வியாழன், 1 அக்டோபர், 2015

திருத்தல யாத்திரை ( பகுதி 3)


திருத்தல யாத்திரை ( பகுதி 3) கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முதுமொழி இருந்தாலும் நம் வாழும் ஊரில் பல கோவில்கள் இருந்தாலும் அங்காங்கே உள்ள சிறப்பு தலங்களில் காணும் இறைவன் திருவருளை பெறவும் நம் மனதில் உள்ள சங்கடங்களை நீக்க எவ்வளவு நீண்ட தொலை தூரங்களில் இருந்தாலும் அங்கு நாமும் சென்று கோவில்கள் கண்டு விழாக்களில் பங்கு கொண்டு தரும் செய்து வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அப்படி சிறப்பு பெற்ற சிவதலங்கள் பன்னிருதிருமுறைகளில் கண்ட பாடல்கள் பல அருளாளர்களால் பாடப்பட்டு தன் தனி சிறப்பு பற்றி நாம் தெரிந்து அத்தலங்களில் இறைவன் தரிசனம் ெசய்து நம் கர்ம வினைகள் தீர்க்க தல யாத்திரை சென்று வருகிறோம, அந்த தலங்களைப்பற்றி இதுவரை திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் பாடலகள் பற்றி பார்த்தோம், தற்போது சுந்தரர் தரும் சிவ தலங்களைப் பற்றி காணுவோம். இவர் கூறும் தலங்கள் வைப்பு தலங்கள் என்ற வரிசையில் காணப்படுகிறது, அதாவது தலத்திலுள்ள இறைவரின் பெருமைகளை அத்தலத்திற்கு சென்று பாடாமல் மற்ற ஊர்களிலிருந்து சில ஆலங்களைப் பற்றி பாடுவது ைவப்பு தலங்கள் என்று பெயர் காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே மாட்டூ ரறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே. பொழிப்புரை : காட்டூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற கடலும் , மலையும் , தளிரும் , கொல்லுந் தன்மையுடைய சிங்க ஏறும் போல்பவனே , பாட்டினை மிகவுணர்ந்தவர் பலராலும் , அப் பாட்டுக்களால் பரவப்படுபவனே , எருதை ஊர்கின்ற அறமுதல்வனே , அடியேன் உன்னை என்றும் மறவாது பாடுமாறு திருவருள்செய்யாய் . காட்டூரூம் , கொழுநலும் வைப்புத் தலங்கள் , காட்டூரை , ` காட்டுப் பள்ளி ` எனினுமாம் . இதன்கண் , ` கடம்பூர் ` கானப்பேர் , கோட்டூர் , அழுந்தூர் , பனங்காட்டூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன பாடல் எண் : 2 கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக் கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே. பொழிப்புரை : கொங்கு நாட்டில் பாலை நிலத்தில் உள்ள குரக்குத் தளி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , மூப்படையாதவனே , வானத்தில் திரிபவனே , தேவர்க்குத் தலைவனே , மணவாளக் கோலம் உடையவனே , சங்கக்குழை பொருந்திய காதினையுடையவனே , அழகனே , எஞ்ஞான்றும் அவியாது எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்திக்கொண்டு , இரவில் , புறங்காட்டில் ஆடுகின்றவனே , உன் அடியாரது மனக் கவலையைப் போக்கியருளாய் . குரக்குத்தளி , வைப்புத்தலம் . இதன்கண் ` குற்றாலம் , வாய்மூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன பாடல் எண் : 3 நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே இறைக்காட் டானே எங்கட் குன்னை எம்மான் தம்மானே. பொழிப்புரை : நின்றியூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , நெறிபிறழாமையையுடைய , சான்றானவனே , அடியவர்கள் நெஞ்சத்தில் இருப்பவனே , அவர்கட்குச் சிறிதும் துன்பத்தைக் காட்டாதவனே , நீர் பொருந்திய சடையை யுடையவனே , நெருப்புப் பொருந்திய கையை யுடையவனே , எம்தந்தைக்குத் தந்தையே , நீ எங்கட்கு உன்னைச் சிறிதும் புலப்படுத்தாதவனோ ? நின்றியூர் , மறைக்காடு மாந்துறை , மாகோணம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன . மாகோணம் - கோணமாமலை ( திரிகோணமலை ). ` பாடல் எண் : 4 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே பேரூர் உறைவாய்பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே. பொழிப்புரை : ஆரூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே , அமுதம் போல்பவனே , பிறவாத நெறியை உடையவனே , நீயே இந்நிலவுலகில் நிறைந்துள்ள பலராலும் பரவப்படுபவன் பாரூர் ` என்பதும் , வைப்புத்தலத்தின் பெயர் என்பார் உளர் . இதனுள் , ` ஆரூர் , கருகாவூர் , பட்டீச்சுரம் , பாசூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப் பட்டன பாடல் எண் : 5 மருகல் லுறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே. பொழிப்புரை : மருகல் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே . சந்திரனைச் சடையில் அணிந்தவனே , கருகிய கண்டத்தை யுடையவனே , கரும்புபோல்பவனே , கட்டிபோல்பவனே , பவளம் போலும் வடிவத்தையுடையவனே , உன் அடியார்மேல் வருகின்ற , மெலிதற் காரணமான நோய்கள் விலகிச் செல்லவும் , உன்னை அடைந்து இன்புறவும் அவர்கட்கு அருள் செய்யாய் . மாகாளம் , வைப்புத்தலம் , அம்பர் மாகாளம் , இரும்பை மாகாளம் எனினுமாம் . இதனுள் , ` மருகல் , வெண்ணி , கானூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன பாடல் எண் : 6 தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே. பொழிப்புரை : வேங்கூர் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , இடபம் பொருந்திய கொடியையுடையவனே , நம்பனே , பக்கங்களில் உள்ள ஊர்களிற் சென்று பிச்சை தேடுகின்ற வேறுபட்ட தன்மையனே , மேலானவனே , உன் அடியார்மேல் உள்ள பொறுத்தற் கரிய நோய்கள் விலகிச் செல்ல அருள்புரியாய் . வேங்கூர் , நாங்கூர் , தேங்கூர் இவை வைப்புத்தலம் . ` தேங்கூர் ` என்றதனை , ` தெங்கூர் ` என்பது முதல் நீண்டதாக உரைத் தலுமாம் . இதனுள் , ` விளமர் , நல்லூர் , பழனம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன பாடல் எண் : 7 தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே. பொழிப்புரை : ` ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , தேனைப் பாதுகாத்தலை மேற்கொண்டு மலர்ந்த கொன்றைப் பூவினால் ஆகிய வளப்பமான மாலையை அணிந்தவனே , வானுலகத்தைக் காத்தலை மேற்கொண்டு நிற்கின்ற தேவர்களால் அறியப்படாத நிலையை உடையவனே , அழித்தல் தொழிலை உடையவனே , மேலானவனே , உடலோம்புதலை விட்டு , உன்னை விரும்பித் தொழுகின்றவர்களே , உன்னை உணர்வார்கள் . ஆனைக்கா , அண்ணாமலை ` என்னும் தலங்கள் எடுத் தோதப்பட்டன . பாடல் எண் : 8 துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய் திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே. பொழிப்புரை : துருத்தி முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஒளிவடிவானவனே , சொல்லின்கண் உள்ளவனே , கல்லால மர நிழலில் இருப்பவனே , வெயிலாகியும் , காற்றாகியும் , மற்றும் பல வாகியும் நிற்பவனே , என் மனத்தை மேன்மேல் திருந்தச்செய்து , அதனை இடமாகக் கொண்டவனே , உன்னை அன்புசெய்து அடைந்தவர்களது வினைகள் நீங்க அவர்கட்கு அருள்செய்யாய் இதனுள் , ` துருத்தி , நெய்த்தானம் , பருதி நியமம் , கயிலாயம் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன , பாடல் எண் : 9 புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே. பொழிப்புரை : புலியூர்ச் சிற்றம்பலம் முதலிய தலங்களில் எழுந்தருளியிருப்பவனே , ஞான வடிவினனே பழைமையான சிவலோகத்தை உடையவனே , பொலிவு பொருந்திய மூன்று ஊர்கள் எரிந்தொழியுமாறு அழித்த , புரித்த , புல்லிய சடையையுடையவனே , வலிமை பொருந்திய அரக்கனாகிய இராவணனது பெரிய இருபது கைகளையும் நெரித்த , பிறையைச் சூடினவனே , உன்னைக் கண்ணாற் காண அருளாய் . இதனுள் , ` புலியூர் , புகலூர் , கடவூர் ` என்னும் தலங்கள் எடுத்தோதப்பட்டன . புலியூர் - பெரும்பற்றப்புலியூர் ; தில்லை . ` சிற்றம்பலம் ` அங்குக் கூத்தப்பெருமான் உள்ள இடம் பாடல் எண் : 10 கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே. பொழிப்புரை : மை தீட்டிய , மாவடுப்போலும் பெரிய கண்களையும் , இனிமை நிலைபெற்ற அழகிய சொல்லையும் , இளமையையும் உடையவளாகிய சிங்கடிக்குத் தந்தையும் , சடையனாருக்கு மகனும் , யானைத் தோலையுடைய பெருமானுக்கு அடியனும் ஆகிய நம்பியாரூரனது இத்தமிழ்மாலையை , அப்பெருமான் எழுந்தருளி யிருக்கின்ற பல தலங்களையும் நினைந்து கவலையற்றிருந்து , சிறந்த வாயாற் பாடுவோர் , சிவலோகத் திருப்பவரேயாவர் . திருச்சிற்றம்பலம் மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக