திருமாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.
தில்லையில் அருளப்பட்டது
பாடலின்பம்
சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ,
தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய்
பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ.
*
மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி,
தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான்
கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும்
பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.
பொருளின்பம்
சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது,
தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
*
குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக