ஞாயிறு, 4 அக்டோபர், 2015

திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்


திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள் திரு ஞானசம்பந்தர் திருமயிலையில் சிவ விழாக்கள் பற்றி ஒரு பதிகமாகவே பாடியுள்ளார். இப்பதிக பாடல்கள் பத்தும் அனைத்தையும் பாட வல்லருக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் எலும்பு முறிவு ேநாய் கண்டவர்கள் பாராயணம் ெசய்து பாடி வந்தால் அவர்களின் நோய் குணம் அடைந்து , வான சம்பந்தத்து பெற்று கபாலீச்சர இறைவர்அவர்களோடு வாழ்வார் என்பதும், இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபேறு பெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர். சம்பந்தர் வாக்கு " கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான் தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான் ஞானசமபந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வலார் வான சம்பந்தத்து அவரோடும்வாழ்வாரே. திருமயிலாப்பூரிலே, வைசியர் குலத்திலே, சிவபத்தி அடியார் பத்திகளிற் சிறந்தவரும், பரசமயங்களைப் பாற்றல் வேண்டும் என்னுஞ் சிந்தையுடையவரும், பெருஞ்செல்வருமாகிய சிவநேச ரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஞானப்பால் உண்டமையையும், உலகம் உய்யும் பொருட்டுத் திருப்பதிகங்களிலே ஆருகதத்தையும் பௌத்தத்தையும் இழித்துரைத்தலையும், சிவனடியார்கள் சொல்லக் கேள்வியுற்று, மனமிக மகிழ்ந்து, அவருடைய திருவடிகளிலே பேரன்புடையராகி, அகோராத்திரம் அவருடைய திருவருட்டிறங்களையே பேசல் கேட்டலாகிய தொழிலினராயினார். அவர் பெருஞ்செல்வமும், பெருங்கீர்த்தியும் உடையராயினும், பிள்ளைப் பேறின்மையால் மிகக் கவலையுற்று, சிவபூசை மகேசுரபூசைகள் செய்து, ஒரு பெண்பிள்ளையைப் பெற்றார். அவள் மகாலட்சுமியைப் போல் பேரழகு பெற்றவள். அவளுக்குப் பூம்பாவை என்னும் பெயர் கொடுக்கப்பட்டது. அவளுக்குப் பெதும்பைப் பருவம் வந்தபின், தந்தையார் அவளுடைய குணாதிசயங்களைக் கண்டு வியப்புற்று, மனமகிழ்ந்து "இவளை விவாகஞ்செய்பவரே என்னுடைய அளவிறந்த திருவியங்களுக்கு உரியவர்" என்றார். அவர் ஞானசம்பந்தரின் சிவபக்தியையும், சமணர்களை வாதில் வென்றதினையும் அறிந்து அவர்மீது அளவிடா பத்தி கொண்டு தன் மகள் பூம்பாவையை அவருக்கே மணமுடித்துக கொடுக்க திருவுளம் கொண்டார். அவ்வேளையில் பூம்பாைவயார் நந்தவனத்தில் மாலைக்கு பூபரிக்க சென்ற போது ஒரு விச பாம்பு தீண்டி விசம் முற்றி மயக்கமுற்று உயிர் போகும் நிலை ெபற்றார்.விஷவைத்தியர்கள் கைவிட; சுற்றத்தார்கள் அவண்மேல் விழுந்து, அலறி அழுதார்கள். சிவநேசர் ஒருவாறு தெளிந்து, "இந்த விஷத்தை நீக்கினவர்களுக்கு என்னுடைய அளவிறந்த திரவியங்களைக் கொடுப்பேன்" என்று பறையறைவித்தார். மூன்று நாளையும் அரசரிடத்துள்ளோர் முதலாகிய மந்திரவாதிகள் சமஸ்தரும் வந்து, தங்கள் செய்கையினால் தீராமையால் திரும்பிவிட்டார்கள். சிவநேசர் அதுகண்டு மயங்கி, பின்பு, "இவளைப் பிள்ளையாருக்கு என்று சொல்லியதனால் நான் துன்புறவேண்டுவதில்லை" என்று துன்பநீங்கி, "பிள்ளையார் வருமளவும் இவ்வுடலைத் தகனஞ் செய்து, எலும்பையும் சாம்பரையும் சேமித்து வைப்பேன்" என்று துணிந்து, அப்படியே தகனஞ்செய்து எலும்பையும் சாம்பரையும் ஓர் குடத்தில் இட்டு கன்னிமாடத்திலே வஸ்திரஞ்சாத்தி ஆபரணங்கள் அணிந்து பஞ்சணைமேல் வைத்தார். தினந்தோறுந் தவறாமல் மஞ்சனம், மாலை, சந்தனம், அன்னம், விளக்கு முதலியவைகளை அமைத்தார். அதனை அறிந்த யாவரும் வியப்புற்றார்கள். அவ்வேளையில் ஆளுடைய பிள்ளையார் திருமயிலை வருகை புரிந்தார். ஆளுடையபிள்ளையார் சிவநேசரிடத்து நிகழ்ந்ததைத் திருவுளத்தடைத்து, அவருடைய கருத்தை முற்றுவித்தற்கும் ஆருகதசமயத்தையும், பௌத்த சமயத்தையும் அழித்தற்கும் திருவுளங்கொண்டு, கபாலிச்சரம் என்னும் ஆலயத்திற் பிரவேசித்து சிவபெருமானை வலஞ்செய்து, நமஸ்கரித்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு, திருக்கோயிலுக்குப் புறத்திலே வந்து சிவநேசரை நோக்கி, "உம்முடைய மகளினது எலும்பை நிறைத்த குடத்தைத் திருக்கோயிற் புறமதிற்றிருவாயிலிலே கொண்டுவாரும்" என்று அருளிச் செய்தார். சிவநேசர் பெருங்களிப்புடையவராகி, விழுந்து நமஸ்கரித்து எழுந்து, தம்முடைய வீட்டை அடைந்து, கன்னி மாடத்திலே புகுந்து, வெந்த சாம்பரும் எலும்பும் நிறைந்த குடத்தை எடுத்து, மூடுகின்ற இரத்தினச் சிவிகையிலுள்ளே வைத்து, சேடியர்கள் சூழ்ந்து செல்லும்படி, எடுப்பித்துக் கொண்டு வந்து, திருக்கோபுரத்துக்கு எதிரே சிவிகையை நீக்கி, அக்குடத்தை எடுத்து, சிவலிங்கப்பெருமானுக்கு அபிமுகத்திலே வைத்து நமஸ்காரம் பண்ணினார். சிவபெருமானுடைய அடியார்களைத் திருவமுது செய்வித்தலும், சைவாகமவிதிப்படி செய்யப்படுகின்ற அவருடைய திருவிழாவைத் தரிசித்து ஆனந்தம் அடைதலுமே என்பது சத்தியமாயின், நீ இவ்வுலகர்முன் வருவாய்" என்று "மட்டிட்டபுன்னை" என்னுந் திருப்பதிகத்தை எடுத்தருளினார். அதில் அருளிச் செய்யப்பட்ட "போதியோ" என்னுந் திருவாக்காகிய அமிர்தம் அவ்வங்கத்திலே பொருந்த; அது குடத்தினுள்ளே சரீரமாய்ப் பரிணமித்தது. பூம்பாவை முதற்றிருப்பாட்டிலே வடிவு பெற்று வேறெட்டுப் பாட்டிலே பன்னிரண்டு வயசடைந்து குடத்தினுள் அடங்கியிருந்தனள், அவ்வாறு பாடப்பட்ட பதிகமே " மட்டிட்ட புன்னை" என்றும் பூம்பாவையின் சாம்பலையும் எலும்பு துண்டுகளையும் உருப்பெற செய்ய " பூம்பாவாய் " என்கிறார் சம்பந்தர், ேமலும் இப்பாடல் வாயிலாக திருமயிலையில் ஆண்டு தோறும் ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் சிவ விழாக்களை பட்டியலிட்டுக் காட்டுகிறார். அதன் விபரம் அப்பாடல் வாயிலாகக் காண்போம். பாடல் எண் : 1 மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? இதிற் குறித்த திருவிழா. பூரட்டாதியில் நிகழ்வது. இத்திங்கள் முதலாக ஒவ்வொன்றிலும் நிகழ்த்தும் திருவிழாச் சிறப்பு மேல் வரும் பாக்களிற் குறிக்கப்பட்டமை உணர்க. பாடல் எண் : 2 மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ? ஐப்பசித்திருவோண விழாச் சிறப்பும் அரியதவத்தோர்களாகிய அடியார்கள் திருவமுது செய்த காட்சியும் குறிக்கப்பட்டன. ஓணத்திற் கொடியேற்றம். கிருத்திகையில் தீர்த்தவாரி. தலவரலாறு பாடல் எண் : 3 வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க. பாடல் எண் : 4 ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக் கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான் ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ? இது மார்கழித் திருவாதிரை விழாச்சிறப்புணர்த்திற்று. பாடல் எண் : 5 மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும் தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? பாடல் எண் : 6 மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் அடலானே றூரு மடிக ளடிபரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்ந்தவுண்மை குறிக்கப்பட்டது. பாடல் எண் : 7 மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ? ஒலி - விழாவின் ஆரவாரம். பங்குனி உத்தர விழாச் சிறப்புணர்த்திற்று. பாடல் எண் : 8 தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான் கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான் பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள் கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ? இது சித்திரையில் நிகழ்ந்தது எனக்கொள்ள இடனுண்டு. அட்டமிநாள்விழா முற்காலத்தது. இக்காலத்தார் சித்திரைப் பௌர்ணமி கொண்டனர். பதினெண்கணங்களுக்கும் அட்டமிநாள் விழாவிற்கும் உள்ள தொடர்பு புலப்பட்டிலது. பாடல் எண் : 9 நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும் முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக் கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான் பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ? வைகாசியில் ஊஞ்சலாடுந் திருவிழா பாடல் எண் : 10 உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும் இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில் கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன் பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய். பொழிப்புரை : பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ? பெருஞ்சாந்தி - பவித்திரோற்சவம். கும்பாபிடேகம் என்பாரு முளர். ஆண்டுதோறும் கும்பாபிடேகம் புரிவது எளிதன்று. அதற்கீடாகப் பவித்திரோற்சவமே நிகழ்த்துவதுண்டு. இவ்விழா ஆனி முதலிய மூன்று திங்களிலும் நிகழும். நிகழவே ஆண்டுமுழுதும் மயிலைக் கபாலீச்சரத்தில் திருவிழா உண்டு என்றவாறு. பவித்திரோற்சவம் ஆடி முற்பக்கத்துச் சதுர்த்தசியிலும், ஆவணி புரட்டாதிகளில் இருபக்கத்திலும் வரும் எட்டு பன்னான்கிரண்டு நாள்களிலும் பவித்திரம் சாத்தல் வேண்டும். இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர். தொகுப்பு . வை. பூமாலை ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

1 கருத்து: