திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் 4ம் திருமுறை
(இப்பதிகப் பாடல்களை பாடுவோர்க்கு துண்பம் என்பதே வாராதாம்)
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே
விளக்கம்
மாப்பிணை - மான் கன்று.
சிவபிரான், தனது இடது பாகத்தில் மான் கன்றினை ஏந்திக் காட்சி அளிக்கிறார். தனது உடலின் இடது பாகத்தில் உமையம்மையை ஏந்தி இருக்கும் சிவபிரானைப் பற்றி குறிப்பிடும்போது, அப்பர் பிரானுக்கு சிவபிரான் இடது கையில் ஏந்தி இருக்கும் மான் கன்று நினைவுக்கு வந்தது போலும். அழகான உமையம்மையை நினைக்கும் எவருக்கும், இளமானின் அழகான தோற்றம் நினைவுக்கு வருவது இயல்புதானே.
சிவபிரானின் திருவடிகளை அனைவரும் பூக்கள் தூவித் தொழுவதால், அவரது திருவடிகள் எப்போதும் பூக்களுடன் இணைந்த தன்மையில் காணப்படுகின்றன. நாவுடன் பிணைந்து தழுவிய பதிகம் என்று குறிப்பிடுவதன் மூலம், அப்பர் பிரான் நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகம் பிணைந்து, எப்போதும் பிரியாது, இரண்டற கலந்து இருக்க வேண்டும் என்று இங்கே அறிவுறுத்துகிறார்.
கடைக்காப்பு என்ற வகையில் தனது பதிகங்களுக்கு அப்பர் பிரான், அந்தப் பதிகங்களைப் பாடுவதால் ஏற்படும் பலன்களைக் குறிப்பதில்லை. ஆனால், இந்த நமச்சிவாயப் பதிகத்தில் பலன் கூறப்பட்டுள்ளது. இதேபோல், இராமேச்சுரம் மீது அருளிய பாசமும், கழிக்க கில்லா என்று தொடங்கும் பதிகத்திலும், அப்பர் பிரான் அந்தப் பதிகத்தைப் பாடுவதால் ஏற்படும் பலனைக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பர் பிரானுக்கு சமணர்கள் கொடுத்த துன்பம் நீங்கப்பெற்று அவர் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரை ஏறியதே, இந்தப் பதிகம் அளிக்கும் பலனுக்குச் சான்றாகத் திகழ்கிறது.
பொழிப்புரை
மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக்கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால், எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.
•••
முடிவுரை
துன்பங்கள் நம்மைத் தாக்கும்போது, நம்முடன் இருந்து காக்கும் திருவைந்தெழுத்தினை நினைத்து, நாவுக்கரசர் நிரம்பிய அன்புடன் இந்தப் பதிகத்தைப் பாடியவுடன், கடலில் நாவுக்கரசரைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த கல் மிதந்தது என்றும், அவரைப் பிணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகள் அறுந்தன என்றும் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார். மேலும், நல்வினை தீவினை என்றும் இருவினைப் பாசங்கள், ஆணவ மலம் என்ற கல்லுடன் இறுகப் பிணித்தலால், பிறவிப் பெருங்கடலில் விழும் உயிர்களைக் கரையேற்றும் ஐந்தெழுத்து மந்திரம், நாவுக்கரசரைக் கடலில் ஆழாது மிதக்கச் செய்வது ஒரு வியப்பான செயல் அல்ல என்றும், சேக்கிழார் அதற்கு அடுத்த பாடலில் கூறுகிறார்.
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வரு பாவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ
நமது உயிர், இருவினைப் பாசங்களால் (அறம், பாவம்) ஆணவ மலத்துடன் பிணைக்கப்பட்டு, உடலுடன் கூடிய நிலையில் இருப்பது, திருவாசகம் சிவபுராணத்தில் மணிவாசகரால் உணர்த்தப்படுகிறது.
மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
தனது அலைக் கரங்களால், நாவுக்கரசுப் பெருமானை கரையில் கொண்டு சேர்ப்பதற்கு வருணன் மாதவம் செய்திருக்க வேண்டும் என்றும் சேக்கிழார் கூறுகிறார். நாவுக்கரசர் கரையேறிய இடம், கரையேறிய குப்பம் (கடலூருக்கு அருகில் உள்ளது) என்று அழைக்கப்படுகிறது.
பின்னர், நீலக்குடி தலத்தின் மீது அருளிய பதிகத்தில், அப்பர் பிரான், சமணர்களின் வஞ்சனையால் தான் கல்லோடு கட்டப்பட்டுக் கடலில் தள்ளப்படும் நிலைக்கு ஆளானது என்று குறிப்பிடுகிறார்.
கல்லினோடு என்னை பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் நன்றே
வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியினைக் கடந்து கொள்ளம்புதூர் சென்று இறைவனைத் தரிசிக்க ஞானசம்பந்தர் நினைத்தார். வெள்ளத்தை மீறி தன்னைக் கரை சேர்க்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை இறைவன் முன் வைத்தபோது அருளிய பதிகம், கொட்டமே கமழும் என்று தொடங்கும் பதிகம்.
அதேபோன்று, வெள்ளம் பெருகியோடும் காவிரியின் எதிர்க்கரையில் உள்ள திருவையாற்றுப் பெருமானைத் தரிசிக்க சுந்தரர் திருவுள்ளம் கொண்டார். வெள்ளம் வடிந்து தனக்கு வழிவிட வேண்டும் என்று சிவபிரானிடம் விண்ணப்பம் வைத்த பாடல், பரவும் பரிசு ஒன்று அறியேன் என்று தொடங்கும் பதிகம்.
இந்த இரண்டு பதிகங்களும், சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் பதிகம்போல் காந்தாரபஞ்சமம் பண்ணில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் உணரலாம். கடல் அலைகளின் இரைச்சலையும், நதியில் காணப்பட்ட வெள்ளப்பெருக்கின் ஓசையையும் மீறி தங்களது பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, உரத்த குரலில் பாடப்படும் காந்தாரபஞ்சமம் பண், மூவர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டதோ என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.
வாழ்வில் எத்தனை துன்பம் வந்தாலும், அவற்றை வெற்றிகொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும், நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக