நமது பாரம்பரியத்தில் சாஸ்திரங்களுக்கு தவிர்க்க இயலாத உன்னதமான இடம் உள்ளது.
இந்த சாஸ்திரங்களைப் படைத்தவர்கள் முனிவர்கள் ஆவர். அவர்கள்கூட தாமே இதனை இயற்றியதாகவோ, எழுதியதாகவோ சொல்லவில்லை. மாறாக, அவர்கள் தம் தவத்தினால் கண்டறிந்ததை, உணர்ந்த சத்தியத்தையே சாஸ்திரங்களாகபடைத்தளித்தனர்.
இதனால் தான் அவர்களை ‘மந்த்ரத்ரஷ்டா’ என்று முன்னோர்கள் அழைத்தனர். உருவற்ற அருவமாக இறைவனை உணர்வதற்கு ஞானிகளால் மட்டுமே இயலும். ஆனால், எளியவர்களான நமக்கு உருவவழிபாடே தவிர்க்க இயலாததாக இருக்கிறது.
இந்த உருவவழிபாட்டைச் செய்வதற்குக்கூட, ஒரு விதிமுறை உள்ளது. அவரவர் தத்தமது விருப்பிற்கேற்ப முறையற்ற வழிபாட்டைச் செய்வது இயலாது.
உலகில் வாழ்பவர்களுக்கு உருவ வழிபாடு அல்லது விக்கிரஹ ஆராதனை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்து வருகின்றது. தாம் உருவவழிபாடுசெய்வதில்லை என்று சொல்லிக் கொள்ளும் சமயிகள்கூட, புறா வடிவிலும், புனிதநூல் வடிவிலும், பிறை வடிவிலும்,
ஒரு குறித்த கட்டிடத்தின் வடிவிலும் இறைவனை எண்ணுவது தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.
ஆக, உருவ வழிபாடு மிக அத்தியாவசியமான, நமது புலன்களை ஒரு முகப்படுத்தி, இறைவனிடம் கொண்டுசெல்லும் அம்சமாகவே இருக்கின்றது. இதனை ஸ்ரீவைணவர்கள் ‘அர்ச்சாவதாரம்’ என்று கொண்டாடுவர். இந்தஅர்ச்சாவதாரத்திற்காகவே ஆலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை பண்பாடு,கலைகள், வேதாகமம், வேதாந்தம், இலக்கியம், மொழி என்பவற்றை எல்லாம்வளர்க்கும் உன்னத நிலையங்களாகவும் விளங்கி வருகின்றன.
வெறும் கல்லுக்கு ஏன் இவ்வளவு உபசாரம் என்று பலரும் விதண்டாவாதம் பேசக் கேட்டிருக்கலாம். அறுபது இலட்சம் மூபாய் காசோலை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அது ஒரு துண்டுக்காகிதம். அதில் என்ன பெறுமதிஇருக்கிறது? ஒரு சிறு காகிதம்தானே என்று கசக்கி எறியலாமா? அந்த காகிதம்எப்படி பலலட்சங்களை வெளிப்படுத்துகின்றதோ, அதுபோலவே, கல்லில்சமைக்கப்பட்ட அந்தத் திருவுருவம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகக் காட்சிதருகின்றது.
ஆகமச்சிறப்பு:
எப்படி, கட்டடக்கலைக்கு பொறியியற்துறை (B.E), மருத்துவத்திற்கு (M.B.B.S),கலைகளுக்கு(B.A,finearts) என்று ஒவ்வொரு சாஸ்திரம் இருக்கின்றதோ அதுபோலவே,
திருக்கோவில் வழிபாட்டுக்கு என்று ஒரு சாஸ்திரம் உள்ளது. அதுவே‘ஆகமம்’ ஆகும்.
ஆகமம் என்பது ஒரு பெரிய பாதை என்றால், அதில் பல கிளைப்பாதைகள் உள்ளன.சைவாகமங்கள், பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற இரு வைணவ ஆகமபிரிவுகள், சாக்ததந்திரங்கள் என்று இக்கிளைகள் பல. பௌத்தர்களுக்கும், ஜைனர்கள் என்ற சமணர்களுக்கும் தனித்தனி ஆகம நூல்கள் உள.
ஆயினும், ஆகமங்களால் வழிபடப்பெறும் இறைவனே ஆகமம்கூறும் மூலதத்துவம் ஆகும். இந்த ஆகமங்களுக்குள் ஒன்றோடொன்று குழம்பிக்கொள்ளாமல், ஒன்றில் சொல்லப்பட்டது மற்றொன்றிலும் சொல்லப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி, அவரவர் அவ்வவற்றை ஏற்றலே முறையாகும்.
துவாபரயுக நிறைவில் தோன்றிய வாசுதேவ ஸ்ரீ கிருஷ்ணர் கலியுகத்தில் மக்கள் அறநெறி நின்று விலகாது வாழ்வதற்காக ஆகமங்களை இயற்றுமாறுமுனிவர்களுக்குக் கட்டளையிட்டார். சிவ, விஷ்ணு, தேவி வழிபாட்டுக்குரியதானஆகமங்கள் யாவும் உருவாக்கப்பட்டன. யாவற்றையும் ஸ்ரீ கிருஷ்ணனானகண்ணன் பார்வையிட்டு, பரிசீலித்து ஒப்புதல் அளித்த பிறகே அவை பிரச்சாரம்செய்யப்பட்டன என்று ஒரு கதை இருக்கின்றது.
இந்த கதையுடன் ஒட்டியதாக, ஆகமங்கள் குறித்து அனேகமாக, யாவரும்ஏற்றுக்கொள்ளும் ஒரு சுலோகம் உள்ளது. அது,
“ஆகதம் சிவவக்த்ரேப்யோ
கதம்ச கிரிஜானனே
மதம்ச வாசுதேவஸ்ய
தஸ்மாதாகம முச்சயதே”
இந்த சம்ஸ்கிருதக் கவிதையின் நான்கு வரிகளில் முன்னெழுத்துக்கள் ஆகம என்ற சொல்லைக் காட்டுவதைக் காணலாம்.
இதன் பொருளாவது,
“பரமசிவனுடைய திருமுகத்திலிருந்து வந்தது. மலைமகளான பார்வதியின்காதுகளில் சென்றது. வாசுதேவனான திருமாலால் ஒப்புக்கொள்ளப்பட்டது”என்பதாகும்.
ஆகம பேதங்கள்:
சிவாகமங்கள் பரமசிவனால் ஐந்து மாமுனிவர்களுக்கு அருளப்பெற்றவை ஆகும். இந்தச் சிவாகமங்களை விளக்குவதற்காக 18 சிவாச்சார்யர்கள் பிற்காலத்தில் 18விதமான நூல்களை எழுதியுள்ளனர். அவைகள் மூலமான சிவாகமங்கள் கூறும் விளக்கத்தை மேலும் விளக்கவே அவைகள் உருவானவை.
உக்ரஜோதி, சத்யோஜாத, ஸ்ரீராமகண்ட, வித்யாகண்ட, நாராயணகண்ட,வீபூதிகண்ட, ஸ்ரீகண்ட, நீலகண்ட, ஸோமசம்பு, ஈசானசம்பு, ஹ்ருதயசிவ,ப்ரம்மசம்பு, வைராக்ய சிவ, ஞானசம்பு, த்ரிலோசனசிவ, வருண, ஈஸ்வரசிவ,அகோரசிவ என்பதே அப்பதிணெண் சிவாச்சார்யர்களின் திருநாமங்களாகும்.
இதில், அகோர சிவாச்சார்யரின் பத்ததியே ஆகமமரபில் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.
இப்பதிணெண் சிவாச்சார்யர்கள் தவிர, சர்வாத்மசிவ, சர்வேசபண்டித சிவ,வியாபகசிவ, வ்யோமசிவ, உத்துங்க சிவ, பரமானந்த யோகீஸ்வர சிவ, அப்பையதீட்சிதர் என்கிறவர்களும் சிவாகம விளக்க நூல்களைப் படைத்திருப்பதாக அறியமுடிகின்றது.
இந்த விளக்க நூல்களில் பலவும் இன்று காணக்கிடைக்காது அழிந்து விட்டன. ஆகமங்களிலும் அதிகளவானவை முழுமையாகவோ, பாகமாகவோ அழிந்து விட்டன.
சிவாகமங்களில் காமிகம், காரணம், மகுடம் என்கிற ஆகமங்கள் முழுமையாகக் கிடைக்கின்றன. இந்த ஆகமங்களின் வழியிலேயே கோவில் வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
திருமூலர் பெருமான் ஆகமங்கள்பற்றி திருமந்திரத்தில் பல இடங்களில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக