திங்கள், 19 அக்டோபர், 2015

அறியாமையால் செய்த வினையாலும் விடா.......


அறியாமையால் செய்த வினையாலும் விடா....... திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கு கொடிய சூலை நோய் (வயிற்று வலி) வந்தது. இந்த வயிற்று வலி எமனைப் போல வந்து கொடிய துன்பத்தைக் கொடுத்தது. இப்படிப்பட்ட கொடிய நோய் வருவதற்கு காரணத்தை அவரே கூறியுள்ளார். " கூற்று ஆயினவாறு விலக்கிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன்? ........... தமிழ் திருமுறை 4 முதல் பாடல் கொடும் செயல்கள் செய்வதால் தான் நோய், வறுமை, அறிவின்மை, உடல் ஊனம், முதலிய துன்பங்கள் வருகின்றன என்பதை வீரட்டானத்து இறைவரால் ஆட்கொள்ளப்பட்ட சுவாமிகள் அவர்களின் திரு வாக்கால் அறிய முடிகிறது. அறியாமையால் இப்படிப்பட்ட கொடிய செயல்களைச் செய்து விடுகின்றோம். அதன் பயனை அனுபவிக்கும் போது ஏன் அவற்றைச் செய்தோம் என்று வருந்துகின்றறோம். அறியாமல் நெருப்வை மிதித்து விட்டாலும் நெருப்பு சுட்டு புண்ணாக்கி ரணமாகி துன்பத்தைக் கொடுப்பது போல் , நாம் அறியாமல் செய்த தவறானாலும் அதன் வினைப்பயன் நமக்கு தீங்கை அளித்தே தீரும். இத்தகைய தீவினைகளிலிருந்து விடுதலை அடைவதற்கு உரிய வழியையும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். " ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்" என்கிறார் ஏற்றாய் - காளை வாகனம் உடைய சிவபெருமானாரை இரவும் பகழும் பிரியாது தொழுதும்வணங்கியும், சிவத் தொண்டுகள் செய்தும், மேலும் வினைகள் வராதிருக்க செய்ய வேண்டும். துன்பங்கட்கு காரணம் தீவினைப் போக்கும் ஆற்றல் உடைய ஒரே கடவுள் பிறப்பும், இறப்பும் இல்லாத சிவபரம் ஆகும். எனவே இந்த இறையை பற்றினால் தீவினைகள் நம்மை அணுகா. இதைத்தான் திருநாவுக்கரசர் அருளிய முதல் பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது. பெரும் பான்மையான மக்கள் தமக்கு துன்பங்கள் வருவது தம் வினையால் என்பதை உணர்வது இல்லை. பிறகு இத்துன்பங்களிலிருந்து விடுபடுவதற்கு மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் போலி துறவிகளையும், தாமே கடவுள் என்று சொல்லி கொள்ளும் இக்கால் இரணியர்களையும் நம்பி மோசம் போகின்றனர். இவ்வாறு வழியில்லாத வழியில் செல்லும் மக்களுக்கு பொருட் செலவும், காலவிரயமும், ஆவதுடன் அவர்களுடைய துன்பங்களும் தொலைவதில்லை. இப்படிப்பட்ட கால சூழ்நிலையில் தான் தமிழ் வேதங்களின் அறிவுரைகள் மக்களுக்கு மிகமிக அவசியமாகிறது. சிவ வழிபாடு ஒன்றினால்தான் நம் வினைகள் போக்கி க் கொள்ள முடியும். தாயும் தந்தையும் இல்லாதவரும், பிறப்பும் இறப்பும் இல்லாதவரும் ஆகிய சிவபெருமானார் ஒருவரே முழுமுதற்கடவுள் இவரே பெருந்தெய்வம். " பிறப்பும் இறப்பும் இல்லாததால் அவரே முழுமுதல் பொருளாவார். அவரே உண்மைப் பொருளாவார். இவற்றையெல்லாம் உணர்ந்த அருளாளர்கள் முதலில் வைத்து போற்றப்படுகின்ற திருஞானசம்பந்தர் திருவாக்கினை இங்கே காண்போம். "கைவினை செய்து பிரான்கழல் போற்றுதும் நாம் அடியோம் செய்வினை வந்தமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்" நமக்கு வரக்கூடிய துன்பங்களிலிருந்து முன்பு செய்துள்ள வினைகளை உணரலாம். இறந்த பிறப்பை பிறந்த பிறப்பால் அறிக ..... என்கிறது அறநெறிச்சாரம் நம் பிள்ளைகட்கு திருமணம் தடைபடுகின்றது என்றால் கடந்த பிறவியில் யாருடைய திருமணத்தையாவது நிறுத்தியிருக்கலாம். இதுபோன்றே நாம் முற்பிறவிகளில் செய்த தீவினையே அப்படியே நமக்கு பிரதிபலிப்பாக அமையும். இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பவர் செய்கையினாலே முடிந்தது .............. திருமந்திரம் கடந்த பிறவிகளில் கருணை மிகுதியால் பிறருக்கு உதவிகள் செய்தும், தீமைகள் செய்யாமலும் வாழ்ந்தவர்கள் இப்பிறவியில் செல்வ செழிப்புடன் வாழ்கின்றனர். நாம் நலமாக வாழ்வதற்கு தீவினைகள் செய்யாமல் வாழ வேண்டும். பிறருக்கு செய்யும் தீவினையே நமக்கு கடனாக நம்மை வந்தடையும். அந்த துன்பத்தை நாம் அனுபவித்த ஆக வேண்டும் இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும் தருமம் செய்யாதவர் தம்பால தாகும் உருமிடி நாகம் உரோணி கழலை தருமம் செய்வார் பக்கம் சாரகிலாவே ....................... திருமந்திரம் இருமல், சோகை, சளி, காய்ச்சல் போன்ற பலவகை நோய்களும் இம்மைத் துன்பங்களும் தருமம் செய்யாதவருக்கே வந்து சேரும். பேரிடி விழுதல், பாம்பு முதலியவற்றால் துன்பம் நேரிடுதல் ஆகியவை தருமம் செய்பவர் இருக்கும் திசையை கூட பாரா. எனவே நோய் வருதல், இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகள் அபாங்கள்,.பிற கொடிய உயிரினங்களால் வரும் துன்பம் ஆகிய யாவும் தருமம் செய்யாததால் வருவனவே என்பதை ஐயமமின்றி உணராலாம். தருமம். செய்து வாழ்ந்தால் நாம் வாழும் திசையில் அத்துன்பங்கள் நம்மை வந்து அடையா. உதாராணமாக நாம் உணவு, நீர் ஆகியவற்றை உட்கொள்கிறோம் சிலமணி நேரம் கழித்து அவைகள் சிறுநீர், மலமாக வெளியேற ேவ்ண்டும் இது இயற்கை. இல்லை யென்றால் அதுவே நமக்கு நோய் எனும் துன்பத்தை கொடுக்கும் அவரவர்களுக்கு நேர்ந்த தொழிலை செய்கிறோம்., உலகிலிருந்து செல்வம் நம் வீட்டிற்கு வருகிறது. வந்த செல்வம் தருமாக வெளி உலகிற்கு செல்லவேண்டும். இதுதான் நியதி. இல்லை என்றால் நோய் தான் வரும் . உய்த்துணர்க. திருச்சிற்றம்பலம் நன்றி ; தமிழ் வேதம் மேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு எனது பிளாக்ஸ் பாட் வலைதளத்தைக் காண்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக