வெள்ளி, 22 ஜூலை, 2016

பக்தி என்பது?

பக்தி என்பது?


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்தது எனப் போற்றப் பெறுவது தமிழ்க்குடியாகும். அத்தமிழ்க்குடி, தான் புகழொடு தோன்றியது மட்டுமல்லாமல், பின்வரும் சந்ததியினரும் தமிழ்னென்று சொல்லவும், தலை நிமிர்ந்து நிற்கவும் ஏதுவான பல அரிய இலக்கிய, இலக்கணக் கருவூலங்களை வழங்கிச் சென்றது. ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் திறீஇத் தாம்மாய்ந்தனரே’ எனும் புறப்பாட்டின் பொருளைத் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டினர். அவ்வழியில் நாம் இன்று பெற்றுள்ள – கேடில் விழுச்செல்வம் கல்வியே, மற்றவை மாடல்ல” என உணர்ந்த முன்னோர் 
சுவையைத் தருகின்ற பொருளும், அதனை முகர்கின்ற பொறியும் சேர்ந்துழி உண்டாகின்ற சுவைகளை எட்டு எனப் பட்டியலிட்டுக் காட்டும் தொல்காப்பியம். நகை, அழுகை, இனிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன அவை.

                நகையே அழுகை இனிவரல் மருட்கை

               அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

               அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.

                              (தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல் நூற்பா)

எனும் நூற்பா இதனை விளக்குவதாகும். இவற்றுள் அடங்காததும், இவை எல்லாவற்றையும் விட உயர்ந்ததும், உடலுக்கு இன்ப துன்பம் பயக்கும் இவற்றைவிடச் சிறந்ததாய் உணர்வுக்கே உவப்பூட்டுவதும் ஆகிய ஒரு மெய்ப்பாடுதான் – சுவைதான் – பக்தியென்னும் சுவையாகும். பக்தி என்பது, குரு பக்தி, பதிபக்தி, பெற்றோரிடத்துப் பக்தி எனப் பலவகைப் பட்டதாயினும் ‘பக்தி’ யென்று சொன்னவுடன் அது சிறப்பாகக் கடவுள் மாட்டுக் கொள்ளப்படும் பக்தியையே குறிப்பதாகும். பக்திப் பரவசம் என்பது உணர்வு பூர்வமான ஓர் அனுபவம். பக்திச்சுவை வயப்பட்டால் இவ்வுலக இன்ப, துன்பங்கள் எதிரே தோன்றமாட்டா. அப்போது இறைமையும், ஆன்மாவும் ஆகிய இரண்டுமட்டுமே எஞ்சிநிற்கும். ஜீவன் எந்தவிதப் பற்றுமின்றிச் சிவத்தில் கலக்கும் நிலையை எய்துவிக்கும் மார்க்கமே பக்திச் செந்நெறியாகும்.

                எல்லாமற என்னை யிழந்த நலம்

      சொல்லாய் முருகா சுரபூ பதியே             (கந்தர் அனுபூதி)

               

தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்

      தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே     (அப்பர் தேவாரம்)



என அருளாளர்தம் அனுபவ உரைகள் சுட்டிக் காட்டுவன இப் பக்திப் பெருக்கையே. அந்த நிலையை எய்தியவர்கள், கும்பிடலே அன்றி வேறெதுவும் விரும்ப மாட்டார்கள். என், அந்தமில் இன்பத்து அழிவில் முக்தியைக்கூட விரும்பமாட்டார்கள். இன்பமும், துன்பமும் ஒன்றென மதிக்கும் செல்வத்தைப் பெறுவர் என பக்திக்கும், பக்தி வயப்பட்ட அடியார்க்கும் அடையாளங்களை வகுத்தவர், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர் எனச் சான்றோர்களால் போற்றப் பெற்ற சேக்கிழார் பெருமான் ஆவார்.

                “பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்

      தத்தமில் கூடி னாக்ள் தலையினால் வணங்குமாபோல்”

                                                (பெரிய புராணம்)
           

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கலே நோக்குவார்

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார். (பெரிய புராணம்)
என்பன அவர்தம் அருள்மொழிகள்,

      மேலும் பக்தியைப்பட்ட பரமன் அடியார்கள், ‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரந்தான் மறவாமை பொருள்’ எனக் கொண்டவர்கள் எனச் சேக்கிழார் குறிப்பிடுவார்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டிணம்
நன்றி ; சைவம்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக