செவ்வாய், 27 அக்டோபர், 2015


நின்றசீர் நெடுமாற நாயனார் இன்று (28.10.2015) திரு நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம். பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, கூன்பாண்டியரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே பொய்மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தும், சோழராஜாவுடைய புத்திரியாருஞ் சைவசிகாமணியுமாகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும் குலச்சிறைநாயனாரை மந்திரியாராகவும் பெற்றிருந்தமையால், சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு பொர வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசியற்றிக் கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார். இவ்வளவுக்குச் சிவனன்பிற் சிறந்திருந்த நெடுமாற நாயனார் சிவதொண்டுக்குரிய சகல துறைகளும் மேலோங்கத்தக்க வாறாக அரசியற்றி உய்வுற்றார். அது, "வளவர்பிரான் திருமகளார் மங்கையர்க்கரசியார் களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார் இளவர வெண்பிறை யணிந்தார்க் கேற்ற திருத்தொண்டெல்லாம் அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்" என அவர் புராணத்தில் வரும். ஆகவே, அவர் வரலாறு சார்ந்த இத்தகு மகிமைகளினால் அவர் சீர் சைவவுலகில் என்றைக்கும் நின்ற சீர் ஆதல் பெறப்படும் என்க. திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக