புதன், 13 ஜூலை, 2016

சிவபெருமானாரின்ஒப்புயர்வில்லாத தன்மை

சிவபெருமானாரின்ஒப்புயர்வில்லாத தன்மை


1. எமனை உதைத்தவர் இவரே.
" ...... மாணிதன் இன்னுயிர் உண்ண
வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனை கண்குருதிப்
புனல் ஆறு ஒழுக
உதைத்தெழு சேவடியான் கடவூர்
உறை உத்தமனே " திருநாவுக்கரசர் தி,மு. 4

தம்மை இடையறாது வணங்கியும் வாழ்த்தியும் அணுகியிருந்த மார்க்கண்டேயனுடைய இனிய உயிரை உண்பதற்குக் கோபத்துடன் அவனைத் தாக்கிய - கூற்றுவனை - எமமை,அவன் கண்கள் குருதியைச் சிந்துமாறு உதைத்த சேவடியை உடையவர் சிவபெருமானார்.

2. திருமாலுடைய மகனான மன்மதனை அழித்தவர்:
" காமனையும் நெருப்புமிழ் கண்ணினன் " தி,மு. 4 பதி. 107
தம்மீது மலர் அம்பு எய்த காமனை மன்மதனைத்தம்முடைய நெற்றிக்கண் மூலம்நெருப்பைச் செரிந்து அழித்தவர் சிவபெருமானார்.

3. உபமன்னியு முனிவருக்கு பாற்கடலையே அளித்தவர்:
" பாலனுக்கு அன்று பாற்கடல் ஈந்து" தி.மு.4 பதி 107 மற்றும்
" பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்தபிரான்" . தி,மு. 9. 

உபமன்னிய முனிவர் சிறுவனாக இருந்த பொழுது பால் வேண்டி அழுதார். அவருக்கு பாற்கடையே வழங்கியவர் சிவனார். 

அடியவர்களுக்கு எல்லையில்லாமல் வள்ளல் சிவபெருமானார் என்கிறார் சம்பந்தர்
" ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல்வருவார்" தி.மு. 2. கடவூர் மாயானம்

ஆசை தீர அடியவர் ஆசை தீர அருளுவார் , இறைவர் தம்முடைய ஆசை தீரக் கொடுப்பார் என்பதாகும்.

4. உலகை அழிக்க வந்த ஆலகால விசத்தை உண்டவர்
" கடலின் விடம் உண்டருள் செய்தபிரான்
கடவூர் உறை உத்தமனே " தி.மு. 4. பதி. 107

தேவர்கள் அமுதம் வேண்டி மந்திர மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். எதிர்பார்த்தது அமுதம். கிடைத்தது ஆலகால விசம். திருமால் முதற்கொண்டு தேவர்கள் யாவரும் திசை தெரியாமல் ஓடினார்கள்.முடிவில் சிவபெருமானாரைத் தஞ்சம் அடைந்தார்கள். உலகையே அழித்து விடும் போல வந்த விசத்தை சிவபெருமானார் உண்டு உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் காத்தருளினார்.

5, பிரம்மாவும் திருமாலும்காண முடியாத திருவடி:

" கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்" தி.மு. 4
திருமாலும் பிரமனும் தம்முள் தாமே பரம் பொருள் என்று இருவரும்போட்டியிட்டனர். அச்சமயம் சிவபெருமானார் ஓர் ஒளிப்பிழம்பாய் இருவருக்கும் இடையே தோன்றினார். " அடியையும் முடியையும் காண்பவரே பரம் பொருள் " என்று வான்வழியே ஒலி எழுந்தது. திருமால் பன்றியாய் வடிவெடுத்து திருவடியைக் காண பூமியைத் தோண்டினார். அடியை காண முடியவில்லை. பிரமன் அன்னப் பறவையாய் வடிவம் கொண்டு ஆகாயத்தில் பறந்து சென்றார் சிவபெருமானாரின் திருமுடியைக் காண முடியவில்லை.
" மாலும் பிரமனும் அறியா மாட்சியன் " சம்பந்தர் காழிப்பதிகம்

6. திருமாலுக்கு சக்கரம் அருள் செய்தவர்
" வாழி நன் மாமலர்க் கண் இடந்திட்ட அம்மாலவதற்கு அன்று ஆழியும் ஈந்து " ---- தி.மு. 4
" மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை " மாணிக்க வாசகர்

திருமால் சக்கரப்படை வேண்டி திருவீழிமழலை என்னும் தலத்தில் ஆயிரம் தாமரை மலர் கொண்டு அருச்சித்து வழிப்பட்டார் அச்சமயம் ஒரு மலர் குறைந்தது. எனவே தம்முடைய கண்ணைப் பெயர்த்து அர்ப்பணித்தார். இதற்கு மகிழ்ந்த சிவபெருமானார் சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்தார்.
அடியார்கள் வேண்டுவதை அருள் செய்பவன் சிவபெருமான்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

நன்றி : தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக