திங்கள், 4 ஜூலை, 2016

கரம் குவித்து வணங்குதல் செய்வோம்

கரம் குவித்து வணங்குதல் செய்வோம்

" கரங்குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க" என்பார் மாணிக்க வாசகர். கை கூப்பி வணங்கி நிற்கும் அடியார்களின் பணிவால் இறைவர் மகிழ்ச்சி அடைகிறார் என்பது இந்த வரிகளின் மேலோட்டமான பொருள். அப்படி மகிழும் இறைவனின் பாதங்களுக்கு வெற்றி உண்டாகும் என்கிறார் மணிவாசகர்.
நம் பாரத கலாச்சாரத்தின் உன்னதமான பண்புகளில் ஒன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்தல். அப்படி சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கை குவித்து வணங்குகின்றனர் , கை கூப்பி வணக்கம் செலுத்துதல் என்பது இருகைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை இருப்பை மதித்து கவனத்தில் எடுத்துக் கொண்டதற்கான மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்தலில் கூட நம் மதம் பெரிய வாழ்வியல் கோட்பாட்டை எளிமையாக சொல்லிக் கொடுக்கிறது. 
என்னை ஆட்டி படைக்கும் ஐந்து புலங்களை கட்டுக் கோப்பில் வைத்திருக்கிறேன் என்பதை அடையாளப் படுத்துகிறேன் என்பது ஆன்மீக தத்துவம். இன்னொரு ஆழமான தத்துவமும் இருக்கிறது.
உலகம் என்பது பஞ்சபூதங்களின் தொகுப்பு. மனிதனும் பஞ்ச பூதங்களின் கலவைதான், உடம்பு என்பது பஞ்ச கோசலங்களினால் ஆனது என்பர். நம் கையில் இருக்கும் ஐந்து விரல்கள் அந்த ஐந்து கோசங்களை குறிக்கிறது. அவை அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்பதாகும்.
மனித உடல் அன்னத்தால் ஆனது இதை குறிப்பது அன்னமய கோசம்.
காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது இது பிராணமய கோசம் 
மனம் எண்ணங்களால் ஆனதால் அது மனேமய கோசம்
புத்தியால் அமைவது விஞ்ஞானமய கோசம்
இந்த கோசங்களால் மனிதன் பெறும் நிலைத்த இன்பம் ஆனந்தமய கோசம்.

மனிதன் ஐந்து கோசங்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்லோரிடமும் உள்ளது ஆத்மா என்ற ஒன்றுதான் என்பதை உணர்த்துவது தான் கரம் குவித்து வணங்குதல். ஒரு கை தன்னுடைய ஐந்து கோசங்கள் , இரண்டையும் இணைப்பது ஆத்மா என்ற ஒன்றே என்பதை உணர்த்துகிறோம். அதாவது நீயும் , நானும் ஒன்றே என்று உணர்த்துவது. இவ்வளவு ஆழமான நம் தமிழ் கலாச்சாரத்தை கொண்டு வணக்கம் செலுத்தும் முறையை மறந்து புறக்கணித்து விட்டு மேலை நாட்டு பழக்கமான கை குலுக்குதல் சல்யூட் செய்தல், முறையை நாம் கடைபிடித்து வருகிறோம்.
இந்த மேலை நாட்டினரின் பழக்கம் அர்த்தம் உள்ளதா? இல்லையா என்பது நமக்கு வேண்டாத ஒன்று. நம்முடைய அர்த்தமுள்ள கரம் குவித்து வணங்கும் முறையை பின்பற்றுவோம். கடவுளைத் தொழும்போது இரு கரங்களையும் கூப்பி தலைக்கு மேல் வைத்து ஓவ்வொரு விரலும், மற்ற கைகளின் விரல்களோடு தொடும்படி வைத்து வணங்க வேண்டும். வயதில் பெரியவர்களை முகத்திற்கு நேராகவும், சிறியோர்களை நெஞ்சிற்கு நேராகவும் கையை வைத்து வணங்குதல் வேண்டும். 
கரம்குவித்து வணக்கம் செலுத்தினால் கடவுளே மகிழ்கிறார் என்றால் மனிதர்கள் மட்டும் மகிழ மாட்டார்களா என்ன? எனவே கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்வோம். 


திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : பிரித்திலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக