துணைவியாகிய உமாதேவியுடனே, இன்று முதல் எக்காலமும் ஆனந்த நடனம் அருளத் திருவுளம் இரங்க வேண்டும்” என வேண்டிக் கொண்டனர். தேவர்கள் தேவனாகிய மகாதேவன் திருவருளும் அங்கு அவ்வண்ணமே செய்ய இரங்கியது.

யான் எனது என்னும் வஞ்சத் தலைமையினையுடைய ஆன்மாக்கள் படுந் துன்பத்தினை எண்ணீ, முனிவரிருவரும் கருணையினால் வேண்ட இன்றும் நிகழ்வதுவே தில்லை மன்றுள் நிக்ழும் எம்பிரானின் திருக்கூத்து.

தில்லை வனத்துள் எம்பிரான் ஆடிய மேடை அம்பலம் அல்லது மன்றம் எனப்படும். அம்பரம்- ஆகாசம்.ரகரவொற்று இங்கு லகரவொற்றாகத் திரிந்து, அம்பரம் அம்பலம் ஆயிற்று. இது வெட்டவெளி. மன்று என்பது கூத்தாடும் மேடை. இது எவ்விடத்துள்ளாரும் கூத்தினைக் கண்டின்புறுமாறு உயரமான, நாற்றிசையும் திறந்த வெளி. இவ்வெளி காலப்போக்கில் மூன்று திசைகள் அடைக்கப்பட்டுளதாயிற்று.

நெல்லுக்குப் பாயும் நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசிவது போலவும், நல்லார் ஒருவருளரேல் அவர் பொருட்டுப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயன்படுவது போலவும் இவ்விருவருக்கும் வெளிப்பட்ட திருக்கூத்து மையல் வாழ்வில் உழலும் நமக்கும் கிடைத்தது.



இருமுனிவரும் செய்தருளிய உபகாரங்கள் பல. தனக்கெனத் திருமேனியில்லாத பரம்பொருளைத் தன் கருணையையே திருவுருவாக, அத் திருமேனி கொண்டு ஆடலைக் கண்டவர்க்கெல்லாம் முத்தி கிடைக்க அருள் செய்தனர். தேவர் முதலிய நம்மினும் பெரியர் யாராலும் செய்விக்க முடியாத பெருமானின் திருக்கூத்தை நம்பொருட்டு மண்ணின்மேல் தில்லையில் நிகழச் செய்தனர். அதனால் கயிலைமலையைக் காட்டிலும் தில்லை வனத்தை உயரச் செய்தனர். தில்லைத் திருக்கோவில் வழிபாட்டுப் பூசாவிதி, நித்திய நைமித்திய காமிய உற்சவ விதிகளைப் பதஞ்சலி பத்ததி எனும் நூலாக உதவினர். உலகில் உள்ள சிவாலயங்களிலெல்லாம் பொருந்தி உயிர்களுக்கு அருள்செய்யும் சிவகலைகள் அனைத்தும் அர்த்தசாம பூசையின்போது தில்லையில் வந்து குவியும்படி செய்தனர். தில்லையில் அர்த்தசாமபூசையை வாழ்வில் ஒருமுறையேனும் கண்டு அனுபவிக்க வேண்டும்.


சிதம்பரத்துக்குச் சென்று வழிபடுவோர் பலருக்கும் பதஞ்சலி வியாக்கிரபாதர் பற்றிய அறிவோ நினைவோ இருப்பதில்லை. தில்லைக்கூத்தினைக் கண்டு வணங்குமுன் அக்கூத்தினை நமக்குக் காட்டியருளிய இம்முனிவர் இருவரையும் நன்றியுடன் நினைவு கூர்தல் வேண்டும். ஆகையால் இவ்விருவரும் மறக்கொணா இருவராவர். 
திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக