திருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்!
உலக இயக்கத்திற்கு காரணியாக இருப்பது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் வாயிலாக உலகை இயங்கச் செய்து, ஈசன் திருநடனம் புரிகின்றார். இறைவனின் அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்கள் எடுத்துரைக்கும் உண்மை. எனவேதான் ‘அவனின்றி அணுவும் அசையாது; சிவனின்றி எதுவும் இசையாது’ என்று சொல்லி வைத்தார்கள்.
சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்கள், ஈசன் தனியாக ஆடியது என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சிறப்பு வாய்ந்தது, திருவாதிரை திருநாளில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் ஆகும்.
தில்லை என்ற பெயர் கொண்ட சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத திருவாதிரை தினத்தின் போது நடராஜர் நடனக் கோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.
ஆருத்ரா
மார்கழி மாதம் என்பது தேவலோகத்தவர்களுக்கு வைகறை (அதிகாலை) பொழுதாகும். இந்த நேரத்தில் காலைக் கடன்களை முடித்து நீராடி, இறைவனை தரிசிப்பது சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த மார்கழி மாதத்தில் நடைபெறும் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை காண தேவலோக தேவர்கள் அனைவரும் சிதம்பரம் வருவார்கள் என்பது நம்பிக்கையாக கூறப்படுகிறது. ‘ஆருத்ரா’ என்றால் ‘நனைக்கப்பட்டது’ என்று பொருள்படும்.
பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ர பாதர் இருவரும், திருவாதிரை தினத்தில் சிவபெருமான் ஆடிய நடனத்தை காண்பதற்காக தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு பணிந்த ஈசன், தில்லையில் மார்கழி மாத திருவாதிரை தினத்தில் தனது திருநடனத்தை காட்டி, கருணையால் இரு பக்தர்களையும் நனைத்த நிகழ்ச்சியே ஆருத்ரா தரிசனம்.
அது என்ன கதை?
ஒரு முறை திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால், திடீரென மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினார். அவர் முகத்தில் தென்பட்ட சந்தோஷமானது, பவுர்ணமி நிலவை போன்று பளிச்சிட்டது. தன் மீது பாந்தமாக படுத்திருக்கும் பரந்தாமனின் முகத்தில் இன்று என்ன இவ்வளவு பிரகாசம் என்று நினைத்தார், ஆதிசேஷன். ஆனந்தத்தின் காரணம் என்ன என்று ஹரியிடமே கேட்டார். மகாவிஷ்ணு கூறினார். ‘சிவபெருமான், நடராஜராக திருவாதிரை திருநாளன்று ஆடிய திருத் தாண்டவமே எனது மகிழ்ச்சிக்கு காரணம்’ என்றார். இதைக் கேட்டதும், திருமாலையே மகிழ்ச்சியில் திளைக்கச் செய்த அந்த நாட்டியத்தை தானும் காண நாட்டம் கொண்டார் ஆதிசேஷன். பார்த்தசாரதியும் ஆசி கூறி அனுப்பினார்.
ஆதிசேஷன் பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் மாறி, பதஞ்சலி முனிவர் ஆனார். பின்னர் நடராஜரின் திருநடனத்தை காண வேண்டி, ஈசனை நோக்கி தவம் புரிந்தார். கயிலைநாதனை நினைத்து அவர் இருந்த தவமானது உச்சநிலையை அடைந்தது. அவர் தன்னை மறந்தார்.
அப்போது, ‘பதஞ்சலி’ என்று மென்மையான குரல் கேட்டு கண்விழித்தார். அங்கு சாந்தமான முகத்துடன் சர்வேஸ்வரன் நிற்பதைக் கண்டு ஆனந்தத்தில் தாழ் பணிந்தார். தான் தவம் புரிந்ததற்கான காரணத்தை கூற எத்தனித்தார். அண்ட சராசரத்தையும் அடக்கி ஆளும் ஈசன் அறியாததும் உள்ளதா என்ன? சிவனே பேசத் தொடங்கினார், ‘பதஞ்சலியே! உன்னைப் போன்று எனது திருவாதிரை திருநடனம் காண வேண்டி, வியாக்ர பாதர் என்பவரும் என்னை நோக்கி கடும் தவம் செய்து காத்திருக்கிறார். எனவே நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீர்கள்!’ என்று கூறி மறைந்தார்.
பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும், ஈசன் கூறியபடி தில்லையம்பதிக்கு சென்றனர். அங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருநாளன்று தனது திருநடனத்தை அவர்கள் இருவருக்கும், காட்டி அருளினார் சிவபெருமான்.
இந்த தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. எனவே தான் தில்லை என்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, ஈசனின் திருநடனத்தை காண்பது விசேஷமாக உள்ளது அன்றைய தினம் விரதமிருந்து சிதம்பரம் சென்று அங்கு நடனம் புரியும் நடராஜனை தரிசனம் செய்தால், இப்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் விலகி, இன்பமான வாழ்வு அமைவதுடன், முக்தி கிடைக்க வழி செய்யும்.
ஆருத்ரா தரிசனம் காண்போம் துன்பமில்லா வாழ்வு பெறுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக