கல்விக்கரசியின் காலடி பணிவோம்:
சமஸ்கிருத கவிஞரான ஸ்ரீஹர்ஷர். நளதமயந்தி சரித்திரத்தை 'நைஷதம்' என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் எழுதினார். நிஷத நாட்டு (நிடதநாடு) மன்னனான நளனின் கதையைச் சொல்வதால் இந்த நுாலுக்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
ஸ்ரீஹர்ஷரின் தந்தை ஒரு வித்வான். அவர் ஒருமுறை தன் நாட்டுக்கு வந்த மற்றொரு வித்வானுடன் நடந்த வாதப் போட்டியில் தோற்றார். தன்னால் நாட்டின் மானம் போனதாகக் கருதிய அவர், அந்தக் கவலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். இறக்கும் தருவாயில் தன் மனைவி மாமல்ல தேவிக்கு, 'சிந்தாமணி' என்னும் மந்திரத்தை உபதேசித்தார். அதை முறைப்படி ஜபிப்பவர்கள், கலைவாணியின் அருள் பெற்று சிறந்த கல்விமான் ஆவார்கள் என சொல்லி விட்டு உயிர்விட்டார்.
தன் மகனை, இந்த மந்திரத்தின் மூலம் மிகப்பெரிய வித்வானாக்க முடிவெடுத்தாள்
மாமல்லதேவி. குழந்தை ஸ்ரீஹர்ஷரை, தன் மார்பில் போட்டு, அதன் காதில் இந்த மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தாள். நம் வீட்டுக்குழந்தைகளுக்கு 'அம்மா... அப்பா' என்று சொல்லிக் கொடுத்தால், அவர்கள் அதைத் திருப்பிச் சொல்வார்கள் இல்லையா! அதுபோல, ஹர்ஷரும்
சிந்தாமணி மந்திரத்தை மழலை மொழியில் ஓதத் துவங்கினார்.
இந்த திகில் மந்திரத்தை ஒரு பிணத்தின் மீது அமர்ந்து கொண்டு சொன்னால், உடனே அந்த
மந்திரத்தின் பலன் கிடைத்து விடும். இதற்காக அவள் தன் கழுத்தில் சுருக்கு மாட்டி, தன்னையே அழித்துக் கொண்டாள். அம்மா இறந்து கிடப்பதை அறியாத அந்தக் குழந்தை, வழக்கம் போல் அவள் மார்பில் படுத்துக் கொண்டே மந்திரத்தை உச்சரித்தது. சரஸ்வதியும் அந்தக் குழந்தை மாபெரும் வித்வானாக்க அருள் புரிந்து விட்டாள்.
சரஸ்வதியின் அருளால், ஸ்ரீஹர்ஷர் எதிர்காலத்தில் மாபெரும் கவியானார். நைஷத
காவியத்தை எழுதினார். தான் பெற்ற சிந்தாமணி மந்திரம் பற்றியும், அதனால் அடைந்த
நன்மைகள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். தமயந்தியின் இஷ்ட தெய்வம் சரஸ்வதி என்று இந்த நுாலில் வருகிறது. அவளுக்கு சுயம்வரம் நடந்த போது, தேவர்கள் நளன் போல
உருவத்தை மாற்றி வரவே, உண்மையான நளன் என யார் என தெரியாமல் திண்டாடினாள்.
அப்போது சரஸ்வதியே அவளோடு இருந்து, தன் வார்த்தை ஜாலம் மூலம் உண்மையான நளனை அடையாளம் காட்டினாள்.
'தேவர்களுக்கு கால் பூமியில் படாது. மனிதர்களின் கால் படும்' என்று சூசகமாக, அவளுக்கு
எடுத்துரைத்தாள். அதைக் கொண்டு, நிஜ நளனை அவள் அடையாளம் கண்டு கொண்டதாக
எழுதியிருக்கிறார். தன் குழந்தையின் கல்வி அறிவுக்காக மாமல்லதேவி தன் உயிரையே தியாகம் செய்தாள். இதுபோல் தான் ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளின்
கல்விக்காக, தங்களது தேவைகளைச் சுருக்கிக் கொண்டு, அவர்களுக்காக செலவழிக்கிறார்கள்.
மாணவர்கள் இதை உணர்ந்து தங்கள் பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் வகையில்
சிறப்பாகப் படித்து, அவர்களுக்கு கவுரவத்தை தேடித் தர வேண்டும்.
கொண்டைக்கடலை ரகசியம்
தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், சரஸ்வதிக்கு கொண்டைக்கடலை நைவேத்யமும் செய்கின்றனர். கொண்டைக் கடலை உயிர் காக்கும் சத்து கொண்டது.
ஒருவரது ஜாதகத்தில் குரு பலம் இல்லையென்றால், அவ-ரது உயிருக்கு பாதகம் வரலாம்.
எனவே குரு பார்வை வேண்டி குருவுக்கும், குருவின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கும்
கொண்டைக்கடலை மாலை படைத்து தீர்க்காயுள் கிடைக்க வேண்டுகின்றனர். மேலும் மனித வாழ்வின் உயிர்நாடி கல்வி. அந்த கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதிக்கு கொண்டைக் கடலை நைவேத்யம் செய்கிறோம். சரஸ்வதியும், தட்சிணாமூர்த்தியும் ஜபமாலை, ஏட்டுச்சுவடிகளை வைத்துள்ளனர். மனத்துாய்மை, சாந்தம் ஆகிய உயர்குணங்களை உணர்த்தும் வகையில் ஸ்படிக மாலை, ஜடாமகுடம், சந்திரக்கலை ஆகியவற்றையும் பெற்றுள்ளனர்.
சகல வரமும் அருள்வாய் சகலகலாவல்லியே!
கலைமகளை வணங்கும் விதத்தில் இந்த வழிபாடு தரப்பட்டுள்ளது.
* வெண்தாமரையில் இருப்பவளே! அறுபத்துநான்கு கலைகளுக்கும் தலைவியே! பிரம்மாவின்
துணைவியே! வேதங்களால் போற்றப்படுபவளே! அன்னத்தில் அமர்ந்திருப்பவளே! கவிஞர் களின் உள்ளத்தில் வசிப்பவளே! சரஸ்வதி தாயே! எங்களுக்கு கல்விச் செல்வத்தைத் தந்தருள வேண்டும்.
* வெண்ணிற ஆடை உடுத்தியவளே! ஸ்படிக மாலை அணிந்தவளே!
அறியாமையைப் போக்குபவளே! வீணை ஏந்தியவளே! நல்லவர் நாவில்
குடியிருப்பவளே! கலைவாணியே! சகலகலாவல்லியே! அறிவுத் திருக்கோவிலே!
மாணவர் தெய்வமே! எங்களுக்கு புத்தி தெளிவையும், கல்வியறிவையும் தந்தருள வேண்டும்.
* பூங்கொடியே! நவரத்தினத்தில் முத்தாக ஒளிர்பவளே!
நாவுக்கரசியே! வித்தைகளின் இருப்பிடமே!
ஞானத்தின் வடிவமே! வித்யாதேவியே! கலைமகளே!
சொல்லுக்கு அரசியே! பாரதி எனப் பெயர் பெற்றவளே!
சரஸ்வதி தாயே! உன்னை வணங்குகிறோம்.
* கலைஞானவல்லியே! வாகீஸ்வரியே! மூவுலகையும் படைத்துக் காப்பவளே! கவிதை புனையும் ஆற்றல் தருபவளே! மூங்கில் போன்ற தோள்களைக் கொண்டவளே! குயில் போல
இனிய குரல் பெற்றவளே! நிலா போல் ஒளிமுகம் கொண்டவளே! எங்களுக்கு நல்வாழ்வு
தந்தருருள வேண்டும்.
மாணவர்களுக்கான கோவில்
சிவபெருமானை அலட்சியப்படுத்தும் விதமாக தட்சன் ஒரு யாகம் நடத்தினான். சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர் யாகத்தை அழித்ததுடன், யாகத்தை முன்னின்று நடத்திய பிரம்ம தேவனையும் தண்டித்தார். மேலும் அவரது மனைவியான கலைமகளின் மூக்கினையும் அரிந்தார். பயந்து நின்ற அவள் தன் கணவன் பிரம்மனுடன் சீர்காழி சென்று சிவனை வழி பட்டாள். இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர், 'நாவினாள் மூக்கரித்த நம்பர்' என்று குறிப்பிடு கிறார்.
மேலும், 'நாவியலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலங்கோயில்' என்றும் பாடியுள்ளார். சீர்காழி ஒரு கல்வித்தலம் ஆகும். மாணவர்கள் சீர்காழி சென்று, அங்கு அருள்புரி யும் தோணியப்பர், திருநிலை நாயகி, சம்பந்தர் ஆகியோரை வணங்கி வந்தால் கல்வியில்
சிறப்பிடம் பெறலாம். சம்பந்தருக்கு, இத்தலத்தில் தான் அம்பிகை தாயாக இருந்து பால் கொடுத்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக