திங்கள், 5 அக்டோபர், 2015

மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்


மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார் மணிவாசகர் தில்லையில் எழுந்தருளியிருந்தபோது, தில்லைப் பெருமான் வயோதிகராக அவர்முன் வந்து, திருவாசகத்தைச் சொல்லக் கோட்டு தம் திருக்கரத்தால் எழுதியதோடு " பாவை பாடிய நும் வாயால் ஒரு கோவை பாடுக" எனக் கேட்க , மணிவாசகர் அருளிய தெய்வப்பனுவல் திருக்கோவையாராகும். இந்நூல் தில்லையை போற்றும் முறையில் அமைந்த அகத்தினைக் கோவை. ஆதலின் திருச் சிற்றம்பலக் கோவையார் எனப் பெயர் பெற்றது. இக் கோவை நூல், திரு என்ற அடைமொழியையும், உயர்திணைப் பலர்பால் விகுதியாகிய ஆர் என்பதையும் சேர்த்து "திருக்கோவையார்" என வழங்கப்படுகிறது. கோவை என்னும் பிரபந்தம் அகப்பொருளில் ஐந்தினை ஒழுகலாறுகளைத் தெரிவிப்பது. பல பிறவிகளில் கணவனும் மனைவியுமாக வாழ்ந்த அன்புடையார் இருவர் வேறு வேறு இடங்களில் பிறந்தனராயினும் நல் லூழின் பயனாக ஒரிடத்து எதிர்பட்டு, அன்பினால் கூடி வாழும் இயல்பை கூறுவது . இவ்வைந்திணை ஒழுக்கம் களவு, கற்பு எனும் இரண்டு பிரிவுகள் கொண்டது. இதனை வரிசைப்படுத்தி உரைக்கும் நூலே " கோவை யாகும்". " முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து களவு கற்பெனும் வரைவுடைத்தாகி நலனுறு கலித்துறை நானூறாக ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்க கூறுவதகப்பொருட் கோவையாகும். " .............. (இலக்கண விள. பா. 58) என்பது கோவைக்குரிய இலக்கண விளக்கமாகும். கோவையில் பாட்டுடை தலைமகன் பெயரைக் கூறலாம். கிளவித் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி பெயர்களைக் கூறுதல் கூடாது. கோவை பிரபந்தம் பாடுவோர் பாட்டுடைத்தலைவனின் பெயர், அவனது வீரதிரச்செயல்கள், கொடை முதலான பண்புகளை கூறுவர். இவ் வகையில் எழுந்தவை பாண்டிக்கோவை, அம்பிகாவதிக் கோவை, தஞ்சைவாணன் கோவை முதலியன. மணிவாசகர் திருச்சிற்றம்பலமுடையானை பாட்டுடைத் தலைவனாக கொண்டு, அவன் புகழை க் கூறும் நிலையில் இப்பிரபந்தம் செய்யப்பட்டுள்ளது. இக்கோவையில் கூறப்படும். கிளவித் தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி யாவரும் தில்லை பெருமானிடம் பத்திமை உடையவர்கள். ஆதலின் அவரகள் கூற்றுக்கள், யாவும் சிவன் புகழ் பேசும் செம்மை யானகையாகவே அமைந்திருக்கின்றன. இந் நூலின் தொடக்க பாடல் இயற்கை புணர்ச்சியில் காட்சி என்ற துறைக்குரியது. தலைமகன் தலைவியை காணுகிறான். அப்பெண் சிவபிரான் உறையும் தில்லையில் வியக்கத்தக்க நிலையில் மலர்ந்துள்ள தாமரை, நீலம், குமிழ், கோங்கு காந்தா , அன்னம் போன்ற நடையினை உடையவளாய், காமனின் வெற்றிக் கொடிபோலக் காட்சி தருகிறாள். இப்பாடலில் " திரு" என்பதற்கு கண்டாவரால் விரும்பப் பெறும் அழகையே திரு எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பாடகளில் கூறப்பட்டுள்ள மலர்கள் அத்தலைவியின் முகம், கண், மூக்கு, தனம், கை, ஆகியவற்றை குறிப்பன. மேலும் இம் மலர்கள், முறையே, மருதம்,நெய்தல், முல்லை, பாலை, குறிஞ்சி நிலங்களில் காணப்படுபவை. மற்றைய நிலங்களுக்குரிய பூக்களையும், கூறயது, பல நிலங்களிலும் சென்று துய்க்கும் இன்பத்தை தில்லையேதரும் என்பதை உணர்த்தற் பொருட்டேயாகும். மேலும் ஓரிடத்துக் கலியாணம் நடந்தால் எல்லா நிலத்தவரும் வந்து, தம்மிடமுள்ள அணிகலங்களை மணமகளுக்கு அளித்து சிறப்பித்து எல்லா நிலங்களும் தத்தம் மலர்களை அளித்து குறிஞ்சியை சிறப்பித்தன எனவும் கூறுகிறார்கள். இக்கருத்தின் மூலம் பண்டைத்தமிழர்கள் " வறியார்க் கொன்றீவதே ஈகை,மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து " என்னும் குறளுக்கிணங்க எதிர்பார்ப்பின்றி திருமணப்பெண்ணுக்கு தன்னிடமுள்ள அணிகலன்ளை போட்டு அழகு பார்த்து மகிழ்ந்தனர். ஈகைக் குணத்தவரகளாக தமிழ்ப் பெண்கள் வாழ்ந்தார்கள் என்பதை பண்டைய வரலாறும் தமிழர் பண்பாடுமாகும். " நல்வினை யும் நயம் தந்தின்று வந்து நடுங்குமின்மேல் கொல்வினை வல்லன கோங்கரும் பாம் என்று பாங்கன் சொல்ல வில்வினை மேருவில்வைத்தவன் தில்லை தொழாரின் வெள்கித் தொல்வினை யால்துய ரும் என ஆருயிர் துப்புறவே." (8 பாடல் 26) பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னும் சடையோன்புலியூர் விரவா தவரினுள்நோய் இன்னும்அறிகில வால்என்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே." (8- 189) திருச்சிற்றம்பல் தொகுப்பு வை. பூமாலை மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக