சனி, 23 ஜூலை, 2016

உத்திரகோசமங்கை

உத்திரகோசமங்கை 
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.





திருஉத்தரகோசமங்கை
இறைவர் திருப்பெயர்   : மங்களேசுவரர், மங்களநாதர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர்.
இறைவியார் திருப்பெயர் : மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி.
தல மரம்   : இலந்தை.
தீர்த்தம்   : அக்கினி தீர்த்தம்.
வழிபட்டோர்   : மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன்,மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர்.
திருவாசகப் பாடல்கள்   : திருவாசகம் - "நீத்தல் விண்ணப்பம்"

தல வரலாறு

பாண்டிய நாட்டில் உள்ள தலம்.
மிகவும் பழமையான திருக்கோயில். இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக “மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது” என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது. மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப் படுவதாலும்; சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை புலனாகிறது. இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.
உத்தரம் – உபதேசம்; 
கோசம் – ரகசியம்; 
மங்கை – பார்வதி. 
பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது.
மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.
இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.
சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, இங்கிருந்த அடியார் சிவயோகிகள் முதலிய பல்லாயிரவர்க்கும் ஞானோபதேசம் செய்து முத்தி நல்கி, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இரு கோயில்களும் முதலில் இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு, பின்பு பலராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு – ஆதிசைவர்கள் வசமிருந்து பின்னரே இராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அதுமுதல் இன்றுவரை இராமநாதபுர சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாகவே இருந்து வருகிறது இத்தலம்.
இத்தலத்தில் நடராசர் கோயிலுக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்கக் கோயிலும் தனிக் கோயிலாக உள்ளது. இக்கோயில் எழுந்ததற்கான வரலாறு வருமாறு : – ஆர்கலிசூழ் தென்இலங்கை அழகமர் மண்டோதரிக்கு, அவளுடைய தவத்தை ஏற்றுக் காட்சி தந்தருளப் பெருமான் உள்ளங்கொண்டார். தன்பாலிருந்து ஐம்புலனும் அடக்கி அருந்தவம் புரிந்து வந்த ஆயிரம் முனிவர்களைப் பார்த்து “மண்டோதரிக்கு (வண்டோதரி) அருள் செய்ய யாம் இலங்கை மூதூர் செல்கின்றோம். நீவிர் அனைவரும் இத்தலத்தை விட்டு அகலாது இருப்பீராக! எம்மால் ஒப்படைக்கப்படும் இவ்வேதாகமச் சுவடிகளை கைவிடாது காத்து வருவீராக! இலங்கையரசன் இராவணனால் எப்போது எம்திருமேனி தீண்டப்படுகிறதோ, அப்போது அதற்கு அடையாளமாக, இத்திருக்குளத்தின் நடுவே அக்கினிப் பிழம்பு தோன்றும்” என்று வானொலியாக அருள் செய்தார்.


மாதர்குலத் திலகமாக விளங்கிய மாதரசி மண்டோதரி (வண்டோதரி) தன் உள்ளத்தில் எவ்வடிவில் இறைவனை நினைத்துத் தவமிருந்தாளோ அவ்வடிவத்தையே ஏற்று, அழகிய திருவுரக் கொண்டு இறைவன் சென்று அவளுக்குக் காட்சி தந்தார். தரிசனம் பெற்ற மாதரசி, தன்னை மறந்து, பரவசமாகி, கண்களாரக் கண்டு கைகளாரத் தொழுது பிரமித்துப்போய் அசையாது நின்றாள். அப்போது வௌ¤யே சென்றிருந்த இராவணன் உள்ளே வந்தான். இறைவனும் அழகான குழந்தையாக மாறிக் காட்சித்தர்அவன் அக்குழந்தையைக் கண்டு அதன் அழகில் மயங்கி ‘யார் பெற்றதோ இது’ என்று வினவினான். வண்டோதரி, “யாரோ ஒரு தவமகள் வந்து இக்குழந்தையைத் தந்து சென்றாள்” என்றாள். குழந்தையின் உடம்பில் மாறிமாறித் தோன்றிய வண்ணத்தைக் கண்டு உள்ளம் வியப்புற்ற இராவணன் அக்குழந்தையைக் கையாலெடுத்துத் தழுவி மகிழ்ந்தான். அவ்வளவில் – இறைவன் திருமேனியை இராவணன் தீண்டியதால் – குளத்தில் அக்கினிப் பிழம்பு தோன்றியது. அதுகண்ட முனிவர்கள் செய்வதறியாது திகைத்து, அதில் வீழ்ந்து மறைந்தனர். அவர்களுள் ஒருவர் மட்டும் தம் அறிவால் உணர்ந்து, இறைபணியில் நிற்றலே கடமையென்று முடிவு செய்து, அத்தீர்த்தத்தின் கரையிலேயே அமர்ந்திருந்தார்.
மூதாட்டி ஒருத்தி வந்து மண்டோதரி (வண்டோதரி)யிடமிருந்து குழந்தையைப் பெற்றுச் சென்றாள்.இறைவன் திரும்ப வந்து குளக்கரையில் இருந்தவர் மூலமாகச் செய்தியறிந்தார்.மூழ்கிய 999 பேர்களுக்கும், மூழ்காதிருந்தவருக்குமாக ஆயிரவருக்கும் இறைவன் உமையோடு விடைமீதமர்ந்து காட்சி தந்து தம் சந்நிதியில் தம்முடன் அவர்களை இருத்திக் கொண்டார்.இதனால் பெருமானுக்குக் “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்கலாயிற்று.ஆயிரவர்களும் ஒவ்வொரு இலிங்கவடிவில் இறைவனோடு ஒன்றினர் – அதுவே சஹஸ்ரலிங்கமாகத் தரிசனம் தருகின்றது.இக்கோயிலை வலம் வந்து வழிபடுவோர் எல்லாச் சித்திகளையும் அடைவர் என்பது தலவரலாறு.
சிறப்புக்கள்
அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌ¤யில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி ‘மொய்யார்தடம் பொய்கை’த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
கீர்த்தித் திருவகவலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் – ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு “காட்சி கொடுத்த நாயகன்” என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, ‘மகேந்திரம்’ என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே “மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்” என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.
தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.
பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.
சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.
நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.


அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள கூத்தப்பிரான் – நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் – முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.

இப்பெருமான் உலாவருவதில்லை. பெருமான் திருமேனியை உள்வைத்தே சந்நிதி கட்டப்பட்டுள்ளதால் திருமேனியை வௌ¤க் கொணரவும் இயலாது. (உலாவருவதற்கான மூர்த்தம் தனியே உள்ளது.)
மார்கழித் திருவாதிரையில் இப்பெருமானுக்கு மிகப்பெரிய அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் திருப்புத்தூர் வள்ளல் ஆறுமுகம் பிள்ளையவர்களின் குடும்பத்தினர். அன்று ஒரு நாள் மட்டுமே சந்தனக்காப்பு முழுவதும் களையப்பட்டு, இரவு அபிஷேகங்கள் கண்கொள்ளாக் காட்சியாக – அற்புதமாக நடைபெறுகின்றன. வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்நாளில் கட்டாயமாகச் சென்று தரிசிக்க வேண்டும்.
அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு மீண்டும் சந்தனக்காப்பு சார்த்தப்படும். அக்காப்பிலேயே அடுத்த மார்கழித் திருவாதிரை வரை பெருமான் காட்சித் தருகிறார்.
நாடொறும் உச்சிக் காலத்தில் நடைபெறும் ஸ்படிகலிங்க, மரகதலிங்க, அன்னாபிஷேகம் காணக் கொடுத்து வைக்க வேண்டும்.
நடராசரைத் தொழுது முன் மண்டபம் வந்தால், அங்குள்ள சிறிய மேடையில்தான் உச்சிக் காலத்தில் ஸ்படிக, மரகத லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தரிசிக்கும்போதே வலப் பக்கச் சாளரத்தின் வழியே கைகூப்பிய நிலையில் உள்ள மாணிக்கவாசகரையும், இடப்பால் திரும்பி உமாமகேசுவரரையும் ஒருசேரத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு எண்ணி இன்புறத் தக்கது.
உமாமகேசுவரர் சந்நிதிக்குச் சென்று தரிசித்துவிட்டு மறுபுறமுள்ள படிகள் வழியே இறங்கிப் பிராகார வலமாக வந்தால் திருப்பதிகங்கள் எழுதப்பட்டுள்ளமையும், குருந்தமர உபதேசக் காட்சி சந்நிதியும் கண்டு இன்புறலாம். கல்லில் குருந்தமரம் செதுக்கப்பட்டு கீழே அமர்ந்து இறைவன் (குருமூர்த்தமாக) உபதேசிக்க, எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சி நம்மை மெய்ச்சிலிர்க்க வைக்கிறது.
நடராசர் கோயிலுக்குப் பக்கத்தில் தனியே சஹஸ்ரலிங்க சந்நிதி உள்ள தனிக்கோயில் உள்ளது. மூலத்திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் – உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது. வியாசரும் காகபுஜண்டரும் இங்குத் தவம் செய்வதாக ஐதீகம். இதன் பக்கத்தில்தான் தலமரமான இலந்தைமரம் உள்ளது.
இராமநாதபுரம் சமஸ்தானத் தேவஸ்தானத்திற்குரிய திருக்கோயில்; சேதுபதி மகாராஜா குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலராவர்.
திருச்சிற்றம்பலம்


ஒம்நமசிவாய
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக