சனி, 13 ஆகஸ்ட், 2016

தமிழ் திருமுறைகள் / தேவாரப்பதிகங்கள்

தமிழ் திருமுறைகள் / தேவாரப்பதிகங்கள்

பல சங்க இலக்கியங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதியிலும், மற்ற பல இடங்களிலும், சிவபெருமானைப் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், முழுவதும் சிவபெருமானின் புகழை எடுத்துரைக்கும் நூல்கள் ஏதுமில்லை.

சமண, புத்த சமயங்கள் ஓங்கி நின்று, இந்து சமயம் நலிவுற்ற நிலையில், சைவ சமயம் தழைத்தோங்க, இறைவனின் அருளால், கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுந்தவை தேவாரப் பாடல்கள். இறைவனுக்கு சூட்டப்பட்ட சொல் மாலைகள் என்ற பொருள் பட, தேவாரம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்தப் பாடல்கள், திருஞானசம்பந்தர், அப்பர் என்கிற திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் அருளப்பட்டன.



இவர்கள் ஒவ்வொருவரும், ஆயிரக்கணக்கில் பாடல்கள் அருளினார்கள் என்று கருதப்படுகிறது. ஆனால், தேவாரப் பாடல்களை சிதம்பரம் திருக்கோயிலில் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்தபோது, மிகவும் குறைவான பாடல்களே கிடைத்தன. எஞ்சியவை செல்லரித்துக் காணப்பட்டன. கிடைத்த தேவாரப் பதிகங்களை, பாடல்களுக்கு உரிய பண்ணின் முறைப்படி, முதல் ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்.

திருஞானசம்பந்தர் அருளிய 383 பதிகங்கள் (4147 பாடல்கள் கொண்டவை), முதல் மூன்று திருமுறைகளாகவும், அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் அருளிய 312 பதிகங்கள் (3065 பாடல்கள் கொண்டவை) நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறைகளாகவும், சுந்தரர் அருளிய 100 பதிகங்கள் (1026 பாடல்கள் கொண்டவை) ஏழாம் திருமுறையாகவும், வகுக்கப்பட்டன.

பின்னர் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் (எட்டாம் திருமுறை), திருவிசைப்பா திருப்பல்லாண்டு (ஒன்பதாம் திருமுறை) திருமந்திரம் (பத்தாம் திருமுறை), காரைக்கால் அம்மையார் போன்றோர் அருளிய பல வகையைச் சார்ந்த பாடல்கள் (பதினோராம் திருமுறை), பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை) என்று சேர்க்கப்பட்டு, இந்த சைவ இலக்கியங்கள் ‘பன்னிரு திருமுறை’ என்று பொதுப் பெயரால் அழைக்கப்படுகின்றன.

பன்னிரு திருமுறை - 1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்  

  திருமுறை            தொகுப்பின் பெயர்      அருளியவர்

 1                      திருக்கடைக்காப்பு     திருஞான சம்பந்தர்

 2                     திருக்கடைக்காப்பு     திருஞான சம்பந்தர்

 3                     திருக்கடைக்காப்பு     திருஞான சம்பந்தர்

4                     தேவாரம்               திருநாவுக்கரசர்

5                   தேவாரம்                 திருநாவுக்கரசர்


6                   தேவாரம்                 திருநாவுக்கரசர்


7                 திருப்பாட்டு                   சுந்தரர்

8                   திருவாசகம் & 
      திருச்சிற்றம்பலக் கோவையார்          மாணிக்க வாசகர்

9         திருவிசைப்பா, திருப்பல்லாண்டு  திருமாளிகைத்தேவர், சேந்தனார்,                                     
                                   கருவூர்த்தேவர்,                                            பூந்துருத்தி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்


10             திருமந்திரம்     திருமூலர்

11             பிரபந்தம்      திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி

12         திருத்தொண்டர் புராணம்        சேக்கிழார்

கருத்தாழம் மிக்க தேவாரப் பாடல்களை, பொருள் உணர்ந்து அனைவரும் பாட வேண்டும் என்ற எண்ணத்தில், தினம் ஒரு தேவாரப் பதிகம் என்ற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமுறை: 
திருமுறை என்ற சொல், திருவை அடையச் செய்யும் நூலுக்குப் பெயராயிற்று. திரு என்பது சிவம். `சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்பது மணிவாசகர் திருவாக்கு. அவர் சிவத்தைத் திரு என்றே குறிப்பிடுகிறார். 
`திரு' என்ற சொல்லுக்கு உண்மை, அறிவு, ஆனந்தம் என்ற மூன்று பொருளும் உண்டு. சிவபரம்பொருளைச் சச்சிதானந்த வடிவ மாகக் காட்டுகின்றன ஞானநூல்கள். சத் - உள்ளது, சித் - அறிவு, ஆனந்தம் - இன்பம். இம்மூன்றையும் உடையது எதுவோ அதுவே உண்மைத் திரு எனப்படும். சத் என்பது சிவம், சித் என்பது உமாதேவி, ஆனந்தம் என்பது முருகன். எனவே, உண்மை, அறிவு, இன்பம் இம் மூன்றும் நிறைந்ததே முழுமையான பரம்பொருளாகும். 
இப்பரம்பொருளை அடைய வழி கூறும் நூலே திருமுறை எனப்படும். முறை என்ற சொல், நூல் என்ற பொருளில் கந்த புராணத் துள் வந்துள்ளமையைக் காணலாம். 
"இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன்
முறைவரை வேன்என முயல்வது ஒக்குமால்"
என்பது கந்தபுராண அவையடக்கப் பாடல் பகுதி. 
மேலும் திரு என்ற சொல்லுக்கு, `கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்' என்று திருக்கோவையாருக்கு உரை கண்ட பேராசிரியர் குறிப்பிடுவதும் கொள்ளத்தக்கதே. என்னை? குழந்தை, யானை என்பனவற்றை எத்துணைப் பெரியவர்களாயினும் எத்துணைச் சிறியவர்களாயினும் காணுந்தோறும், காணுந்தோறும் விருப்பம் கொள்வர். அது போல் சத்து, சித்து, ஆனந்தமாக இருக்கும் பரம் பொருளையும் துன்புறுவோர் இன்புறுவோர் யாவராயினும் நினையுந்தொறும், காணுந்தொறும், பேசுந்தொறும் விருப்புற் றிருப்பரே அன்றி வெறுப்புற்றிருப்பாரல்லர் என்பதும் அறிந்து இன்புறத்தக்கது. 
தேவாரம்: 
இனி இத் திருமுறைகளுள் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல்களைத் தேவாரம் என்று அழைக்கிறோம். 
தேவ - ஆரம் என்று இதனைப் பிரிக்கலாம். தெய்வத்திற்கு மாலை போல்வது என்பது இதன் பொருள். மலரை இணைத்து மாலையாகச் சூட்டுவது போல, சொற்களை இணைத்துச் சொல்மாலையால் புகழே மணமாக இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றபொருளில் இப்பெயர் அமைந்திருத்தலைக் காணலாம். 
தே - வாரம் எனப் பிரித்தால் தெய்வத்திடம் அன்பை விளை விப்பது எனப்பொருள்படும். வாரம் - அன்பு. "வாரமாய் வணங்கு வார் வல்வினைகள் மாயுமே" என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு. 
மேலும், வாரம் - உரிமை. இறைவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பை - உரிமையை உள்ளவாறு தெளிவித்து உயிர்கள் பயன்பெற உதவும் பாடல்கள் கொண்ட நூல் என்ற பொருளும் இதற்கு உண்டு என்பதைக் காணலாம். 
தேவாரம் என்ற சொல் வழிபாடு என்ற பொருளிலும் வழங்கி உள்ளது. வாரம் என்பது முதல்நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை இயக்கம் நான்கினுள் ஒன்று. மந்தநடை முதல்நடை எனவும், விரைந்தநடை திரள் எனவும், இவ்விரண்டிற்கும் இடைநிகர்த்ததாய்ச் சொல்லொழுக்கும், இசையொழுக்கும் பொருந்திய இசைப்பாடல் வாரம் எனவும், சொற்செறிவும், பொருட்செறிவும் உடைய பாடல் கூடை எனவும் அடியார்க்கு நல்லார் உரை, விளக்கம் தருகிறது. எனவே, வழிபாட்டிற்குரிய இனிய இசைப்பாடல் என்பதே தேவாரம் என்பதன் பொருளாக அறியப்பெறுகிறது. 
தேவாரம் என்னும் பெயர்வழக்கு, இரட்டைப் புலவர்கள் பாடியுள்ள ஏகாம்பரநாதர் உலாவில்தான் இலக்கியத்தில் முதன் முதலில் காணப்படுகிறது. "மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும், தேவாரம் செய்த திருப்பாட்டும் ... " என்பது அவ்வுலாத் தொடராகும். 
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக