செவ்வாய், 20 அக்டோபர், 2015

சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்


சதுரகிரி ஆனந்தவல்லியம்மன் தென்மாவட்டங்களில் ஆடி அம்மாவாசை முடிந்து நவராத்திரி துவங்கி விட்டாலே ஞாபகம் வருவது சதுரகிரி கொலு பூசை தான். ஏனெனில் தென்மேற்கு பருவக்காற்று குற்றால சீசன் முடிந்து வடகிழக்கு பருவக்காற்று ஆரம்பித்து விட்டால் மலை பிரதேச ரம்மியமான பொழுபோக்குடன் கூடிய ஆன்மீக சுற்றுலா தலமாக கொண்டாடி அந்த சில் என்ற ரம்மியமான சூழலை அனுபவித்து மகிழ்வது சதுரகிரியை சுற்றியுள்ள கிராம மக்களும் அதனைச் சார்ந்த மக்களும் தான் ஐப்பசி பிறந்து விட்டாலே ஐப்பசி புண்ணிய ஸ்தானமாக ஸ்தானம் (குளிக்க ) செல்லும் இடம். மற்றும் இது ஒரு இளம் சீரார்களின் பிக்னிக் பிளேஸ் இந்த சதுரகிரி வாசஸ்தலம் தான். இந்த சதுரகிரியானது மேற்கு மலைத் தொடரில் , மேருமலையின் முதலான எட்டு மலைகளுக்கும் தலைமையான மலையாக கருதப்படுகிறது. சதுரகிரி என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆடி அமாவாசை தான் , ஆடி அமாவாசை மகாலிங்த்தை நினைவு கூறும் திருவிழா. புரட்டாசி மகாள அமாவாசை என்றால் நம் நினைவுக்கு வருவது சதுகிரி ஆனந்த வல்லி யம்மன் தான். சதுரகிரியில் சிவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதுபோலவே சக்தி ரூபமான ஆனந்தவல்லிக்கும் , ஏன் அகத்திய மகரிசிக்கு இறைவன் காட்சி கொடுக்கும் போதும் சிவசக்தியாகவே தான் காட்சி தந்தருளினார். இங்குதான் அந்த பராசக்தி சூரனை வதம் செய்ய ஒன்பது தினங்கள் தவம் செய்து சூரனை வதம் செய்தாள். எனவே இங்கிருக்கும் ஆனந்தவல்லிக்கும் பெருமை சேர்ப்பது இந்த சதுரகிரிதான். சதுரம் என்றாலே நான்கு பக்கங்களைக் கொண்டது என்பதற்கிணங்க இங்குள்ள ஆலயம் கிழக்கே இந்திர கிரியும், தெற்கில் ஏமகிரியும், மேற்கில் வருணகிரியும், வடக்கில் குபேரகிரியுமாக எல்லைகளாய் கொண்டு நடுவில் சஞ்சீவிகிரியைக் கொண்டு அமைந்துள்ள மலைதான் சதுரகிரி. இச் சதுரகிரியில் சிவ மூர்த்தி, சுந்தரலிங்கம், மகாலிங்கம், சந்தனலிங்கம்,இரட்டை லிங்கம் என்று நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியுள்ளார். மூலிகை வளங்களைக் காண சதுரகிரி வந்த அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப் பெற்று அவருக்கு திருக்கையாலயத்தில் நடந்த தன் திருமணக் காட்சியைக் கண்டுகளிக்கத் தந்தருளியவரே சுந்தரலிங்கர். பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காக லிங்க வடிவில் காட்சி கொடுத்தருளியவர் மகாலிங்கர் பின்னர் இறைவன் உமையொரு பாகமாகி அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயர் கொண்டெழுந்தருளும் பொருட்டு சர்வலோக மாதாவாகிய உமையம்மை தவவேடந்தாங்கி சந்தன மரத்தடியில் காட்சி தந்த மூர்த்தியே சந்தனமகாலிங்கமாவார். ஆனந்த சுந்தரன் என்ற வர்த்தகனுக்கு அவன் மனைவி ஆண்டாளம்மாளுக்கும் சங்கரநாராயண மூர்த்தி யாக காட்சி கொடுத்தருளும் பொருட்டு எழுந்தருளியதே இரட்டை லிங்கம். இச்சதுரகிரியில் ஸ்ரீ சுந்தரமகாலிங் மூர்த்தி யின் சன்னிதானத்திலிருக்கிற கானாற்றில் சந்திர தீர்த்தமென்ற ஒரு புஷ்ப கரணியும், அதன் வடபக்கத்தில் கெளடின்னிய தீர்த்தமும் உள்ளன. இச்சதுரகிரியில் குகைகளிலும், ஆசிரமங்களிலும் இருந்து ஆத்ம ஞானம் கருதி பதினென் சித்தர்கள் தவஞான நிஷ்டை புரிந்திருக்கின்றனர். சதுரகிரியின் நடுவில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் காய சித்தி பெறுவதற்கும் அஷ்ட சக்திகளான வசிகம், மோகனம், தம்பனம்,பேதனம், மாரணம் , ஆகிருஷ்ணம், உச்சாடனம், வித்துவேடனம் முதலான அஷ்டகருமங்களுக்கும் ஆதாரமாகிய அநேக மந்திர சித்திகளிக்கு உதவுவதேடு இம்மலையின் காற்றானது மனிதனின் தேகத்தில் பட்ட மாத்திரத்திலேயே சகல வியாதிகளையும் போக்க வல்ல மூலிகைகளைக் கொண்டது. நவராத்திரி கொலு பூசை இத்தகைய சிறப்பு வாய்ந்த சதுரகிரியில் நீண்ட நெடுங்காலமாக நவராத்திரி கொலு பூசை திருவிழா தென்மாவட்டத்திலுள்ள ஏழுர் சாலியர் மக்களால் அருள்மிகு உமையம்மையின் தவக்கோல ஆனந்தவல்லிக்கு அஷ்ட்டோத்திர முறைப்படி கொலுவில் ஆனந்தவல்லி அம்மையை எழுந்தருளச்செய்து நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அஷ்ட கோச்சார முறைப்படி பூசைகள் செய்து வரப்படுகிறது. துன்பங்கள் செய்யும் அசுரர்களை வதம் செய்த சம்கார மூர்த்திகள் போலும் சிவ சக்தியான பரமேஸ்வரிக்கும் வதம் செய்து அசுரர் களை வதம்செய்ய வேண்டு மென்றும், ஆதிபராசக்தியே, பிரம்மா முதலான தேவர்களுக்கெல்லாம் உயர்வானவர் , அவள் அருளாலே வேண்டுவன கிடைக்கும் என்றுஎண்ணிய பிரமர், காலங்கி சட்டைநாதர் ஆகிய மகரிஷிகள் ஆதிபராசக்தியை மகிஷா அசுரனை வதம் செய்ய, தேவி உபாசனை பூசை விரத்தை கொண்டு, தவம் இருக்க செய்ய வேண்டிக்கொண்டதன் நிகழ்வே இந்த சதுரகிரி ஆனந்தவல்லி நவராத்திரி கொலு விழா. புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்தில் ஆரம்பம் ஆகி விஜய தசமி நாளுடன் இவ் விழா முடிவு பெறும். பிரதமையில் ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் தலை வாழை இலை பரப்பி அதில் நெல்லை பரப்பி, அதன் மேல் திருநூல் சுற்றிய தீர்த்த கும்பத்தை வைத்து, அக்கும்பத்தின் மீது மாவிலை யுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைத்து ம், அதன் முன் வாழையிலையில் பூசை பொருட்களும், படையல் பொருட்களும் வைத்து, நெய்வேத்தியம் செய்து முனைமுறியாத மஞ்சளை ஒரு கயிற்றில் கட்டி மான் தோல் ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தேவியின் பஞ்சாட்சர மந்திரத்தினை, ஒரு செம்பு தகட்டில் எழுதி கும்பத்தின் முன்பு வைத்து அம்மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 முறை உருச் செய்து மணமலர்களால் அஷ்ட்டோத்திர அர்ச்சனைகள் செய்து கற்பூர தீபாரதனைகள் செய்து நிகழ்வுக்கு காப்புக்கட்டுதல் என்றுபெயர், இந்நாளிலிருந்த ஒன்பது நாட்களிலும் இது போன்ற பூசைகள் மற்றும் ஆனந்தவல்லி தோத்திரப்பாடல்ககள் பாடி அம்மனுக்கு உருவேற்றி , நமஸ்கரிக்க பிரம்ம முனிவரின் உபாஸனா பூசா விரத்திற்கு இரங்கி அக்கும்பத்தில் இருந்து அலங்கார மங்கை மதி முக விலாசரூபத்தோடு ஆதிபராச்க்தி பிரசன்னமாகி திருக்காட்சி தந்து, ஒன்பதாம் நாள் அம்மனை மலையில் உள்ள சுந்தரரர் ஆலயத்தின் எதிரில் பள்ளத்தில் அசுரான வாழை மரத்தில் உள்ள மகிசாசூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அம்மனுக்கு பின்னால் பிரதமை முதல் வளர்க்கப்பட்ட முளைப்பாரியும் உடன் எடுத்துச் சென்று கரைக்கப்படும். முளைப்பாரியம்மன் எடுப்பதால் நல்ல மழை வேண்டி முளைப்பாரியும் கொண்டப்படுகிறது. இவ்விதம் திருக்காட்சி தந்தருளி சதுரகிரிய திருக்கோவிலில் கொண்டிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய தேவி அன்னை பராசக்தியாம் ஆனந்தவல்லியை தோத்திரம் செய்ய தோத்திரப்பாடல்கள் சுந்தரபாண்டியத்தில் சாலிய வம்சத்தில் தோன்றி திரு முத்துச்சாமி மூப்பனார் அவர்களின் தோத்திரப்பாடல்கள் சில வற்றை இங்கு வைத்துள்ளேன் தாங்களும் பாடி அந்த ஆனந்தவல்லிஅம்மனின் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறேன். ஆனந்தவல்லியம்மன் தோத்திரப்பாடல்கள் 20ல் சில விநாயகர் துதி அல்லல் வினையை யகற்றிடு மானந்த வல்லிமேற் செந்தமிழ் வழுத்த வேணது இல்லை யென்னாமலே யீயும் சதுர்வரை வெள்ளப் பிள்ளையார்தம் மெய்ப்பதம் போற்றுவாம். ஆனந்தவல்லியம்மன் வரலாற்று பாடல் மாதவர்க் கிடர்செய்யு மகிஷா சூரன்தனை வதைத்திட வராகி வாலை வளர்சதுர கிரிதனின் மாலிங்கரைக் கருதி வந்திடுங் கன்னி மாதஞ் சாதன மதாகவே நவராத்திரி தன்னில் தசமி வரை பத்து நாளுந் தவமி வியற்றியே கொலுவினி லிருந்திடத் தாணுவு மிரங்கி வந்து தீதரக்கன் கெடவரந் தந்து வாயுதந் தேவியும் பெற்று வந்து சிந்திடக் கணைகளை நொந்திட வரக்கனுஞ் சீரியே யெதிர்த்து வந்த பாதகன் சிரமற்று வீழவு நொடியினிற் பதைத்துயிர் துடிக்க மாய்த்த பங்கயச் செல்வியே ! துங்கமிகு வல்லியே! பாவை யானந்தி யுமையே!! தோத்திரப்பாடல் - 1 மங்கள கல்யாணி பரிபூரணி மனோன்மணி வதன சிங்கார ரூபி மாலின் சகோதரி வாலை பரமேஸ்வரி வராகி மாதங்கி வர்மி சங்கரி சடாக்ஷரி தயாபரி மக்ஷேஸ்வரி சாமளாதேவி தர்மி சத்துரு சங்கரி நிர்த்தனி யுத்தமி தாய் பராசக்தி வாணி கங்கை திரிபுரை கெளரிகாளி கங்காளி சிவ காமி தவநேமி வாமி கமலி கருணாகரி விமலி கிருபாகரி கபாலி திருசூலி நிலி அங்கற் கண்ணியுவுராமி யெனதாயினின் னடியேனே யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் -2 சந்தனச் சோலைய மஞ்சள் நீரோடையுந் தடாகமும் பொய்கை வளமுந் தாய் கன்னி மார்தினம் நீராடி யூஞ்சலிற் றானாடு கின்ற வனமும் விந்தைசேர் நவகோடி சித்தர்கள் சதாநிஷ்டை மேவியே புரியு மிடமு மேலான சஞ்சீவி மூலிகை ரசவாத வித்தைக் கிசைந்த தழையுஞ் சுந்தர மாலிங்கர் சன்னதி வாசல்முன் றூய திருக்கூட்ட முயர்வுந் தோணும் பலாவடி தன்னிற் கருப்பண்ண சுவாமியும் பேச்சியருளும் அந்தமிகு நவராத்திரி கொலுவலங் காரியே அடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 3 மாதா பிதாகுரு தெய்வ முனையல்லாது மற்று மொரு செயலு முளதோ மனமும் புண்ணாகியே தினமுங் கண்ணோயினான் வாடுவது கண்டிருந்து நீயே சோதனை யாகவே யெதுவுஞ் சொல்லாமலே சும்மா விருக்க லாமோ சுருதிமறை வாக்கியம் கேட்பதின் நோக்கமோ தூங்கிடாத தூக்க மாமோ பாதமே கதியென்று நம்பினே னிதுவரை பட்ட துன்பங்கள்போதும் பளீரென்று நயனங்களொளிதந்து வருள்செயும் பாக்யமே யெனது பாக்யமே ஆதரி யீததி யாகிலாண்ட யீஸ்வரி அடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 20 சந்தன முந்தனைச் சிந்திக்கு மென்மனந் தளரா திருக்க வேண்டுஞ் சரியை கிரியா யோக ஞானமார்க் கந்தனிற் சார்ந்துமோ பழக வேண்டும் புந்தியிற் கருதியே புருவநடு மத்தியிற் பொந்தி மனநிற்க வேண்டும் பொன்னில மாதர் தமாசையு நிராசையெப் போதுமே கொளவும் வேண்டும் எந்தையுயர் சுந்தர மகாலிங்கர் பொற்பத மெப்பவும் வணங்க வேண்டும் ஏழுருச் சாலியர் நவராத்திரி யுற்சவ மெனும் பெயர் துலங்க வேண்டும் அந்திபகல யெனக் காறுதலைத் தேறுதலை அருள்புரிந் துதவ வேண்டும் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. பாடல் 21 கும்பமுனி மச்சமுனி சட்டைமுனி கருவூரார் கொங்க னர் புலிப் பாணியுங் கோரக்கர் புண்ணாக்கர் கமலமுனி காலாங்கி கூன ரழுகண்ணர் மூலர் இன்பமுறு நந்தீசர் சுந்தரம் ரோமரு மிடைக்காடர் போகநாதர் இவர்கள் பதிணென்மருந் தவமுனிவர் நாதாக்க ளிணையடி தனையுந் துதித்து சம்பிர மாமுத்துச் சாமி பாமாலையாய் சாற்றினேன் தயவு கூர்ந்து சகலவித ரோகமும் மகலவிரை வாகவுந் தள்ளித் துரத்தி யருள்வாய் அம்பிகை நின்பதஞ் தஞ்சமென வந்தநின் னடியேனை யாள வருவாய் அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள ரானந்த வல்லி யுமையே. இப்பாடல்களை கொலுவில் பாடி அம்மனுக்கு உருவேற்றி அம்மனின் அருள் பெறலாம், (இப்பாடல்கள் வேண்டுவோர் கேட்டுக்கொண்டால் டைப்செய்து அனுப்புகிறேன்.) திருச்சிற்றம்பலம் தொகுப்பு : வை. பூமாலை. சுந்தரபாண்டியம் மேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக