செவ்வாய், 6 அக்டோபர், 2015


https://vpoompalani05.files.wordpress.com/2015/10/manickavasagar_1.jpg?w=200 மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி) சென்ற தொடரில் திருக்கோவை என்பதன் விளக்கம் பற்றி பார்த்தோம். இப்பகுதியில் மாணிக்க வாசகரின் திருக் கோவையின் பாடல்களின் சிறப்பு பற்றி காண்போம். இயற்கை புணர்ச்சி பாடல் எண் : 1 திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே இதன் பொருள்:திருவளர் தாமரை திருவளருந் தாமரைப் பூவினையும்; சீர்வளர் காவிகள் அழகு வளரு நீலப் பூக்களையும்; ஈசர்தில்லைக் குருவளர் பூ குமிழ் ஈசர் தில்லைவரைப்பின் கணுண்டாகிய பூங்குமிழினது நிறம்வளரும் பூவினையும்; கோங்கு கோங்கரும்புகளையும்; பைங்காந்தள் கொண்டு செவ்விக் காந்தட்பூக்களையும் உறுப்பாகக் கொண்டு; ஓங்கு தெய்வ மரு வளர் மாலை ஒர் வல்லியின் ஒல்கி மேம்பட்ட தெய்வ மணம் வளரும் மாலை ஒருவல்லிபோல நுடங்கி; அன நடை வாய்ந்து அன்னத்தினடைபோல நடைவாய்ந்து; உரு வளர் காமன்தன் வென்றிக் கொடி போன்று ஒளிர்கின்றது வடிவுவளருங் காமனது வெற்றிக் கொடி போன்று விளங்காநின்றது; என்ன வியப்போ! என்றவாறு. திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந்தன்மை நோக்கம் என்றவாறு. திருமகடங்குந் தாமரையெனினுமமையும். பூங்குமி ழென்பது, முதலாகிய தன் பொருட்கேற்ற அடையடுத்து நின்ற தோராகுபெயர். ஈசர் தில்லையென்பதனை எல்லாவற்றோடுங் கூட்டுக. பல நிலங்கட்குமுரிய பூக்களைக் கூறியவதனால், நில மயக்கங் கூறியவாறாயிற்று. ஆகவே, பல நிலங்களினுஞ் சென்று துய்க்கு மின்பமெல்லாந் தில்லையின் வாழ்வார் ஆண்டிருந்தே துய்ப்ப ரென்பது போதரும். போதர, இம்மையின்பத்திற்குத் தில்லையே காரணமென்பது கூறியவாறாயிற்று. ஆகவே, ஈசர் தில்லை யென்றதனான், மறுமையின்பத்திற்குங் காரணமாதல் சொல்லாமையே விளங்கும். செய்யுளாதலாற் செவ்வெண்ணின்றொகை தொக்கு நின்றது. ஓங்கு மாலையெனவியையும். தெய்வ மருவளர்மாலை யென்றதனால், தாமரை முதலாயினவற்றானியன்ற பிறமாலையோடு இதற்கு வேற்றுமை கூறியவாறாம். வாய்ந்தென்பது நடையின் வினையாகலாற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்தது. உருவளர்காமன்றன் வென்றிக் கொடியென்றது நுதல் விழிக்குத்தோற்று உருவிழப்பதன் முன் மடியாவாணையனாய் நின்றுயர்த்த கொடியை. அன நடைவாய்ந்தென்பதற்கு அவ்வவ் வியல்பு வாய்ப்பப் பெற்றெனினுமமையும். திருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மைநோக்க மென்றது அழகு. இஃதென் சொல்லியவாறோவெனின், யாவ னொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன்மேலவற்கு விருப்பஞ்சேறல் அதனிற் சிறந்தவுருவும் நலனும் ஒளியுமெவ்வகையானும் பிறிதொன்றற்கில்லாமையால், திரு வென்றது அழகுக்கே பெயராயிற்று. அங்ஙனமாயின் இது செய்யுளினொழிய வழக்கினும் வருவதுண்டோவெனின், உண்டு; கோயிலைத் திருக்கோயிலென்றும், கோயில் வாயிலைத் திருவாயி லென்றும், அலகைத் திருவலகென்றும், பாதுகையைத் திருவடிநிலை யென்றும் வழங்கும் இத்தொடக்கத்தன வெல்லாந் திருமகளை நோக்கியெழுந்தனவல்ல. அது கண்டவனுடைய விருப்பத்தானே யெழுந்தது. ஆதலானுந் திருவென்பது அழகென்றே யறிக. அதனாற்றிருவென்பது கண்டாரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமே. அல்லதூஉந் தான் கண்டவடிவின் பெருமையைப் பாராட்டுவானாகலான், ஒருத்தியிருந்த தவிசை இவளுக்கு முகமாகக் கூறுதல் வழுவாம். ஆதலாற் றான்கண்ட வடிவினுயர்ச்சியையே கூறினானாமெனக் கொள்க. இனித் திருவளர்தாமரை சீர்வளர்காவி யென்றனபோல இதனையுங் குருவளர் குமிழென்னாது பூங்குமிழென்ற தெற்றிற் கெனின், முன்னும் பின்னும் வருகின்ற எண்ணிற் பூவைநோக்கியன்று, ஈண்டுச்செய்யுளின்பத்தை நோக்கியும் இதற்காகுபெயரை நோக்கியு மெனவறிக. அஃதென்போலவெனின், ``தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்`` (முல்லைக்கலி-1) என்பது போல. கோங்கென இதனை யொழிந்த நான்கிற்கு மடைகொடுத்து இதற்கடை கொடாதது பாலை நிலஞ் சொல்லுதனோக்கி. என்னை, பாலைக்கு நிலமின்றாகலான். ஆயின் மற்றைய நிலம்போலப் பாலைக்கு நிலமின் மையாற் கூறினாராகின்றார் மகளிர்க் குறுப்பிற் சிறந்தவுறுப்பாகிய முலைக்கு வமையாகப் புணர்க்கப்பட்ட கோங்கிற்கு அடைகொடுக்கக் கடவதன்றோவெனின், அடைகொடுப்பிற் பிறவுறுப்புக்களுடன் இதனையுமொப்பித்ததாம். ஆகலான் இதற்கடைகொடாமையே முலைக்கேற்றத்தை விளக்கி நின்றது, அஃது முற்கூறிய வகையில் திருக்கோயில் திருவாயில் திருவலகு என்றவற்றிற்கு அடைகொடுத்து நாயகராகிய நாயனாரைத் திருநாயனாரென்னாதது போலவெனக் கொள்க. இனி உடனிலைச் சிலேடையாவது ஒரு பாட்டிரண்டு வகையாற் பொருள் கொண்டு நிற்பது. அவ்விரண்டனுள்ளும் இத்திருக் கோவையின்கணுரைக்கின்ற பொருளாவது காமனது வென்றிக் கொடிபோன்று விளங்கி அன்னநடைத்தாய்த் தாமரையே நெய்தலே குமிழே கோங்கே காந்தளே யென்றிப்பூக்களாற் றொடுக்கப் பட்டோங்குந் தெய்வமருவளர்மாலையின் வரலாறு விரித்துரைக்கப் படுகின்றதென்பது. என்றது என்சொல்லியவாறோ வெனின், தாமரை மருதநிலத்துப்பூவாதலான் மருதமும், நெய்தல் நெய்தனிலத்துப் பூவாதலான் நெய்தலும், குமிழ் முல்லைநிலத்துப் பூவாதலான் முல்லையும், கோங்கு பாலைநிலத்துப் பூவாதலாற் பாலையும், காந்தள் குறிஞ்சி நிலத்துப் பூவாதலாற் குறிஞ்சியுமென இவ்வைந்து பூவினாலும் ஐந்திணையுஞ் சுட்டினார். ஆகலாற்றா மெடுத்துக் கொண்ட அகத்தமிழின் பெருமைகூறாது தில்லைநகரின் பெருமை கூறினார், நிலமயக்கங் கூறுதலான். அற்றன்று அஃதே கூறினார். என்னை, சொல்லின் முடிவினப் பொருண் முடித்த லென்னுந் தந்திரவுத்தியாற் புணர்தலும் புணர்தனிமித்தமுமாகிய குறிஞ்சியே கூறினார். என்னை, பைங்காந்தளென்று குறிஞ்சிக்குரிய பூவிலே முடித்தலான். அன்றியும் பூவினானே நிலமுணர்த்தியவாறு இத்திருக்கோவையின்கண் முன்னர்க் ``குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய்`` (தி.8 கோவை பா.205) என்னும் பாட்டினுட் கண்டு கொள்க. அல்லதூஉஞ் ``சினையிற்கூறு முதலறிகிளவி`` (தொல் - வேற்றுமைமயங்கியல் - 31) என்னுமாகு பெயரானுமாம். ஆயின் குறிஞ்சியே கூறவமையாதோ நிலமயக்கங் கூறவேண்டியது எற்றிற்கெனின், ஓரிடத்தொரு கலியாணமுண்டா னால் எல்லாரிடத்து முண்டாகிய ஆபரணங்களெல்லாம் அவ்விடத் துக்கூடி அக்கலியாணத்தைச் சிறப்பித்தாற்போலப் பல நிலங்களும் இக்குறிஞ்சியையே சிறப்பித்து நின்றன. உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையின், அன்பினானே நிகழ்ந்த காமப் பொருளைச்சுட்டினார். யாருங்கேட்போரின்றித் தன்னெஞ்சிற்குச் சொன்னமையின், கந்தருவரொழுக்கத்தையே யொத்த களவொழுக் கத்தையே சுட்டினார். ஈசர்தில்லை யென்றமையின், வீடுபேற்றின் பயத்ததெனச் சுட்டினார். களவொழுக்கமென்னும் பெயர்பெற்று வீடுபேற்றின் பயத்ததாய் அன்பினானிகழ்ந்த காமப்பொருணுதலிக் கந்தருவ ரொழுக்கத்தோடொத்துக் காமனது வென்றிக்கொடிபோன்று ஐந்திணையின்கண்ணும் வென்று விளங்காநின்ற கடிமலர்மாலையின் வரலாறு இத்திருக்கோவையின்கணுரைக்கப்படுகின்றதென்றவாறு. களவொழுக்கத்தினை ஒரு மாலையாகவுட்கொண்டு உருவகவாய் பாட்டா னுணர்த்தினாரென்பது. இன்பத்தை நுதலியதென்றா ராயினும், இன்பந் தலைக்கீடாக அறம் பொருள் இன்பம் வீடென நான்கு பொருளையும் நுதலிற்று. அவற்றுள் வீடுநுதலியவாறு மேலே சொன்னோம். ஒழிந்த மூன்றனையும் நுதலிய வாறென்னையெனின், ஈண்டுத் தலைமகனும் தலைமகளுமென்று நாட்டினார். இவனுக்கு ஆண்குழுவினுள் மிக்காருமொப்பாருமில்லை இழிந்தாரல்லது; இவளுமன்னள். இவர் ஒருவர்கண்ணொருவர் இன்றியமையாத அன்புடையராகலான், இவர்கண்ணே அம்மூன்றுமுளவாம். இவ் வொழுக்கத்தினது சுவைமிகுதி கேட்கவே விழைவு விடுத்த விழுமி யோருள்ளமும் விழைவின்கட்டாழுமாதலின், காமனது வென்றிக் கொடியெனவே வென்றிகொள்ளாநின்றது என்றானென்பது. முதற்கட் கிடந்த இப்பாட்டுக் காட்சியின்மேற்று. இப்பாட்டால் வேட்கை இவன்கணுண்டாயவாறென்னை பெறுமாறெனின், உருவளர் காமன்றன் வென்றிக்கொடியென்றமையிற் பெற்றாம். உவகைமிகுதியாற் சொன்னானாகலின், இப்பாட்டிற்கு மெய்ப்பாடு: உவகை. உவகையாவது சிருங்காரம்; அது காமப் பொருண் முதலாய வின்பத்தின்மேற்று. உவகையென்பது காரணக்குறி, உவப்பித்தலினுவகையாயிற்று. உவந்த நெஞ்சினனாய் அவளையோர் தெய்வப் பூமாலையாக வுருவகங்கொண்டு காமனது வென்றிக்கொடியோடுவமித்துச் சொன்னானென்பது. என்னை மாலையாமாறு, பூப்புனை மாலையு மாலைபுனை மாதருந் தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியுங் கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும் -திவாகரம், 11ஆவது என்பதனாற் பெண்ணுக்கு மாலையென்று பெயராயிற்று. ஆயின் யாரொருவரையுங் கேசாதி பாதமாதல் பாதாதிகேசாமாதல் வருணிக்கவேண்டும். அவற்றுள், இது கேசாதிபாதமாக வருணிக்கப் பட்டது. என்னை, திருவளர் தாமரை யென்று முகமுதலாகவெடுத்துக் கொண்டு அன்னநடையென்று பாதத்திலே முடித்தலான். ஆயின், இதில் நடைகண்டானாயின் மேல் ஐயநிலையுணர்த்தல் வழுவா மெனின், இவன் நடைகண்டானல்லன், இம்மாலை நடக்குமாயின் அன்னநடையையொக்குமென்றான். வாய்ந்தென்பது நடையின் வினையாகலிற் சினைவினைப்பாற்பட்டு முதல்வினையோடு முடிந்த தென்றது அன்னத்திற்குச்சினை கால், காலிற்கு வினை நடை, ஆகையால் முதலென்றது அன்னத்தை. அங்ஙனமுவமித்துச் சொன்னதனாற் பயன் மகிழ்தல். என்னை, ``சொல்லெதிர் பெறாஅன் சொல்லியின் புறுதல், புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே`` (தொல். பொருள். அகத்திணை - 50) என்று அகத்திணையியற் சூத்திரத்திற் சொன்னாராகலினென்பது. அஃதேல் உவகையென்னும் மெய்ப்பாட்டானே மகிழ்ச்சி பெற்றாம். இனியிச்சொற்கள் விசேடித்து மகிழ்வித்தவா றென்னை யெனின், நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து தான் வேட்ட பொருள் வயிற் றன்குறிப்பன்றியேயுஞ் சொன்னிகழும்; நிகழுந் தோறும் மகிழ்ச்சி தோன்றுமென்பது. என்போல வெனின், ஒருவன் தான்வழிபடுந் தெய்வத்தைப் பரவிய செய்யுட்களை யோதியுணர்ந் திருந்தானெனினும், அவற்றான் அத்தெய்வத்தை வழிபடும்போழ்து கண்ணீர்வார்ந்து மெய்ம்மயிர் சிலிர்ப்பக் காண்டும். அல்லதூஉஞ் சுற்றத்தாரது சாக்காடு முற்றவுணர்ந்தானேயெனினுஞ் செத்தாரிடனாக உரையாடினபொழுது துன்பமீதூரக் கலுழக்காண்டும்; இவை போலவென்பது. ஆகலின் நினைப்பின்வழியதுரையாயினும் நினைப்பின் உரைப்பயன் விசேடமுடைத்தென்பது. நெஞ்சின்மிக்கது வாய்சோர்ந்து சொன்னிகழுமென்பதனை இக்கோவையின் எண்வகை மெய்ப்பாட்டின்கண்ணுந் தந்துரைத்துக் கொள்க. பயனென்பது நெஞ்சினடுத்ததோர் மெய்ப்பாடு காரணமாகத் தன்வயினிகழ்ந்த சொல்லானெய்துவது. மெய்ப்பாடென்பது புறத்துக் கண்டதோர் பொருள் காரணமாக நெஞ்சின் கட்டோன்றிய விகாரத்தின் விளைவு. எழுவாய்க் கிடந்த இப்பாட்டு நுதலிய பொருள் பொழிப்பினாலுரைத்தாம். நுண்ணிதாக வுரைப்பான்புகின் வரம் பின்றிப் பெருகுமென்பது. நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே இதன் பொருள்: சிற்றம்பலத்து நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்தின்கண் நிருத்தத்தை யிடைவிடாதே யாடியவன்; நெற்றித் தனிக்கண் ஒருத்தன் நெற்றியிலுண்டாகிய தனிக்கண்ணை யுடைய ஒப்பிலாதான்; பயிலும் கயிலை மலையின் உயர் குடுமி அவன் பயிலுங் கயிலையாகிய மலையினது உயர்ந்தவுச்சியில்; திருத்தம் பயிலும் சுனை குடைந்து ஆடி புண்ணிய நீர் இடையறாது நிற்குஞ் சுனையைக் குடைந்தாடி; சிலம்பு எதிர் கூய் சிலம்பிற் கெதிரழைத்து; வருத்தம் பயின்று கொல்லோ இவ்வாறு வருத்தத்தைச் செய்யும் விளையாட்டைப் பயின்றோ பிறிதொன்றி னானோ; வல்லி மெல்லியல் வாடியது வல்லிபோலும் மெல்லிய வியல்பினை யுடையாள் வாடியது குறைநயப்பு கூறல்; தாதேய் மலர்க்குஞ்சி யஞ்சிறை வண்டுதண் டேன்பருகித் தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலொருவர் மாதே புனத்திடை வாளா வருவர்வந் தியாதுஞ்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே இதன் பொருள்: மாதே மாதே; தாது ஏய் மலர்க் குஞ்சி அம் சிறை வண்டு தண் தேன் பருகி தாதுபொருந்திய மலரையுடைய குஞ்சிகளின்கண் அழகிய சிறகையுடைய வண்டினங்கள் தண்டேனைப் பருகி; தேதே எனும் தில்லையோன் சேய் என தேதேயெனப்பாடுந் தில்லையையுடையானுடைய புதல்வனாகிய முருகவேளென்றே சொல்லும் வண்ணம்; சின வேல் ஒருவர் புனத்திடை வாளா வருவர் சினவேலையுடையாரொருவர் நம்புனத்தின்கண் வாளா பலகாலும் வாராநிற்பர்; வந்து யாதும் சொல்லார் வந்து நின்று ஒன்று முரையாடார்; மது வார்குழல் ஏந்திழையே மதுவார்ந்த குழலை யுடைய ஏந்திழாய்; செயத் தக்கது யாதே - அவரிடத்து நாஞ்செய்யத் தக்கது யாதென்றறிகின்றிலேன் எ-று. குஞ்சி தில்லை வாழ்வார் குஞ்சி; மலரினது குஞ்சியென விரித்து அல்லியென்றுரைப்பி னுமமையும். சேயோடொத்தல் பண்பு வடிவுமுதலாயினவும், சினவேலேந்தி வரையிடத்து வருதலுமாம். வேட்டைமுதலாகிய பயன்கருதாது வருவரென்பாள், வாளா வருவரென்றாள். முகம்புகுகின்றாளாதலின், பின்னும் ஏந்திழையே யென்றாள். சேயென்புழி எண்ணேகாரந் தொக்குநின்றது; என்னை, மேலே ``புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள் கொல்` மணம் சிறப்புரைத்தல் பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே இதன் பொருள்: சந்த புரை மேகலையாய் நிறத்தையுடைய வுயர்ந்த மேகலையையுடையாய்; எவர்க்கும் முன்னாம் அரசு அரியயன் முதலாகிய யாவர்க்கும் முன்னாயிருக்குமரசு; அம்பலத்து நின்று ஆடும் பிரான் இவ்வாறு பெரியனாயினும் எளியனாய் அம்பலத்தின்கண் எல்லாருங்காண நின்றாடுமுதல்வன்; அருள் பெற்றவரின் துயர் தீர அவனதருளுடையவரைப்போல நாந்துயர்தீர; புகுந்து நின்று நம்மில்லின்கட் புகுந்துநின்று; பிரசம் திகழும் வரை புரை யானையின் பீடு அழித்தார் முரசம் திகழும் பெருந்தேன் றிகழு மலை போலும் யானையினது வலியை நங்காரணமாக வழித்தவரது முரசு முழங்கி விளங்காநின்றது; முருகியம் நீங்கும் அதுவேயுமன்றி, வெறி காரணமாக ஒலிக்கும் முருகியமும் நீங்காநின்றது; இனியென்ன குறையுடையோம் ? எ-று. புகுந்துநின்று திகழுமெனக் கூட்டுக. வரையுயர்யானை யென்பதூஉம் பாடம். முருகுங் கமழுமென்று பாடமோதி, கலியாணத்திற் குறுப்பாம் நறுவிரை நாறாநின்றனவென் றுரைப்பாரு முளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை மகிழ்வித்தல். பரத்தையர் உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே இதன் பொருள்: உடுத்து அணி வாள் அரவன் தில்லை ஊரன் வரகச்சாகவும் உடுத்து அணியாகவுமணிந்த வாளரவை யுடையவனது தில்லைக்கணுளனாகிய வூரன் இவ்வீதிக்கண்வர; எடுத்து அணி கை ஏறு இன வளை ஆர்ப்ப தெரிந்தணியப்பட்ட கைக்கணுளவாகிய இனவளைகளொலிப்ப; இள மயில் ஏர் கடுத்து இளமயிலதெழிலை யொத்து; அணி காமர் கரும்புருவச் சிலை கண் மலர் அம்பு அடுத்து மிக்கவழகையுடைய கரியபுருவமாகிய வில்லோடு கண் மலராகிய வம்பைச்சேர்த்தி; அணிவாள் இளையோர் ஒருங்கே சுற்றும் மாதிரம் பற்றினர் அணிகளுண்டாகிய வொளியையுடைய மகளிர் ஒருங்கே சுற்றுந்திசைகளைப்பற்றினர்; இஃதிவன் காதலிமாட்டென்னாம்! எ-று. அணி காமர் என்பன ஒருபொருட்கிளவியாய், மிகுதிதோன்ற நின்றன. ஒன்றாகவெழுந்து அணியினுங் கையினுமுளவாகிய சங்கொலிப்ப இளமைக்கணுண்டாகிய வுள்ளவெழுச்சிமிக்கு வில்லோடம்பையடுத்துப் பற்றி அரைக்கணியப் பட்ட வுடைவாளையுடைய இளையோர் திசைமுழுதுஞ் சூழ்ந்து பற்றினரெனப் பிறிதுமோர் பொருடோன்றி நின்றவாறு கண்டுகொள்க. கருப்புருவச் சிலை என்பது பாடமாயின் புருவமாகிய காமனது உட்கை உடைய கருப்புச்சிலையோடு கண்ணாகிய கள்ளையுடைய மலரம்பை யடுத்தென்றுரைக்க. சுற்றும்பற்றிய மாதிரமென்பது பாடமாயின், சுற்றும்பற்றி மேவாநிற்ப, அவ்விடத்து நகைக்குறிப் பாலெடுக்கப்பட்டு இவர் கைகள் வளையொலிப்பத் தலைமேலேறின வெனக் கூட்டி யுரைக்க. இதற்குச் சுற்றும் பற்றிப் போர்செய்யாநிற்பப் படைக்கல மெடுத்துச் சங்கொலிப்ப அணியுங்கையு மொருங் கெழுந்தனவெனப் பிறிது மொரு பொருளாகக் கொள்க. இதற்குப் பிறவுரைப்பாருமுளர். உரத்தகு வேல் உரத்தாற்றக்கவேல். மெய்ப்பாடு: மருட்கை. வியப்பாகலின், பயன்: பிரிவுணர்த்துதல் திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக