ஆலயங்களில் பலிபீடம் எதற்காக?
ஆலயங்களில் பலிபீடம் எதற்காக? ................... திருக்கோயில் அமைப்பில் முன் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், வாகனம்,விமானம் முதலியன முக்கியமானவை. இவை அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனிதன் இயல்பை அறிவுறுத்துவதே ஆலய அமைப்பாகும்.
கோ + இல் = கோயில் - தலைமையான இல்லம் என்பது பொருள். ஆ + லயம் = ஆலயம். ஆன்மா - உயிர்; லயிக்கும் – இறைவனோடு ஒன்றுபடும் இடம் என்பது பொருள். மனிதர் யார்? என்பதனை விளக்குவதே ஆலய வழிபாட்டு நிலையாகும். மனிதன் உடம்பாக மாட்டான். குணமாக மாட்டான். அறிவு ஆகமாட்டான். இவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன். அந்த நிலையே ஆன்மா ஆகும்.
ஆன்மாவின் பல்வேறு நிலைகளைச் சர்வஞானோத்தரம் என்னும் ஆகமம் சிறப்பாக விளக்குகின்றது. மனிதன் தன் உடம்பையே, தூல தேகத்தையே, பரு உடலையே தானாகக் கருதும்போது தேகான்மா எனப்படுகின்றான். சூக்குமை, பைசந்தி, மத்திமை,வைகரி ஆகிய வாக்குக்கள் அடிப்படையான இச்சைகள் ஆகியவற்றைத் தானாகக் கருதும்போது அந்தரான்மா எனப்படுகின்றான். தத்துவங்களையும், அவற்றை அறியும் கருவியாகிய மனத்தையும் தானாகக் கருதும்போது தத்துவ ஆன்மா எனப்படுகின்றான்.
முற்கூறிய அனைத்தையும் அடக்கியாளும் உணர்வு தோன்றி, அதனால் நான் பிரமம் என்ற முனைப்பு ஏற்படும்போது சீவான்மா எனப்படுவான். பின் நல்லறிவு தோன்றி யான், எனது என்ற செருக்கு நீங்கிப் பேரின்பத்தை அடைய மந்திரம் செபிக்கும்போது மந்திரான்மா எனப்படுவான். இறுதியாக, இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையில் பரமான்மா எனப்படுவான். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே கோயில் அமைப்புகள் உள்ளன.
முன் கோபுரம் உயர்ந்து காணப்படும். அதுவே தேகான்மா அல்லது தூல லிங்கம் எனப்படும். பலிபீடம் அந்தரான்மா அல்லது பத்திரலிங்கம் எனப்படும். கொடிமரம் தத்துவான்மா அல்லது துவச லிங்கம் எனப்படும். கருவறையில் உள்ள லிங்கம் சீவான்மா அல்லது சதாசிவ லிங்கம் எனப்படும். இதுவே அருவுருவ நிலையாகும்.‘காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய், நீள் நாகம் பூண்டார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்’ என்பார் சேக்கிழார் பெருமான்.
சிவத்துக்கு லிங்கம்-சிவத்துக்கு அடையாளம் - சிவத்துக்குக் குறி சிவலிங்கம் ஆகும். உருவம்-நடராசர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் முதலிய வடிவங்கள்,மகேசுவர மூர்த்தங்கள் எனப்படும். உருவம் இல்லாதது அருவநிலை, ஞானியர்களால் வழிபடும் நிலையாகும். அருவுருவம் சிவலிங்கம் ஆகும். இம்மூன்று நிலையும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலையாகும்.
“உருமேனி தரித்துக் கொண்டது
என்றலும், உருவுஇறந்த
அருமேனி அதுவும் கண்டோம், அருவுருவான போது
திருமேனி உபயம் பெற்றோம், செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே!”
என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.
திருக்கோயில் பூசை செய்யும் அர்ச்சகர் மந்திரான்மா அல்லது ஆன்ம லிங்கம் எனப்படும். பரந்த பெருவெளி பரமான்மா அல்லது அகண்ட லிங்கம் எனப்படும். இவற்றுள் பலிபீடம் என்றதும் பலி கொடுப்பது-உயிர்ப்பலி இடுவது என்ற தவறான எண்ணம் உண்டாகிறது.
‘கொடுமணி இயக்குமின் குறிஞ்சி பாடுமின், நறும்புகை எடுமின், பூப்பலி செய்ம்மின்,காப்புக் கடைநிறுமின்’ - என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.‘பூசை செய்யும் போது மணியடிக்க வேண்டும். தோத்திரம் பாட வேண்டும். வாசனைப் புகை எடுக்க வேண்டும். பூக்களைப் பலியாகத் தூவ வேண்டும். பூசை செய்வோர் காப்புக்கட்ட வேண்டும்’ என்ற முறை வழிபாட்டில் பண்டுதொட்டு இருந்து வந்ததை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். தற்காலத்தில் புஷ்பாஞ்சலி என்று கூறுவதையே இளங்கோவடிகள் பூப்பலி செய்தல் எனத் தமிழில் குறிப்பிட்டுள்ளார். கோவில்களிலுள்ள பலிபீடம் தத்துவ அமைப்பு உடையது. உயிர்ப்பலி இடுவது ஆகாது.
திருக்கோயில் அமைப்பு முறைகளைத் தெளிவாகப் பாடியவர் திருமூலர் ஆவார். கோயில் அமைப்பு முறைகளை நன்கு ஆராய்ந்து அறிவோர், கருவறையில் மேல் உள்ள விமானம் தூல லிங்கம் என்றும் கருவறையில் உள்ளே உள்ளது-சதாசிவ லிங்கம் அல்லது சூக்கும லிங்கம் என்றும், முன் பகுதியில் விரிந்து காணப்படும் பலிபீடம் பத்திர லிங்கம் என்றும் கொள்வார்கள்.
“தூய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற்சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
என்பது திருமந்திரப் பாடல் ஆகும்.
பலிபீடம், வாகனம், சிவலிங்கம் மூன்றும் முறையாக அமைந்திருக்கும். பலிபீடம்-பாசத்தின் அறிகுறி. வாகனம் பசுவை-உயிரைக் காட்டும் அறிகுறிப் பொருள். கருவறையில் அருவுருவமான சிவலிங்கம் - பதியைக் காட்டும் அறிகுறியாகும்.
“ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
என்று திருமூலர் பாடியுள்ளார்.
திருக்கோயில் அமைப்பை ஆராய்ந்து அறிவோர்க்குக் கருவறையில் உள்ள சிவலிங்கம் பதியாகும். லிங்கத்தின் முன் உள்ள எருது வாகனமே (ஆன்மா) ஆகும். பின் உள்ள பலிபீடம் பாசம் ஆகும் என்பது பாடற் பொருள். ஆன்மா,பாசத்தைவிட்டுப் பதியை அடைய வேண்டும். ‘பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியை அடைதல்’ என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.
கோவிலுக்குள் செல்லும்போது யான், எனது என்னும் செருக்கு, உலக பந்த பாசங்கள் ஆகியவற்றைப் பலியிட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே பலிபீடம் அமைக்கப்பட்டது.
எருது வாகனம் லிங்கத்தை நோக்கும்போது பலிபீடம் அதன் பின்னே அமைகிறது. பதியையே நினைக்கின்ற உயிர்களுக்குப் பாசங்கள் பிற்பட்டுத் தங்கிவிடும். எருது வாகனம் லிங்கத்தை நோக்காது வெளியே நோக்கினால், பலிபீடம் முன்னே இருக்கும். சிவ சிந்தனையில்லாது உலக சிந்தனை உடையவர்க்குப் பாசங்கள் மேலோங்கியிருக்கும்.
கோவில்களில் உள்ள வாகனங்கள் - ஆன்மாக்களின் பிரதிநிதிகள்.
பலி பீடங்கள் - உலக பாசங்கள்.
எனவே உலக பாசங்களை விட்டு நீங்கி இறைவனை அடைவதே உண்மை நிலையாகும்.
--திருச்சிற்றம்பலம்--
(வரைவு ; முனைவர் சென்னியப்பர். சைவ சித்தாந்தம் கட்டுரையில் கண்டது)
--திருச்சிற்றம்பலம்--
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
என்றலும், உருவுஇறந்த
அருமேனி அதுவும் கண்டோம், அருவுருவான போது
திருமேனி உபயம் பெற்றோம், செப்பிய மூன்றும் நந்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே!”
ஆய சதாசிவம் ஆகும் நற்சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக