சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்
குருபூசை நாள் ஆடி சுவாதி நட்சத்திரம் நாள் 10.08.2016
திருக்கைலாசமலையிலே பிரமவிட்டுணு முதலிய ஆன்மாக்களுக்கு நிக்கிரகாநுக்கிரகங்கள் செய்யும் பொருட்டுத் தமது சத்தியாகிய உமாதேவியாரோடும் எழுந்தருளியிருக்கின்ற அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவபெருமானுடைய அடியார் கூட்டத்துள் ஒருவராகிய ஆலாலசுந்தரர் ஒருநாள் பத்தர்கள் செய்யும் அருச்சனையை அவர்கள் முத்திபெற்று உய்யும்பொருட்டுக் கொண்டருளுகின்ற அக்கடவுளுக்குத் தரிக்கும்பொருட்டு புஷ்பங்களைக் கொய்வதற்குத் திருநந்தனவனத்துக்குப் போனார். போனபோது பார்வதிதேவியாருக்குத் தரிக்கும் பொருட்டு அந்தத் திருநந்தனவனத்திலே புஷ்பங்கொய்து கொண்டு நின்ற அவருடைய சேடியர்களாகிய அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய பெண்களிருவரையுங்கண்டு அவர்கள்மேல் ஆசைவைத்தார். அவர்களும் ஆலாலசுந்தரைக் கண்டு அவர்மேல் ஆசை கொண்டார். பின்பு ஒருபிரகாரம் மனசைத் திருப்பி, புஷ்பங்களைக்கொய்து கொண்டு, ஆலாலசுந்தரர் சிவசந்நிதானத்துக்கும், சேடியார்கள் தேவிசந்நிதானத்துக்கும் திரும்பி விட்டார்கள். அப்பொழுது, சர்வான்மாக்களிடத்திலும் வியாபித்திருந்து அந்த அந்த ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயங்களினாலே செய்கின்ற கர்மங்களை அறிந்து அந்தக் கர்மங்களுக்கு ஏற்ற பலங்களை ஊட்டி அக்கர்மங்களைத் தொலைப்பிக்கின்ற காருண்ணிய ஸ்வரூபியாகிய கடவுளானவர் ஆலாலசுந்தரரை நோக்கி "நீ பெண்கள்மேல் இச்சைக்கொண்டபடியால், தக்ஷிணபூமியிலே மானுடதேகம் எடுத்துப் பிறந்து அந்தப் பெண்களோடு புணர்ந்து இன்பம் அனுவிப்பாய்" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக்கேட்ட ஆலாலசுந்தரர் மனங்கலங்கி, சந்நிதானத்திலே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி, எழுந்து நின்று, அஞ்சலியஸ்தராகி, "எம்பெருமானே! தேவரீருடைய அருமைத் திருவடிகளைப் பிரிதற்கு ஏதுவாகிய கொடும் பாவத்தைச் செய்தவனாகிய சிறியேன் மயக்கம் பொருந்திய மனிதப் பிறப்பை எடுத்து, செய்யவேண்டியது இன்னது என்றும் நீக்க வேண்டியது இன்னது என்றும் அறியாது, பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கும் போது, தேவரீர் வெளிப்பட்டு வந்து அடியேனைத் தடுத்து ஆட்கொண்டருளவேண்டும்" என்று பிரார்த்திக்க; வேண்டுவார் வேண்டியவைகளை ஈந்தருளுங் கடவுளும் அவ்வேண்டுகோளுக்கு இசைந்தருளினார்.
பின்பு ஆலாலசுந்தரர், பூமியிலே புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, தமிழ் வழங்கும் நிலமாகிய தென்னாட்டைச் சேர்ந்த திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரென்னுந் திருப்பதியிலே, ஆதிசைவரென்னுஞ் சிவப்பிராமண குலத்திலே, சடையனாரென்னுஞ் சிவாசாரியாருக்கு அவருடைய மனைவியாராகிய கற்பிலே சிறந்த இசைஞானியார் என்பவரிடத்திலே, ஆன்மாக்கள் சைவசமயமே சற்சமயமென்று உணர்ந்து அதன் வழி ஒழுகி உய்யும்பொருட்டு, திருவவதாரஞ்செய்தருளினார். திருவவதாரஞ்செய்த அப்பிள்ளையாருக்கு நம்பியாரூரர் என்று நாமகரணஞ் செய்தார்கள். அப்பிள்ளையார் ஒரு நாள் வீதியிலே சிறுதேர் உருட்டி விளையாடும்போது, அந்தத் திருமுனைப்பாடி நாட்டுக்கு அரசராகிய நரசிங்கமுனையரென்பவர் அப்பிள்ளையாரைக்கண்டு, அவர்மேல் ஆசைமிகுந்து, அவருடைய தந்தையாராகிய சடையனாரிடத்துப் போய், "இந்தப் பிள்ளையை எனக்குத் தாரும்" என்று கேட்டுப் பெற்றுக் கொண்டு போய், அவரை அபிமானபுத்திரராகப் பாவித்து வளர்த்தார். அந்தப் பிள்ளையார் அரசரால் வளர்க்கப்படினும், தமது பிராமண வருணத்திற்கு உரிய ஒழுக்கத்தியே உடையவராகி வளர்த்து உரிய காலத்திலே உபநயனஞ் செய்யப்பெற்று, வேதங்களை அத்தியயனஞ் செய்து சகல கலைகளிலும் மகா பாண்டித்திய முடையவராய், விவாகஞ் செய்தற்கு உரிய பருவத்தை அடைந்தார்.
அதுகண்டு தந்தையாராகிய சடையனார், ஆதிசைவ குலத்திலே தம்முடைய கொள்கைக்கு ஏற்பப் பந்துவாய்ப்புத்தூரில் இருக்கின்ற சடங்கவி சிவாசாரியரிடத்திலே அவருடைய புத்திரிக்கும் தம்முடைய புத்தரருக்கும் விவாகம் பேசிவரும் பொருட்டு, சில முதியோர்களை அனுப்பினார். அவர்கள் சடங்கவி சிவாசாரியாரிடத்திற் போய்ப் பேசி, அவர் உடன்பட்டது கண்டு, சடையனாரிடத்துக்குத் திரும்பிப்போய்த் தெரிவித்தார்கள். அப்பொழுது சடையனார் மகிழ்ச்சி கொண்டு, விவாகத்துக்குச் சுபதினமுஞ் சுபமுகூர்த்தமும் நிச்சயித்து, தம்முடைய ஞாதிகள், சிநேகர்கள், யாவரையும், விவாகபத்திரம் அனுப்பி அழைப்பித்தார். பின்பு நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திநாயனார் விவாக தினத்துக்கு முதற்றினத்திலே சமாவர்த்தனம் பண்ணி ரக்ஷாபந்தனஞ்செய்து, மற்றநாள் நித்தியகருமங்களை முடித்துக் கொண்டு, திருமணக்கோலங்கொண்டு, குதிரைமேல் ஏறி, மகாலங்காரத்தோடு புத்தூரிலே சடங்கவி சிவாசாரியர் வீட்டிலே திருக்கல்யாணப்பந்தருக்கு முன் சென்று, குதிரையினின்றும் இறங்கி, உள்ளே போய் ஆசனத்தில் இருந்தார்.அப்பொழுது
சிவபெருமான், தாந்திருக்கைலாசத்திலே சுந்தரமூர்த்திக்கு வாக்குத்தத்தம் பண்ணிய பிரகாரம் அவரைப் பிரபஞ்ச வாழ்க்கையிலே மயங்கவிடாமல் தடுத்து ஆட்கொண்டருளும் பொருட்டு ஒரு வயோதிகப் பிராமண வடிவங்கொண்டு, அவ்விடத்திலே எழுந்தருளிவந்து நின்று, "இவ்விடத்தில் இருக்குன்ற எல்லீர்களும் நான் சொல்லும் இவ்வார்த்தையைக் கேளுங்கள்" என்று சொல்லியருளினார். அப்படிச் சொல்லிய அந்த ஐயரை விவாகஞ் செய்யத் தொடங்கும் நம்பியாரூரரும் அங்கிருக்கின்ற மற்றப் பிராமணர்களும் பார்த்து, "இவ்விடத்திலே நீர்சொல்ல விரும்பியதைச் சொல்லும்" என்றார்கள். அதைக்கேட்ட ஐயர் நம்பியாரூரரை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு வழக்கு இருக்கின்றது. அதை முடித்துக்கொண்டு உன்னுடைய விவாகத்தை நடத்து" என்று அருளிச்செய்தார். நம்பியாரூரர் உமக்கும் எனக்கும் ஒரு வழக்கு உளதாயின், அதை முடித்தன்றி நான் விவாகஞ்செய்யேன். நீர் அவ்வழக்கு இன்னதெனத் தெரியும்படி சொல்லும்" என்று கேட்க; அந்த ஐயர் பிராமணர்களைப் பார்த்து, "இந்தத் திருநாவலூரனாகிய நம்பியாரூரன் எனக்கு அடியவன் என்று சொல்லியருளினார். அதைக் கேட்ட நம்பியாரூரர் "இந்த ஐயர் சொன்ன வார்த்தை நன்றாயிருக்கின்றது" என்று இகழ்ச்சியாகச் சொல்லிச் சிரிக்க; பிராமண வேடங்கொண்ட கடவுள் அவருக்குச் சமீபத்திலே போய், "அக்காலத்திலே உன்னுடைய பாட்டன் எனக்கு எழுதித்தந்த அடிமையோலை இதுவே. அப்படியிருக்க, இந்தக் காரியத்தைக் குறித்து நீ பரிகாசம் பண்ணியது என்ன" என்றார். உடனே நம்பியாரூரர் ஐயரைப் பார்த்து, "பிராமணருக்கு பிராமணர் அடிமையாதல் இன்றைக்கு நீயே சொல்லக் கேட்டோம். நீ பித்தனோ" என்று சொல்ல; ஐயர் "நான் பித்தனானாலும் ஆகுக. பேயனானாலும் ஆகுக. நீ இப்போது எத்தனை வசைமொழிகளைச் சொன்னாய். அவைகளினால் நான் சிறியதாயினும் வெட்கம் அடையேன். நீ என்னைச் சிறிதும் அறிந்திலை. இப்படி நின்று விளையாட்டுமொழிகள் பேச வேண்டாம். அடிமைத் தொழில் செய்ய வா" என்றார். அப்பொழுது நம்பியாரூரர் "இவர் அடிமையோலை ஒன்று உண்டென்றாரே. அதின் உண்மையை அறியவேண்டும்" என்று நினைந்து, "ஐயரே! உம்முடைய ஓலையைக்காட்டும்" என்று சொல்ல; ஐயர் "நீ இந்த ஓலையைப் பார்த்து நிச்சயிக்கத் தக்கவனோ? நான் இந்தச் சபையாருக்கு ஓலையைக்காட்டி மெய்யென்று அங்கீகாரஞ் செய்வித்தபின், எனக்கு ஊழியஞ்செய்தற்கு மாத்திரம் தக்கவன்" என்றார். அது கேட்ட நம்பியாரூரர் கோபங்கொண்டு, அவர் கையில் இருக்கும் ஓலையைப் பறிக்கும்படி அவருக்கு எதிரே விரைந்து சென்ற போது, அவர் ஓடத் தாமும் ஓடி, அவரைப் பின்றொடர்ந்து பிடித்து, ஓலையைப்பறித்து, "பிராமணர்கள் அடிமையாய் ஊழியஞ்செய்தல் என்னமுறை" என்று சொல்லிக் கிழிக்க; ஐயர் சுந்தரமூர்த்தியைப் பிடித்துக்கொண்டு, ஒருதரம் "இது முறையோ" என்று சத்தமிட, சமீபத்தில் நின்றவர்கள் அவ்விருவரையும் விலக்கி, "உலகத்திலே ஒருகாலமும் நடந்திராத ஏற்பாட்டைக் கொண்டு வழக்காடுகின்ற பிராமணரே! நீர் எங்கே இருக்கின்றவர்? சொல்லும்" என்றார்கள்., அதற்கு ஐயர் "நான் இந்தத் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறவன். அது நிற்க இந்த நம்பியாரூரன் தருமவழிக்கு விரோதமாக வலாற்காரம் பண்ணி என்கையில் ஓலையைப் பறித்துக் கிழித்தலினாலே, தான் எனக்கு அடியவன் என்றதை ஸ்திரப்படுத்தினான்" என்றார். அப்பொழுது சுந்தரமூர்த்தி நாயனார் "நீர் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கிறவராகில், இந்த வழக்கை அங்கே தானே பேசித் தீர்ப்புச் செய்ய வாரும்" என்று சொல்ல; ஐயர் அதைக்கேட்டு "திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பிராமணர்களுக்கு முன்னே ஆதியில் எழுதப்பட்ட மூலவோலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதைச் சாதிப்பேன்" என்று சொல்லி, தண்டை ஊன்றிக் கொண்டு முன்னே நடந்தார். சுந்தரமூர்த்தியும் மற்றப் பிராமணர்களும் பின்னாகப்போனார்கள்.
ஐயர் தமக்குப் பின்வந்த சுந்தரமூர்த்தியோடும் மற்றப் பிராமணர்களோடும் திருவெண்ணெய் நல்லூரை அடைந்து, அங்கு இருக்கின்ற பிராமணர்களுடைய சபையிலேபோய், அவர்களை நோக்கி, "அறிவால் அமைந்த பெரியோர்களே! திருநாவலூரில் இருக்கின்ற ஆரூரனானவன் நான் நீ எனக்கு அடிமையென்று காண்பித்த ஓலையைக் கிழித்துவிட்டு உங்களிடத்துக்கு வந்திருக்கின்றான்" என்று சொல்லி முறைப்பாடு செய்தார், அந்த அபியோகத்தைக் கேட்ட பிராமணர்கள் அவரைப் பார்த்து, "பிராமணர்கள் அடிமையாதல் இவ்வுலகத்திலே இதுவரையிலும் இல்லை ஐயரே! நீர் என்ன தப்புவார்த்தை சொன்னீர்" என்று சொல்ல; ஐயர் "நான் பொய்வழக்கு கொண்டுவரவில்லை மெய்வழக்கே கொண்டு வந்தேன். இவன் பறித்துக்கிழித்த ஓலை இவன் பாட்டன் தானும் தன் மரபினரும் எனக்கு அடிமையென்று எழுதித் தந்த அடிமையோலை" என்றார். உடனே பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இவர் உம்முடைய பாட்டன் அடிமைசெய்தற்கு இசைந்து எழுதிக்கொடுத்த ஓலையைக் காட்டினாராகில். நீர் அதைப் பறித்துக் கிழித்ததனால் உம்முடைய பக்ஷம் ஐயம்பெறுமோ! இவர் தம்முடைய வழக்கை யாவரும் அங்கீகரிக்கும்படி சொன்னார். இனி உம்முடைய எண்ணம் யாது" என்றார்கள். அதற்குச் சுந்தரமூர்த்தி "வேதாகமம் முதலாகிய சமஸ்தசாஸ்திரங்களையும் உணர்ந்த மகான்களே! நான் ஆதிசைவன் என்பது உங்கள் எல்லாருக்குந் தெரியும். அப்படியிருக்க, இந்தப் பிராமணர் தமக்கு என்னை அடிமையென்று சாதித்தாராகில் இது மனசினால் அறிதல் கூடாத ஒரு மாயையென்று நினைக்க வேண்டும். இதைக்குறித்து நான் யாது செய்வேன்! இது என்னால் அறியப்படுதல் கூடாது" என்று சொல்ல; பிராமணர்கள் கேட்டு, அந்த ஐயரைப்பார்த்து, "நீர் இவரை உம்முடைய அடிமை என்று சொல்லுகின்ற விவகாரத்தை எங்களுக்கு முன் உறுதிப்படுத்துதல் வேண்டும். ஒருவிவகாரத்தை உண்மையென்று நிச்சயிப்பதற்கு, அனுபவம், லிகிதம், சாக்ஷி யென்கின்ற மூன்றும் வேண்டும். இந்த ஆரூரர் உமக்கு அடிமையென்பதற்கு அம்மூன்றில் ஒன்றாயினும் காட்டும்" என்றார்கள். அப்பொழுது ஐயர் "இவன் கிழித்த ஓலை மூல ஓலையைப் பார்த்து எழுதிய படியோலை. மூலவோலையோ என்னிடத்தில் இருக்கின்றது" என்று சொன்னார். உடனே பிராமணர்கள் "அதை எங்களுக்குக் காட்டும்" என்று சொல்ல; ஐயர் "ஆரூரான் அதையும் பறித்துக் கிழியாதபடி செய்வீர்களாயின், அதைக்காட்டுவேன்" என்றார். அதற்குப் பிராமணர்கள் "நாங்கள் கிழிக்க விடோம்" என்று சொல்ல; ஐயர் மூல வோலையை கையில் எடுத்தார். அப்பொழுது சபையாருடைய கட்டளையினால் ஒரு கரணன் அவரைக் கும்பிட்டு அந்த ஓலையை வாங்கி, சுருளாயிருக்கின்ற மடிப்பை நீக்கி, விரித்து, சபையார் கேட்கும்படி, "திருநாவலூரில் இருக்கின்ற ஆதிசைவனாகிய ஆரூரன் என்கின்ற நான் திருவெண்ணெய் நல்லூரில் இருக்கின்ற பித்தனுக்கு நானும் என் சந்ததியாரும் வழித்தொண்டு செய்வதற்கு உள்ளும் புறமும் ஒப்ப உடன்பட்டு எழுதிக் கொடுத்தேன் இப்படிக்கு ஆரூரன்" என்று வாசித்தான். பின்பு அந்த ஓலையிலே சாட்சிகளாகக் கையெழுத்து இட்டவர்கள் தங்கள் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டார்கள். அதைக் கண்ட பிராமணர்கள் சுந்தரமூர்த்தியை நோக்கி, "இது உம்முடைய பாட்டனுடைய எழுத்தோ! பாரும்" என்று சொல்ல; ஐயர் அவர்களைப் பார்த்து, "இந்தச் சிறுவன் அடிமையோலையில் எழுதப்பட்டிருக்கின்ற தன் பாட்டன் கையெழுத்தைக் கண்டறியச் சக்தியுள்ளவனோ? இவன் பாட்டன் எழுதிய வேறு கைச்சாத்து உண்டாகில், வருவித்து இதனுடன் ஒத்துப் பார்த்து, உங்கள் மனசிலே தோன்றிய தீர்ப்பை சொல்லுங்கள்" என்றார். அதைக் கேட்ட பிராமணர்கள், சந்தேகந்தெளியும்படி, சுந்தரமூர்த்தி சமூகத்திலே அவர் பாட்டனார் எழுதிய கைச்சாத்து ஒன்று அழைப்பித்து, அதில் எழுத்தையும் அடிமையோலையின் எழுத்தையும் ஒத்துப்பார்த்து, "இவ்விரண்டும் ஒத்திருக்கின்றன இனி நீர் தப்ப வழி இல்லை. நீர் இந்தப் பிராமணருக்குத் தோற்றுப்போனீர். ஆதலால், அவர் கருத்தின்படி அவருக்கு ஏவல் செய்வதே கடன்" என்று சொல்ல; சுந்தரமூர்த்தி "விதிமுறை இதுவே யானால், நான் இதற்கு உடன்படாதிருத்தல் கூடுமோ" என்று சொல்லி நின்றார். அப்பொழுது பிராமணர்கள் அந்த ஐயரைப் பார்த்து, "நீர் காட்டிய அடிமையோலையிலே எங்கள் ஊரே உம்முடைய ஊராக எழுதப்பட்டிருக்கின்றது. ஆதலால், உமக்கு இவ்வூரிலே தலைமுறையாக இருக்கின்ற வீடும் ஸ்திதியும் காட்டும்" என்று சொல்ல; பிராமண வடிவங்கொண்ட கடவுள் "இத்தனை விருத்தர்களில் ஒருவரும் என்னுடைய வீடு முதலியவற்றை அறியாதிருப்பீரானால், காட்டுகிறேன். வாருங்கள்" என்று சொல்லி சுந்தரமூர்த்தியும் பிராமணர்களும் பின்னே வர தாம் அவ்வூரிலிருக்கின்ற திருவருட்டுறை என்னும் சிவாலயத்தினுள்ளே போனார். பின்பு சபையார் அவரைக்காணாது திகைத்து நின்றார்கள்.
அப்பொழுது சுந்தரமூர்த்திநாயனார் "என்னை அடிமை கொண்ட பிராமணர் நமது கடவுளாகிய சிவபெருமான் வீற்றிருக்குந் திருக்கோயிலினுள்ளே புகுந்தது என்ன ஆச்சரியம்" என்று நினைத்து, அத்தியந்த ஆசையோடும் தனியே அவரைத் தொடர்ந்துபோய் கூப்பிட; சிவபெருமான் தரும வடிவாகிய இடபவாகனத்தின்மேலே பார்வதி சமேதராய் வெளிப்பட்டு, சுந்தரமூர்த்திக்கு, "நீ முன்னே நமக்குத் தொண்டனாய் இருந்தாய். நீ பெண்கள்மேல் இச்சை வைத்ததினால் நம்முடைய ஆஞ்ஞையினாலே பூமியிலே பிறந்தாய், இப்பொழுது துன்பத்தைத் தருகின்ற சமுசாரபந்தமானது உன்னைத் தொடராதபடி, நாமே வலியவந்து உன்னைத்தடுத்து ஆட்கொண்டோம்" என்று திருவாய்மலர்ந்தருளினார்
சுந்தரமூர்த்தி நாயனாரை நோக்கி "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்றொண்டர் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலேயாம். ஆதலால், நம்மேலே தமிழ்ப்பாட்டுக்களைப் பாடு" என்று அருளிச்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் அஞ்சலியஸ்தராகி, "தேவரீர் பிராமண வடவங்கொண்டு தமியேனை வழக்கினால் வெல்லுவதற்கு எழுந்தருளி வந்தமையை அறியாத சிறியேனுக்குப் பழைய அறிவைத் தந்து உலக வாழ்க்கையிலே மயங்காமல் உய்யும்படி செய்தருளிய கடவுளே! அடியேன் தேவரீருடைய அநந்த குணங்களில் எதையறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்" என்றார். அதற்கு கடவுள் "நீ முன்னே என்னைப் பித்தனென்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தனென்றே பாடு" என்று சொல்லியருள; சுந்தரமூர்த்தியானவர் தம்மை ஆண்டருளிய பரமசிவன் மேல் "பித்தாபிறைசூடீ" என்னுஞ் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடியருளினார்.
இதற்கு முன்னே, திருக்கைலாசகிரியில் இருந்த பார்வதி தேவியாருடைய சேடியர்கள் இருவருள் ஒருவராகிய கமலினி என்பவர், அந்தத் திருவாரூரிலே, உருத்திர கணிகையர் குலத்திலே பிறந்து, பரவையார் என்னும் பெயரைப் பெற்று, மங்கைப் பருவம் அடைந்திருந்தார். அவரும் தினந்தோரும் பாங்கிமாரோடு திருக்கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணி வருவார்.
அந்தப் பரவையார் ஒருநாள் சுவாமி தரிசனம் பண்ணப் போகும்போது, அப்படியே சுவாமி தரிசனம் பண்ணும் பொருட்டுப் பரிசனங்களோடுசென்ற சுந்தரமூர்த்திநாயனார், திருவருள் கூட்ட அந்தப் பரவையாரைக் கண்டு ஆசை கொண்டு நின்றார். பரவையாரும் சுந்தரமூர்த்திநாயனாரைக் கண்டு ஆசைக்கொண்டு, பின் சுவாமி தரிசனம் பண்ண வேண்டும் என்னும் விருப்பமானது தம்மை அவ்வாசையினின்றும் நீக்கித் தன்வசமாக்கிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே செலுத்தச் சென்றார். சுந்தரமூர்த்தி நாயனார் அது கண்டு, "என் மனசைக் கவர்ந்துச் சென்ற அதிசௌந்தரியமுள்ள இந்தப் பெண் யார்" என்று வினாவ; அங்கு நின்றவர்கள் "இவர் உருத்திர கணிகையரில் ஒருவர். இவர் பெயர் பரவையார்" என்றார்கள் அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனாரோ திருக்கோயிலினுள்ளே போனார். அதற்குமுன் பரவையார் பிரதக்ஷிணஞ் செய்த சுவாமியை நமஸ்காரம் பண்ணித் துதித்துக் கொண்டு சந்நிதியினின்றும் புறப்பட்டார். சுந்தரமூர்த்திநாயனார் சுவாமி சந்நிதானத்திற் சென்று, பரவையார் மீது வைத்திருந்த பேராசையால் அவரைச் சேரவேண்டிச் சுவாமியினது திருவடிகளை வணங்கிக் கொண்டு, புறப்பட்டு, பரவையாரைத்தேடி தேவாசிரயன் என்னும் பெயரையுடைய ஆயிரக்கான் மண்டபத்தை அடைந்து, "வன்மீகநாதர் பரவையாரை எனக்குத் தந்தருளுவார்" என்று நினைத்துக்கொண்டு, அங்கு இருக்க; சூரியன் அஸ்தமயனமாயிற்று. அது நிற்க.
சுந்தரமூர்த்திநாயனார் பரவையாரோடு கூடி வாழ்ந்திருக்குங் காலத்தில், ஒருநாள் திருக்கோயிலை அடைந்தபோது தேவாசிரய மண்டபத்திலே சிவனடியார்கள் கூடியிருந்ததைக் கண்டு, அவர் கண்மேலே பத்திமிகுந்து, "இவர்களூக்கு நான் அடியனாகும் நாள் எந்நாள்" என்று நினைத்துக்கொண்டு, சுவாமிதரிசணஞ் செய்வதற்குத் திருக்கோயிலினுள்ளே போனார். அப்பொழுது அடியார்க்கு அடியனாக வேண்டுமென்று அவர் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் பொருட்டு, சுவாமி அவருக்குக் காட்சி கொடுத்தருளி, "நீ நம்முடைய அடியார்களை வணங்கி அவர் கண்மேலே பதிகம் பாடு" என்றருளிச்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் வணங்கி நின்று, "சுவாமி, அடியார்களுடைய வரலாறு இன்னது என்றும் அவர்கள் தன்மை இப்படிப்பட்டது என்றும் அறியாத தமியேன் எப்படிப் பாடுவேன்? அவர்களைக் குறித்துப் பாடுஞ் சத்தியைச் சர்வஞ்ஞத்துவம் உடைய தேவரீரே அடியேனுக்கு அருளிச்செய்யவேண்டும்" என்று பிரார்த்தித்தார். சுவாமி அதற்கிசைந்து, அடியார்களுடைய வழித்தொண்டு, அவருக்குத் தெரியும்படிச் செய்து, உலகத்தார் உய்யும் வண்ணம் வேதாகமங்களை அருளிச் செய்த தமது அருமைத் திருவாக்கினாலே "தில்லைவா ழந்தணர்த மடியார்க்கு மடியேன்" என்று அடியெடுத்துக்கொடுத்து மறைந்தருளினார். அது கண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் புறப்பட்டுத் தேவாசிரய மண்டபத்தை அடைந்து, அடியார் திருக்கூட்டத்தை பலமுறை வணங்கி அந்த அடியார்கள் யாவர்க்கும் வெவ்வேறாக அடியேன் என்று திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகம்பாடி அவர்களை வணங்கினார்.
திருக்கருப்பறியலூர், திருமண்ணிப் படிக்கரை, திருவாளொளி புற்றூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருவெதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி என்னும் ஸ்தலங்களை வணங்கி, திருவாரூரை அடைந்தார்.
அங்கே சுவாமிதரிசனஞ் செய்துக் கொண்டு பரவையாரோடு கூடியிருக்கும்நாளில்; ஒருநாள் பரவையாரை நோக்கி "எனக்குத் திருமுதுகுன்றர் தந்தருளிய பொன்னை மணிமுத்தநதியிலே புகவிட்டு வந்தேன். இப்போது இந்த ஸ்தலத்திலே இருக்கின்ற திருக்கோயிலுக்கு மேற்றிசையிலுள்ள குளத்திலே போய் அவருடைய அருளினாலே எடுத்துக் கொண்டு வருவோம், வா" என்றார். பரவையார் அதைக்கேட்டு, "இது என்ன அதிசயம்" என்று சொல்லி, புன்னகைச் செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் "பெண்ணே! நமது கடவுளுடைய திருவருளினாலே பொன் முழுவதும் குளத்திலே எடுத்து உனக்குத் தருவேன், இது சத்தியம்" என்று சொல்லி, பரவையாரும் கூட வர கோயிலிலே பிரவேசித்து, வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு, கோயிலை வலம் வந்து மேற்றிசையிலிருக்கின்ற திருக்குளத்தை அடைந்து, அதன் வடகீழ்க்கரையிலே போய், பரவையாரை நிறுத்தி, சுவாமியை வணங்கி, குளத்திலே இறங்கி, அங்கே தடவினார். அப்பொழுது, பரமசிவன், சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு திருப்பதிகம் பாடுவிக்க வேண்டும் என்னும் திருவிளையாட்டினாலே, பொன்னை அக்குளத்திலே வருவியா தொழிந்தருள; பரவையார் "ஆற்றிலே இட்டுக் குளத்திலே தேடுகிறீரா" என்றார். அதுகேட்ட சுந்தரமூர்த்திநாயனார் "சுவாமி! தேவரீர் முன் அருளிச் செய்தபடியே பரவையார் நகையாதபடி பொன்னைத் தாரும்" என்று திருமுதுகுன்றர் மேல் "பொன்செய்த மேனியினீர்" என்னும் திருப்பதிகம் பாடி, பரமசிவனுடைய திருவருளினால் வந்தெழுந்த பொற்றிரளை எடுத்து, கரையிலேற்றி, அந்தப்பொன்னையும் முன்கொண்டுவந்த மச்சத்தையும் உரைப்பித்து, மச்சத்திலும் பார்க்க இது உரை தாழ்ந்தது கண்டு, பின்னும் கடவுளைப் பாடினார். பாடியபோது, கடவுளானவர் உரை தாழாது அருள்செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் மன மகிழ்ந்து, பொற்குவைகளை ஆட்களிற் சுமத்தி, பரவையாரோடு வீட்டுக்கு அனுப்பி, தாம் திருக்கோயிலிலே போய்ச் சுவாமியை வணங்கி, வீட்டுக்குப் போய், பரவையாருடன் இன்புற்று வாழ்ந்திருந்தார்.
இப்படி நிகழுங்காலத்திலே, ஒருநாள் சுந்தரமூர்த்திநாயனார் திருக்கோயிலிலே போய்ச் சுவாமி தரிசனஞ்செய்து கொண்டு புறப்பட்டு, அடியார்கள் செய்கின்ற பலவகைத் திருத்தொண்டைப் பார்ப்பவராகி, புஷ்பமண்டபத்தினுள்ளே போனார். போனபொழுது, முன்போலத் திரையை நீக்கிப் பரமசிவனுக்குச் சாத்தும்படி தாம்கட்டிய பூமாலைகளைக் கொடுத்துவிட்டு முன்போல மறைந்த சங்கிலியாரை விதிகூட்டக் கண்டு, அவர்மேல் ஆசை கொண்டு, புறத்திலே போய், புஷ்பமண்டபத்தினுள்ளே ஒருபக்கத்திலே திரைக்குள்ளே நின்று ஒரு பெண் என்னுடைய மனசைக் கவர்ந்துக் கொண்டாள். அவள் யார் என்றார். சமீபத்திலே நின்றவர்கள் "அவர் பரமசிவனுக்கு மிகுந்த பத்தியோடு திருத்தொண்டு செய்கின்ற கன்னிகையாகிய சங்கிலியார்" என்றார்கள். அதைக்கேட்ட சுந்தரமூர்த்திநாயனார் திருக்கோயிலினுள்ளே போய், சுவாமியை வணங்கி நின்று, சங்கிலியாரை தமக்குத் தந்தருளும்படி பிரார்த்தித்துக்கொண்டு, திருக்கோயிலின் புறத்திலே போய், ஓரிடத்திலேயிருக்க; சூரியன் அஸ்தமயனமாயிற்று. அப்பொழுது பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திலே போய்; "இவ்வுலகத்தில் உள்ளவர்கள் யாவராலுஞ் செய்யப்படுதல் கூடாத பெருந்தவத்தைச் செய்கின்ற உத்தமியாகிய சங்கிலியை உனக்குத் தருவோம். நீ கொண்ட கவலையை ஒழி" என்று திருவாய் மலர்ந்தருளி, அத்தயாமத்திலே கன்னிமாடத்திலே நித்திரை செய்கின்ற சங்கிலியாருக்குச் சொப்பனத்திலே தோன்றினார். தோன்றியபொழுது, சங்கிலியார் பரவசமாய் விழுந்து நமஸ்கரித்து எழுந்துநின்று, "சுவாமி அடியேன்! உய்யும்படி தேவரீர் அடியேனிடத்திலே எழுந்தருளி வரும்பொருட்டுப் பூர்வ ஜென்மத்திலே என்ன தவஞ்செய்தேன்" என்று சொல்ல; பரமசிவன் "சங்கிலியே! நம்மேலே மிகுந்த பக்தியுடையவனும் திருவெண்ணெய்நல்லூரிலே சமஸ்தரும் அறியும்படி நம்மாலே தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் நமக்குத் தோழனும் ஆகிய சுந்தரன் தனக்கு மனைவியாக உன்னைத் தரும்பொருட்டு என்னைப் பிரார்த்தித்தான். நீ மகிழ்ச்சியோடும் அதற்கு உடன்படு" என்று சொல்லியருளினார். அதற்கு சங்கிலியார் "சுவாமி அடியேன் தேவரீருடைய ஆஞ்ஞையைத் தலைமேற் கொண்டேன். தேவரீர் சொல்லியருளிய நாயனாருக்கே மனைவியாதற்கு உரியேன். ஆயின், அவர் திருவாரூரினிடத்தே மிகுந்த சந்தோஷத்தோடு வசிக்கின்றவர் என்பதைத் தேவரீர் திருவுளங்கொண்டருளும்" என்று விண்ணப்பஞ்செய்தார். அது கேட்ட கடவுள் "பெண்ணே! அந்தச் சுந்தரன் உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதஞ் செய்து தருவான்" என்று சொல்லியருளி, சுந்தரமூர்த்திநாயனாரிடத்திற் சென்று, "நாம் சங்கிலியிடத்திலே போய் உன்னெண்ணத்தைத் தெரிவித்தோம். "நான் உன்னைப் பிரிந்து செல்லேன் என்று நீ அவளுக்குச் சபதஞ் செய்து கொடுத்தால், அவள் உடன்படுவாள். இனி உனக்கு நாம் என்ன செய்யவேண்டும்" என்று அருளிச் செய்ய; சுந்தரமூர்த்தி நாயனார் இக்கடவுளுடைய பிறதலங்களையும் சென்று வணங்க விரும்புகின்ற அடியேனுக்கு இது விலக்காகும்" என்று நினைத்து அவரை வணங்கி, "சுவாமி! சங்கிலிக்கு நான் உன்னை பிரியேன் என்று சபதஞ் செய்து கொடுக்கும் பொருட்டு அடியேன் அவளோடு தேவரீருடைய ஆலயத்துக்கு வந்தால், அப்பொழுது தேவரீர் அவ்வாலயத்தை விட்டுத் திருமகிழின் கீழ் இருந்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அதற்கு கடவுள் இசைந்தருளி, சங்கிலியாரிடத்திலே முன்போலப் போய், "பெண்ணே, சுந்தரன் உனக்குச் சபதஞ்செய்து தருதற்கு உடன்பட்டிருக்கிறான். அவன் நம்முடைய ஆலயத்திலே சபதஞ்செய்துதருதற்கு வந்தால் நீ அதற்கு உடன்படாமல் மகிழின் கீழே சபதஞ் செய்து தரும்படி கேள்" என்று சொல்லி மறைந்தருளினார்.
விவாகஞ்செய்த சுந்தரமூர்த்திநாயனார் சங்கிலியாரோடு கூடி அவ்வூரிலே வாழ்ந்திருந்தார். இருக்கும் நாளிலே, ஒரு நாள் திருவாரூரிலிருக்கின்ற வீதிவிடங்கப் பெருமானுடைய வசந்தோற்சவகாலம் சமீபித்ததை அறிந்து, "வன்மீக நாதரை இவ்வளவு காலமும் மறந்திருந்தேன்" என்று துக்கித்து அவர்மேலே "பத்திமையு மடிமையையுங் கைவிடுவான் பாவியேன்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். பின்னொரு நாளிலே அவரை மிக நினைந்து, திருவாரூருக்குப் போகக் கருதி, ஆலயத்திலே புகுந்து சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு, திருவொற்றியூரை நீங்கியபொழுது, சுந்தரமூர்த்திநாயனாருக்கு, அவர் சபதந்தவறினமையால், இரண்டு கண்களும் மறைந்தன. அப்பொழுது நாயனார் திகைத்து நெடிதுயிர்த்து, "சபதந்தவறினமையால், எனக்கு இது நிகழ்ந்தது" என்று நினைந்து, "இந்தக் கொடுந்துயரத்தை நீக்கும்பொருட்டு நமது கடவுளைப் பாடுவேன்" என்று துணிந்து "அழுக்கு மெய் கொடுன் றிருவடி யடைந்தேன்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். பாடியும், கடவுள் அத்துயரத்தை நீக்கினாரில்லை. ஆயினும், திருவாரூருக்குச் செல்லவேண்டுமென்கிற பேரவாவினால் சிலர் முன்னே வழிகாட்டிக் கொண்டு செல்ல, திருமுல்லைவாயிலுக்குப்போய் சுவாமியை வணங்கி, "விண்பணிந் தேத்தும் வேதியா" என்னுந் திருப்பதிகத்தைப்பாடி, திருவெண்பாக்கத்தை அடைந்து சிவபெருமானை வணங்கி, "திருக்கோயிலுள்ளீரே" என்று விண்ணப்பஞ்செய்ய, சிவபெருமான் அவருக்கு ஊன்றுகோல் கொடுத்து, "உள்ளோம் போகீர்" என்று சொல்லியருளினார். சுந்தரமூர்த்தி நாயனார் "பிழையுளன பொறுத்திடுவர்" என்னுந் திருப்பதிகம் பாடிக்கொண்டு, பழையனூரிலே போய், காரைக்காலம்மையார் திருத்தலையாலே பிரதக்ஷிணஞ்செய்த திருவாலங்காட்டுச் சமீபத்திலே நின்று அதனை வணங்கி, "முத்தா முத்திதரவல்ல"என்னுந் திருப்பதிகம் பாடி, திருவூற லிற் சென்று வணங்கி, காஞ்சிபுரத்தை அடைந்தார்.
சுந்தரமூர்த்திநாயனார் தாம் தினந்தோறும் சுவாமிதரிசனஞ் செய்து திருப்பதிகங்கள் பாடிக்கொண்டு திருவாரூரில் வசிக்குங்காலத்திலே; தாம் பரமசிவனைத் தூதனுப்பிய சமாசாரத்தைத் திருப்பெருமங்கலத்திலிருந்த ஏயர்கோன்கலிக்காம நாயனார் கேள்வியுற்று அது தகுதி அன்று என்று தம் மேலே கோபங்கொண்டிருத்தலை அறிந்து, அதைக் குறித்துப் பரமசிவனுக்கு விண்ணப்பஞ்செய்தார். பரமசிவன் அக்கலிக்காம நாயனாரைச் சூலைநோயினால் வருத்தி, அவரிடத்தில் எழுந்தருளி, "சுந்தரனாலன்றி இந்நோய் தீராது" என்று அருளிச் செய்து, அவர் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கொண்டு அந்நோயைத் தீர்ப்பதற்கு உடன்படாமையைக் கண்டு, சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் சென்று. "நம்முடைய ஏவலாலே கலிக்காமனை வருத்துகின்ற சூலையை நீ போய்த்தீர்ப்பாய்" என்றார். சுந்தரமூர்த்தி நாயனார் அதைக்கேட்டு மனமகிழ்ந்து, அவரிடத்திற்குப் போம்படி பிரஸ்தானமாகி, சூலைதீர்க்கும்படி தாம் வருஞ் சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தற்கு ஆளனுப்பினார்.
பிறஸ்தலங்களையும் வணங்கிக் கொண்டு, மீண்டு அத்திருவாரூரிற் சேர்ந்து எழுந்தருளியிருந்தார்.
அப்பொழுது சேரமண்டலத்திலுள்ள கொடுங்கோளூரிலிருந்து சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய பத்தி மகிமையைப் பரமசிவத்தினால் அறிந்து, அவரைத் தரிசிக்க விரும்பித் திருவாரூரை அடைந்தார். சுந்தரமூர்த்திநாயனார் மகிழ்ச்சியோடு அவரை எதிர்கொள்ள; அவர் சுந்தரமூர்த்தி நாயனாரை நமஸ்கரித்தார். உடனே சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரை நமஸ்கரித்து, அவரை எடுத்துத்தழுவ; அவரும் தழுவினார். இப்படி இவர்கள் நண்புகலந்தமையால், சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சேரமான்றோழர் என்னும் பெயர் உண்டாயிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான்பெருமாணாயாரைக் கையிலே பிடித்துக் கொண்டு, திருக்கோயிலிலே பிரவேசித்து சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு, பரவையார் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய், அவருக்கும் அவரோடு வந்த சமஸ்தசனங்களுக்கும் விருந்துசெய்து, சில நாள் அவரோடு அங்கிருந்து, பின் பாண்டியநாட்டிலிருக்கின்ற மதுரை முதலாகிய சிவ ஸ்தலங்களுக்கு யாத்திரைசெய்ய விரும்பி, வன்மீகநாதரை வணங்கிக்கொண்டு திருவாரூரை நீங்கி, கீழ்வேளூரை அடைந்து சுவாமிதரிசனஞ் செய்துகொண்டு, திருநாகைக் காரோணத்துக்குச் சென்று திருப்பதிகம் பாடி, சில நாள் அங்கிருந்து, வேதாரணியத்திற்குப் போய் திருக்கோயிலிலே சென்று, திருநாவுக்கரசு நாயனாராலும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராலும் முறையே திறத்தற்கும் அடைத்தற்கும் திருப்பதிகம் பாடப்பெற்ற திருவாயிலை அடைந்து, ஆனந்தபாஷ்பம் சொரிந்து அந்நாயன்மார்களை நினைந்து வணங்கி, வேதங்களால் அருச்சிக்கப்பட்ட கடவுளை நமஸ்கரித்து, "யாழைப்பழித்து" என்னுந் திருப்பதிகம் பாடிப் புறப்பட்டு, சிலநாள் அங்கிருந்து, அகத்தியான்பள்ளிக்குப்போய்ச் சுவாமிதரிசனஞ்செய்து, குழகர்க் கோடிக்குப்போய்ச் சுவாமிதரிசனஞ் செய்து "கடிதாய் கடற்காற்று" என்னும் திருப்பதிகம்பாடி, சோழநாட்டைக் கடந்து, பாண்டி நாட்டை அடைந்தார்.
சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாணாயனாரோடும் அந்தக் கொடுங்கோளூரிலே சிலநாள் இருந்தார். ஒருநாள் திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற வன்மீகநாதருடைய திருவடிகளை நினைந்து; "பொன்னு மெய்ப்பொருளும்" என்று திருப்பதிகம் எடுத்துத் திருப்பாட்டினிருதிதோறும் "ஆரூரானை மறக்கலுமாமே" என்று பாடி, திருவாரூருக்குச் செல்லும் பொருட்டு அடியார்களோடு எழுந்து வழிக்கொண்டு சென்றார். செல்லும் பொழுது, சேரமான் பெருமாணாயனார் பிரிவாற்றாதவராகி, எழுந்த அவரைப் பின்றொடர்ந்து போகாதபடி தடுத்து, அதற்கு அவர் உடன்படாமை கண்டு மந்திரிகளை அழைத்து தம்முடைய நகரத்திலிருக்கின்ற களஞ்சியத்திலுள்ள பொன், இரத்தினம், ஆபரணம், வஸ்திரம் சுகந்த வர்க்கம் முதலிய திரவியங்களெல்லாம் பல ஆட்களின் மேலே சுமத்தி அனுப்பும்படி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அப்படியே செய்தார்கள்.
இப்படிப் பலநாட்சென்றபின், ஒருநாள், சேரமான் பெருமாணாயனார் ஸ்நானம் பண்ணும்பொழுது, சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்ஞைக்களத்துக்கு எழுந்தருளி, அங்கிருக்கின்ற சிவாலயத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து, உள்ளே புகுந்து, சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து நின்று, அக்கினியிற்பட்ட மெழுகுபோல மனங் கசிந்துருக, இரண்டு கண்ணினின்றும் ஆனந்தவருவி சொரிய, சரீரத்திலே உரோமஞ்சங்கொள்ள இரண்டு கைகளும் சிரசின் மேல் ஏறிக்குவிய, அடியேனை இப்பிரபஞ்சவாழ்க்கையினின்றும் நீக்கித் தேவரீருடைய திருவடியிலே சேர்த்தருளல் வேண்டுமென்னுங் குறிப்போடு "தலைக்குத் தலைமாலை" என்னுந் திருப்பதிகம் பாடினார். அப்பொழுது திருக்கைலாசகிரியிலே விச்சுவாதிகரும் விச்சுவசேவியருமாகிய சிவபெருமான் விட்டுணு பிரமன் முதலிய தேவர்களை நோக்கி, "நீங்கள் போய் நம்முடைய தோழனாகிய சுந்தரனை வெள்ளையானையின் மேலேற்றிக்கொண்டு வாருங்கள்" என்று ஆஞ்ஞாபித்தருளினார்
சேரமான்பெருமாணாயனார் சுந்தரமூர்த்திநாயனாருடைய செயலை அறிந்து, அந்தக்ஷணமே அருகில் நின்ற ஓர் குதிரையின் மேலேறிக்கொண்டு திருவஞ்சைக்களத்துக்குப்போய், வெள்ளையானையின் மேலேறிக்கொண்டு ஆகாயத்திற்செல்லும் சுந்தரமூர்த்தி நாயனாரைக்கண்டு, தாமேறிய குதிரையின் செவியிலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதியருளினார். உடனே அந்தக் குதிரையானது ஆகாயத்திலே பாய்ந்து, சுந்தரமூர்த்திநாயனாருடைய வெள்ளையானையை அடைந்து, அதனை வலஞ்செய்து, அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான்பெருமாணாயனாருடைய படைவீரர்க் குதிரையிற்செல்லும் அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படு மெல்லைவரைக்கும் ஆகாயத்திலே கண்டு பின் காணாமையால் மிகுந்த திடபத்தியினாலே உருவிய உடைவாட்களினால் தங்கள் தங்கள் தேகத்தைச் சேதித்து, வீரயாக்கையைப் பெற்றுப் போய், சேரமான்பெருமாணாயனாருக்கு முற்பட்டு, அவரைச் சேவித்துக்கொண்டு சென்றார்கள். சேரமான்பெருமாணாயனார் முன் செல்லப் பின் சென்ற சுந்தரமூர்த்திநாயனார் "தானெனை முன்படைத்தான்" என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு, திருக்கைலாசமலையின் தெற்கு வாயிலுக்கு முன் போனார். போனவுடனே இருவரும் யானையினின்றும் குதிரையினின்றும் இறங்கி, பல வாயில்களையும் கடந்து, திருவணுக்கன்றிருவாயிலை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாணாயனார் தடைப்பட்டு நிற்க; சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே போய், சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்து, எழுந்து ஸ்தோத்திரஞ் செய்துகொண்டு நின்றார். சுவாமி அவரை நோக்கி, "சுந்தரா வந்தாயோ" என்று திருவாய்மலர்ந்தருளினார். அதைக் கேட்ட சுந்தரமூர்த்தி நாயனார்; "சுவாமி! அடியேன் செய்த பிழையைப் பொறுத்து அடியேனைப் பந்தத்தினின்றும் நீக்கி அடியேனுக்குத் திருவடி தந்தருளிய பெருங்கருணை அடியேன் தரத்ததோ" என்று சொல்லி, பலமுறை நமஸ்காரஞ்செய்து சிவானந்த வெள்ளத்தில் அமிழ்ந்தி நின்றார். பின்பு, "சுவாமி! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரமான்பெருமாள் திருவணுக்கன் திருவாயிலின் புறத்திலே வந்து நிற்கின்றார்" என்று விண்ணப்பஞ்செய்ய; சிவபிரான் அவரை உள்ளே அழைப்பித்து, "நீயும் ஆலால சுந்தரனும் நம்முடைய கணங்களெல்லாவற்றிற்குந் தலைவராயிருங்கள்" என்று அருளிச்செய்தார். அதைக்கேட்டு திருக்கைலாசபதியை நமஸ்கரித்து எழுந்து, அவருடைய திருவருளைத் தலைமேற்கொண்டு, சுந்தரமூர்த்தி நாயனார் ஆலாலசுந்தரராகி முன்னே தாஞ்செய்த திருத்தொண்டைச் செய்பவரும் சேரமான்பெருமாணாயனார் கணநாதராகி அவர் செய்யுந்தொழிலைச் செய்பவருமாயினார்கள்.
முன்னே பூமியில் அவதரித்த பரவையாரும் சங்கிலியாரும் முறையே கமலினியாரும் அநிந்திதையாருமாகி, பார்வதிதேவியாருக்குத் தாங்கள் முன்செய்த திருத்தொண்டைச் செய்து வந்தார்கள். சுந்தரமூர்த்திநாயனார் தாம் வழியிலே அருளிச் செய்த திருப்பதிகத்தைத் தக்ஷிண பூமியிலே ஏற்றும்பொருட்டுச் சமுத்திரராஜனாகிய வருணனிடத்திலே கொடுத்தருள; அவன் அதைத் திருவஞ்சைக் களத்திலே உய்த்துத் தெரிவித்தான்.
திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை,பூமாலை, சுந்தரபாண்டியம்
************************************************************************
சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி திருச்சபையின் 96 வது ஆ்ண்டு விழாவும் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூசையும், அவரது நண்பர் சேரமான் பெருமான் நாயனாருக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிகளையே நினைந்து முக்தி பெற்ற பெருமழலை குரும்ப நாயனாருக்கும் குருபூசை மற்றும் சிறப்பு சொற்பொழிவு மற்றும் அன்று இரவு இம் மூவரின் திருவீதி விழாவும், மதியம்
12 மணியளவில் அன்னதானமும் நடைபெறும், சிவ சிந்தனை அடியார்கள் அனைவரும் இ்ந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மூவரின் அருள் பெற்றும் தேவார இன்னிசை வேந்தர் புதுப்பட்டி சிவ மோகன் குழுவினரின் தேவார இன்னிசையும் கேட்டு அருள் பெற அன்புடன் ஸ்ரீசுந்தரமூர்த்தி திருச்சபையின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
**************************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக