செவ்வாய், 5 ஜூலை, 2016

சிவ சொரூபம்

சிவ சொரூபம்

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டுவதே சிவ சொரூபம்.

ஈசனின் சடாமுடியில் உள்ள சந்திரன் நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர் பிறையாகவும், தேய் பிறையாகவும் வரும் என்பதை காட்டுகிறது.

ஈசனின் சடாமுடியில் இருக்கும் கங்கை, எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. ஆசாபாசங்கள் நம்மை அலைக்கழித்தாலும்,நம்முடைய மனம் அதனால் கெட்டு போய் விடக் கூடாது என்பதை உணர்த்துவது தூய வெண்நிற கங்கை.

பரமனின் கழுத்தில் இருக்கும் பாம்பு உணர்த்துவது : ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாவக்குழியில் தள்ள நச்சுப் பாம்பாக சூழ்நிலை சுற்றிக் கொண்டு காத்திருக்கிறது, ஆனால் அந்த விசம் உள்ளே இறங்க நாம் விட்டு விடக்கூடாது . இதையே பரமனின் கழுத்தைச் சுற்றிய பாம்பும் அவர் விசத்தை கண்டத்தில் தேக்கி வைத்திருப்பதும் உணர்த்துகிறது.

மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கலாம், ஆனால் அவற்றிலிருந்து நீங்கிய, உயர்ந்த மனித உணர்வுடன் நாம் வாழ வேண்டும் என்பதை புலித்தோல் உடை அறிவுறுத்துகிறது.

தேகத்தில் பாதியாக தேவியை வைத்துக் கொண்டிருந்தாலும், சிவபெருமான் காமத்தை வென்றவர், காமனையே எரித்தவர.அதைப் போல நாமும் உலியலைப் பற்றி வாழ்ந்தாலும், காமத்துக்கு அடிமையாகாமல் அதைப் தூய்மைப் படுத்தி ஆன்மீகமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

வாழ வேண்டும் - சிவநெறி
வளர வேண்டும் - அன்பு
ஓங்க வேண்டும் - பண்பு
நிலைக்க வேண்டும் - தர்மம்
வெல்ல வேண்டும் - சத்தியம்
தழைக்க வேண்டும் - குடும்பம்

உங்கள் தெளிவுக்கு :

நவ லிங்கம் : 1- பாஸ்கரலிங்கம் 2. அங்கார லிங்ம், 3. குரு லிங்கம். 4. சனீஸ்வர லிங்கம், 5. கேதுலிங்கம், 6. சந்திரலிங்ம், 7. புதன் லிங்கம், 8. சுக்கர லிங்கம், 9. ராகு லிங்கம். ஆகியன ஒன்பது ஆகும்.

சிவ விரதங்கள் எட்டு :
1. சோமவார விரதம் - கார்த்திகைத்திங்கள்
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை மாத பெளர்ணமி
3. திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
4. சிவராத்திரி விரதம் - மாசி சிவராத்திரி
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
6. பாசுபத விரதம் - தைப்பூசம்
7. அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வ பட்ச அஷ்டமி
8. கேதார மாவிரதம் - தீபாவளி

உலகில் தீமைகள் அழிந்து நன்மைகள் வளரவும்,பக்தி தழைத்து ஓங்கவும் எல்லாம் வல்ல கயிலைநாதன் அருள் புரியட்டும்.
வளர்க ! சைவ சிவ நெறி !!

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக