திங்கள், 19 அக்டோபர், 2015


மாணிக்கவாசகர் பாடியுள்ள திருவாசகம் / தோணோக்கம் தோளைப் பார்த்துப் பாடுவது தோள்நோக்கம், அல்லது, தோணோக்கம், இரு தோழியர் ஒருவர் தோளை ஒருவர் பார்த்துப் பாடியபடி விளையாடுவது, அல்லது, வெற்றியடைந்த மன்னன் ஒருவனுடைய வீரத்தோளைப் பார்த்துப் பிறர் பாடுவதைத் தோணோக்கம் என்பார்கள். அவ்வகையில் சிவபெருமானின் பெருமைகளை மாணிக்கவாசகர் பாடியுள்ளார். இப்பகுதியில் பதினான்கு பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை. பாடலின்பம் பூத்துஆரும் பொய்கைப் புனல்இதுவே எனக் கருதிப் பேய்த்தேர் முகக்கஉறும் பேதைகுணம் ஆகாமே தீர்த்தாய் திகழ் தில்லை அம்பலத்தே திருநடம்செய் கூத்தா, உன் சேவடி கூடும்வண்ணம் தோள்நோக்கம். * என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் கன்றால் விளவுஎறிந்தான், பிரமன் காண்புஅரிய குன்றாத சீர்த் தில்லை அம்பலவன் குணம்பரவித் துன்றுஆர் குழலினீர், தோள்நோக்கம் ஆடாமோ. பொருளின்பம் கானல் நீரைப் பார்த்து, நன்கு பொங்கிப் பெருகுகிற பொய்கை நீர் இது என்று நினைத்து, அதை அள்ளிக் குடிக்க முயற்சி செய்து ஏமாறுபவன் முட்டாள். அப்படி நான் முட்டாளாகிவிடாமல், சிவபெருமான் எனும் அமுதத்தைப் பருகி வாழச் செய்தவனே, என் தலைவனே, சிறந்து விளங்கும் தில்லையின் அம்பலத்தில் திருநடனம் செய்கின்ற கூத்தனே, உன்னுடைய செம்மையான திருவடிகளைச் சேர்வதற்காக நாம் தோள்நோக்கம் ஆடுவோம். * செறிவான கூந்தலை உடைய பெண்களே, நாம் தொடர்ந்து பிறந்து, இறந்து துன்பத்தில் விழாதபடி நம்மை ஆண்டுகொண்டவன் சிவபெருமான், கன்று வடிவத்தில் வந்த அசுரனை விளாமரமாக நின்ற அசுரன்மீது எறிந்து, அவர்கள் இருவரையும் அழித்தவனாகிய திருமால், பிரமன் ஆகியோரும்கூடக் காண இயலாத தன்மையுடையவன் அந்தச் சிவபெருமான், சிறப்புகள் குறையாத தில்லை அம்பலவன், அவனுடைய பெருமைகளைப் பாடி நாம் தோள்நோக்கம் ஆடுவோம் http://poompalani.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக