திங்கள், 1 ஆகஸ்ட், 2016

இராமேஸ்வரம்


ஸ்ரீராமனின் தோஷம் நீங்கிய தலம்

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங் கள் உள்ளன. அதில் 11 லிங்கங்கள் வடநாட்டில் உள்ளன. மீதி ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ளது. ஸ்ரீராமனே சிவலிங்கம் செய்து சிவனை வழிபட்ட திருத்தலம் என்பதால் இது சைவம் மற்றும் வைணவர்கள் இணைந்து போற்றும் திருத்தலமாக விளங்குகிறது. 21 பிரதான சந்நிதிகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் 22 முக் கிய தீர்த்தங்களும் உள்ளன. ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியால் முப்பது ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட இத்திருக் கோயிலின் மூன்றாம் பிராகாரம் உலகப்புகழ் பெற்றது. 1212 தூண்கள் கொண்டது இந்தப் பிராகாரம்.

ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம்

அம்பாள் இத்திருத்தலத்தில் பர்வதவர்த்தினி என்ற திருநாமம் கொண்டு விளங்குகிறாள். அம்பாளின் பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. பர்வதவர்த்தினி அம்பிகையை சித்திரை வருடப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியின் பிராகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும் பெருமாளை தரிசிக்கலாம்.

பாலாபிஷேகம் நடக்கும் ஸ்படிக லிங்கம்

கோயிலின் முதல் பிராகாரத்தில், சீதாதேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மணல் லிங்கத்திற்கு ஸ்ரீராமபிரான் பூஜை செய்யும் சந்நிதி உள்ளது. ராமநாத சுவாமியின் கர்ப்பகிரஹத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. அபூர்வமானதும் சக்தி வாய்ந்ததுமாகக் கருதப்படும் இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணி வரையும் பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.


ஸ்ரீராமனுக்கு தோஷம் நீங்கிய தலம் என்பதால் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் தீரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தொன்றுதொட்டு தொடர்பு இருந்து வருகிறது. காசி யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரம் வந்து அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணலும் தீர்த்தமும் எடுத்துக்கொண்டு காசிக்குச் செல்ல வேண்டும். காசியில் கங்கை தீர்த்தத்தில் ராமேசுவரத்து மணலை போட்டு விட்டு, அக்னி தீர்த்தம் கொண்டு காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு, காசியிலிருந்து கங்கையின் புனித நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதை முழுமையாகச் செய்து முடித்தால் தான் காசி யாத்திரையின் பலனையும் முழுமையாக அடையலாம்.

மன்னர் வழி மரபு

சேதுச் சீமையின் மன்னர்களாலும் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தாராலும் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளது இத்திருக்கோயில். இதனால் மன்னர் குடும்பத்தினரும் ஜமீன்தார் குடும்பத்தினரும் இங்கு பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகின்றனர். கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் மற்றும் சுவாமி, அம்பாள் முதல் பிரகாரம் முதலியவை கி.பி. 1900-ல் தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தாரால் பெரும் பொருட் செலவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசைக்கு பித்திரு தர்பணங்கள் செய்ய உகந்த தலம் இராமேஸ்வரம் தவறாது சென்று இராமநாதஸ்வாமியின் அருள்பெற்று வாருங்கள்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக