திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
மாசில் வீணையும் – பாடல் 1
(பொதுப் பதிகம் – குறுந்தொகை)
பின்னணி
அப்பர் பிரானின் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த சூலை நோயினை அவருக்கு அளித்து சிவபெருமான் அவரை ஆட்கொண்டதையும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய பின்னர் அவரது சூலை நோய் தீர்க்கப்பட்டதையும், இறைவனின் அருளால் தீராததாக கருதப்பட்ட தனது நோய் தீர்ந்த பின்னர், புது மனிதனாக மாறிய அப்பர் பிரான், நாமார்க்கும் குடி அல்லோம் என்று வீரமுழக்கம் இட்டதையும் நாம் சென்ற சில நாட்களாக சிந்தித்து வந்தோம். அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தினை இன்று முதல் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.
தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சார வேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான்.
திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்தபோது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தனது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் இடர்களுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்,
பாடல் 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
விளக்கம்
வீங்கு = பெருகிய
இளவேனில் = சித்திரை, வைகாசி மாதங்கள்
மூசு வண்டு = மொய்க்கும் வண்டு
அறை = ஒலிக்கின்ற.
வெப்பத்தைத் தரும் நீற்றறையின் உள்ளே அமர்ந்திருக்கும் எவருக்கும் வெப்பத்தை அளிக்கும் பொருட்களே நினைவுக்கு வரும். ஆனால் சிவபிரானது அருளால் வெப்பத்தைக் கொடுக்கும் நீற்றறையும் குளிர்ந்த காரணத்தால் நாவுக்கரசருக்கு நீற்றறை உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐந்து புலன்களும் இன்பமான சூழ்நிலையினை உணர்ந்த தன்மையை, ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கும் பொருட்களை இங்கே குறிப்பிட்டு நமக்கு நாவுக்கரசர் இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய சூழ்நிலைக்கு இறைவனது திருவடிகளே காரணம் என்பதையும் அந்த சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இங்கே நமக்கு தெரிவிக்கின்றார்.
திருநாவுக்கரசர் நீற்றறையில் அனுபவித்த சூழ்நிலையை குறிப்பிடும் சேக்கிழார் இறைவன் அருளால் குளிர்ந்த அந்த சூழ்நிலை ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சேக்கிழார், நாவுக்கரசுப் பெருமான் தனது பதிகத்தில் பயன்படுத்திய சொற்களைக் கையாண்டுள்ளது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.
வெய்ய நீற்றறை அது தான் வீங்கிள வேனில் பருவந்
தைவரு தண் தென்றல் அணை தண்கழுநீர் தடம் போன்று
மெய்யொளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே
பொழிப்புரை
எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு. வை.பூமாலை. சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக