வியாழன், 27 அக்டோபர், 2016

அர்த்தமுள்ள இந்துமதம் - கனவுகள்-கவியரசு கண்ணதாசன்


அர்த்தமுள்ள இந்துமதம் - கனவுகள்-கவியரசு கண்ணதாசன்


    ஆண்டாள் கனவு காண்கிறாள்; அற்புதமான கனவு; இனிமையான கனவு. கலியாணமாகாத ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு. நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கனவு காண்பதிலே தான் எவ்வளவு சுகம்!


இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.

பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை.    `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!

நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”

- “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?

ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;

அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;

தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

ஒளி மிகுந்த தீபங்களைக் கையிலேந்திக் கொண்டு சதிராடும் இளமங்கையர் வந்தார்கள். அவனை எதிர்க்கொண்டார்கள். அந்த மதுரையார் மன்னர், மாயக் கண்ணன், எனது பாதத்திலிருந்து உச்சிவரை உடம்பே அதிர்ந்து போகுமாறு புகுந்ததாகக் கனவு கண்டேன். அந்த மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டேன். அடி தோழி! என் கனவு நனவாகும்.”

- ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!

இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.

இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.

என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்கரசு இப்பொழுது சிங்கப்பூரில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். சாந்தி மா. கணபதி என்ற நண்பர், 1960-ல் காலமானார். ஒருநாள் காலையில், காந்தியடிகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக எனக்கொரு கனவு வந்தது. காலையில் எல்லாரிடத்திலும் அதைச் சொன்னேன்.    “சீ சனியனே! உன் கருநாக்கை வைத்துக்கொண்டு சும்மாயிரு. எதையாவது உளறித் தொலைக்காதே” என்று எல்லாரும் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். அன்று மாலை வானொலி கண்ணீரோடு ஒரு செய்தியைச் சொன்னது, “காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று. எனது நண்பர்கள் திகைத்துப் போனார்கள்; என்னை எச்சரித்தார்கள். “இதோ பார்! நீ கனவு கண்டதாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டாகள். இதிலே உனக்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே, வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு” என்றார்கள். எனக்கு, அந்தப் பயம் தெளியவே வெகு நாளாயிற்று. சில கனவுகள் ஆணியடித்தாற்போல் எதிர்மறை பலன்களைக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, என் கனவில் மலம் வந்தால் மறுநாள் எங்கிருந்தாவது பணம் வருகிறது. நூற்றுக்கணக்கான முறை அந்தக் கனவைக் கண்டு மறுநாளே பலனடைந்திருக்கிறேன். பல் விழுவதாகக் கனவு கண்டால், மறுநாளே என்மீது கோர்ட்டில் புது வழக்கு வருகிறது. இருபது வருடங்களாக அடிக்கடி நான் படிப்பது போலக் கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்தக் கனவு வந்த பிறகு என் புகழ் உயர்ந்து வந்திருக்கிறது. பல தடவை ரயிலுக்குப் போகும்போது ரயிலைத் தவற விடுவதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவதொரு நல்ல சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். உயரமான இடத்தில் ஏறி இறங்க முடியாமல் தத்தளிப்பதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் வந்து தீர்க்க முடியாமல் கலங்கியிருக்கிறேன்.

ஏறிய உயரத்திலிருந்து மளமளவென்று இறங்கி வருவது போலக் கனவு கண்டால், வந்த சிக்கல் தீர்ந்து விடுகிறது. கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடிந்து போவது போல் கனவு கண்டால், பணம் செலவழிந்து போகிறது. 1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தோற்றுப் போவதையே கனவில் கண்டேன். ஒரு கோட்டை!

நானும் மற்ற காங்கிரஸ் நண்பர்களும் அங்கே நிற்கிறோம். மூவேந்தர் காலத்து ஆடை அணிந்து, தி.மு. கழக நண்பர்களெல்லாம் படைகள் போல வந்து, அந்தக் கோட்டையைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அந்தக் கனவைப் பற்றி அப்பொழுதே எனது நண்பர்கள் பலரிடமும் கூறினேன்; அது பலித்து விட்டது. 1971- ஆம் ஆண்டுத் தேர்தலில் யானை என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்து, எனக்கு மாலை போடுவது போலக் கனவு கண்டேன். அந்தத் தேர்தலில் நான் சார்ந்திருந்த இந்திரா காங்கிரசுக்குப் பலத்த மெஜாரிட்டி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மலை மீது நான் சுற்றி வருவதாகவும், அந்த மலையில் எங்கும் நாமம் போட்டிருக்கவும் கனவு கண்டேன். திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தேன். பல தொல்லைகள் மளமளவென்று தீர்ந்தன. அதன் பிறகுதான், “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா” என்ற பாட்டை எழுதினேன். என் கனவில் கண்ணன் அடிக்கடி வருகிறான்; ஆனால் என்னோடு பேசுவதில்லை. ஒருவேளை இது என் நினைவின் எதிரொலியாக இருக்கலாம். தி.மு.க. விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான் கூட்டத்திற்குச் செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார்க் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவுதான், என்றாலும் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலையே அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாகக் கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன்னாலும் காட்சியளித்தன. வாய் நிறைய ரோமம் இருப்பதாகவும், அது இழுக்க இழுக்க வந்து கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.

அப்பொழுதெல்லாம் தொல்லை மாற்றித் தொல்லை வரும்.

சிவனடியார்களின் கனவில் ஆண்டவன் வந்து, `இந்த இடத்துக்கு வா’ வென்று சொன்னதாகவும் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அமைதி கொண்டதாகவும் செய்திகள் படிக்கிறோம். அவை பொய்யல்ல என்றே நான் நினைக்கிறேன். `நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலிக்கின்றன’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தக் கனவுகளை நாம் வரவழைக்க முடியாது. அவை ஆண்டவன் போட்டுக் காட்டும் படங்கள்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை. சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக