திருவாசகம்-திருச்சாழல்
திரு வாதவூரடிகள் எனும் மாணிக்கவாசக பெருமான் தமிழ் நாட்டில் உ்ள்ள கோவில்கட்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சிவலாயத்தலங்களில் பதிகங்கள் பாடிக் கொண்டு வரும் நாளில் தில்லை வந்தார். ஊருக்கு புறத்தே ஓரிடத்தில் தங்கினார். அவ்வேளையில் ஈழத்து மன்னன் தீட்சிதர்கைள வாதுக்கு அழைத்தான். அது கண்டு பயந்து கலங்கிய தீட்சிதர்கள் அருள்மிகு நடராஜரை வேண்டி வணங்கினர். இறைவன் அசரிரி வாக்காக " வாதவூரரை அடைந்து வெல்லுங்கள் " என உரைத்தான். தீட்சிதர்கள் அப்படியே வாதவூரரை வணங்கி பணிந்தனர்.
ஈழத்து மன்னன் ஒருவன் தனது ஊமை மகளுடன் தில்லை
வந்திருந்ததையும், அவன் தன் புத்த மதத்தை நிறுவ முயன்றததையும் மாணிக்க வாசகரிடம் வினவினார்கள், அது குறித்து இறைவர் கூறிய கூற்றையும் அவரிடம் கூறி ஈழத்து மன்னனை வாதில் வெல்ல பணிந்தனர். அதன்படி மாணிக்க வாசகரும் ஒப்புக்கொண்டு, ஈழத்து மன்னனை வாதிட்டு , அறிவூட்டி அவர்களை சைவர்களாக்கினார். அந்த ஊமைப் பெண்ணான அவருடைய மகளை பேச வைத்தார், அவளது பேச்சின் தொகுப்ைப மாணிக்கவாசகர் " திருச் சாழல்" என்று அருளி செய்தார். அது மட்டுமல்ல, மந்திர வலிமையுள்ள அப்புத்தர்கள் அத்தனை பேரையும் ஊமைகளாக்கினார்.
" சாழல் " என்பது மகளிர் விளையாடும் ஒருவகை விளையாட்டு, சிலப்பதிகாரத்து அடியார்க்கு நற்சாழல் " நல்லார் தம் தோள்வீச்சு நற்சாழல்" என்று கூறப்பெற்றுள்ளது. ஆகவே ஒருத்தி பாட்டுடடைத் தலைவனை புகழ்ந்து அழகையும் அணியையும் பற்றி வினவ, மற்றொருத்தி, தோள் வீசி நின்று பாட்டாலே விடை அளிப்பதுதான் இந்த சாழல் விளையாட்டு,
இந்தப் பதிகப்பாடல்களை அறிந்து தெளிந்து ஓதினால் வழக்கறிஞர்கள், வழக்காடும் வாதத்திறமையும், மாணவ, மாணவியர்கள் திக்குவாயர்கள், ஊமை நன்கு பேசும் ஆற்றல் பெறுவார்கள் என்பது தின்னம். இப்பதிக பாடல்களைக் காண்போம்.
திருவாசகம்-திருச்சாழல்
பாடல் எண் : 1
பூசுவதும் வெண்ணீறு
பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
இயல்பானான் சாழலோ.
பொழிப்புரை :
பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ,
பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 2
என்னப்பன் எம்பிரான்
எல்லார்க்குந் தான்ஈ சன்
துன்னம்பெய் கோவணமாக்
கொள்ளுமது என்னேடீ
மன்னுகலை துன்னுபொருள்
மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச்
சாத்தினன்காண் சாழலோ.
பொழிப்புரை :
என் அப்பன், எம்பிரான், எல்லார்க்கும் தலைவன், அப்படிப் பட்டவன் தைத்த துணியைக் கோவணமாகக் கொண்ட தற்குக் காரணம் யாது? என்று புத்தன் வினவ,
கலைகளையும், வேதங் களையும் சரடாகக் கொண்டமைந்த பொருளாகிய கோவணத்தைச் சாத்திக் கொண்டான் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 3
கோயில் சுடுகாடு
கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி
தான்தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங்
கற்பொடிகாண் சாழலோ.
பொழிப்புரை :
சுடுகாட்டைக் கோயிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்டான். அன்றியும் அவனுக்குத் தாய் தந்தை யரும் இல்லை; இத்தன்மையனோ உங்கள் கடவுள்? என்று புத்தன் வினாவ,
எங்கள் கடவுளுக்குத் தாய் தந்தையர் இல்லாவிடினும், அவன் சினந்தால் உலகம் முழுவதும் கற்பொடியாய் விடும் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 4
அயனை அநங்கனை
அந்தகனைச் சந்திரனை
வயனங்கண் மாயா
வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடைய
நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத்
தாழ்குழலாய் சாழலோ.
பொழிப்புரை :
பிரமனையும், மன்மதனையும், யமனையும், சந்திரனையும் வடுப்படுத்தினன்; இதுதானோ உங்கள் கடவுளின் தன்மை? என்று புத்தன் வினாவ,
முக்கண்ணனாகிய எமது கடவுளே தண்டித்தால், தேவர்களுக்கு அதுவும் வெற்றியன்றோ என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 5
தக்கனையும் எச்சனையுந்
தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
றருளினன்காண் சாழலோ.
பொழிப்புரை :
தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ,
தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.
பாடல் எண் : 6
அலரவனும் மாலவனும்
அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றதுதான் என்னேடீ
நிலமுதற்கீழ் அண்டமுற
நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந்
தவிரார்காண் சாழலோ.
பொழிப்புரை :
பிரம விட்டுணுக்கள் அறிய வொண்ணாமல் நெருப் புருவாய் நின்றது யாதுக்கு? என்று புத்தன் வினாவ,
அப்படி எம் மிறைவன் நில்லாவிடின், அவ்விருவரும் தமது ஆங்காரத்தை விடார் என்று ஊமைப்பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 7
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து
பெருங்கேடாஞ் சாழலோ.
பொழிப்புரை :
பார்வதியை ஒரு பாகத்தில் அமைத்துக் கொள்ளு தலும், மற்றொருத்தியாகிய கங்கை நீருருவாகி அவன் சடையில் பாய் வதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ,
`நீருருவாகி அவ் விறைவனது சடையில் பாயாவிடின், பூமி முழுதும் பாதாளத்தில் வீழ்ந்துபெருங்கேடு அடையும்` என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.
பாடல் எண் : 8
கோலால மாகிக்
குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான்
அவன்சதுர்தான் என்னேடீ
ஆலாலம் உண்டிலனேல்
அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம்
வீடுவர்காண் சாழலோ.
பொழிப்புரை :
அக்காலத்தில் பாற்கடலில் உண்டாகிய நஞ்சை யுண்டான்; அதற்குக் காரணம் யாதென்று? புத்தன் வினாவ,
அந்த நஞ்சை எம்மிறைவன் உண்டிலனாயின் பிரம விட்டுணுக்கள் முதலான தேவர்கள் எல்லாரும் அன்றே மடிந்து ஒழிவார்கள் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.
பாடல் எண் : 9
தென்பா லுகந்தாடுந்
தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான்
பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற்
பேதாய் இருநிலத்தோர்
விண்பா லியோகெய்தி
வீடுவர்காண் சாழலோ.
பொழிப்புரை :
தென்திசை நோக்கி நடிக்கின்ற தில்லைச் சிற்றம் பலத்தான் பெண் பாகத்தை விரும்பினான், இவன் பெரும் பித்தனோ? என்று புத்தன் வினாவ,
எம்மிறைவன் பெண்பாகத்தை விரும்பில னாயின், நிலவுலகத்தோர் யாவரும் யோகத்தை அடைந்து மேலுல கத்தைச் சேர்வார்கள் என்று ஊமைப்பெண் விடை கூறினாள்.
பாடல் எண் : 10
தானந்தம் இல்லான்
தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
வான்பொருள்காண் சாழலோ.
பொழிப்புரை :
தான் முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ,
ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.
தொடரும் ..............................
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக