கலிய நாயனார்
குருபூசை நாள் 13/08/2016 சனிக்கிழமை
தொண்டைமண்டலத்திலே, திருவொற்றியூரிலேயுள்ள சக்கரப்பாடியிலே, செக்கார் குலத்திலே, கலியநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பெருஞ்செல்வராகி செல்வநிலையாமையையும் யாக்கை நிலைமையையும் உணர்ந்து, சிவபுண்ணியஞ் செய்தல்வேண்டும் எனத் தெளிந்து, அந்தத் திருப்பதியில் உள்ள சிவாலயத்தின் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் எண்ணிறந்த திருவிளக்கு ஏற்றுவாராயினார்.
பரமசிவன் நெடுங்காலம் இத்திருத்தொண்டைச் செய்துவரும் அவ்வடியாருடைய பத்திவலிமையைப் பிறர்க்குப் புலப்படுத்தும் பொருட்டு, அவரிடத்து உள்ள செல்வமெல்லாங் குன்றும்படி அருள்செய்தார். அவர் தாம் வறுமையெய்தியும் தமது மரபில் உள்ளோர் தரும் எண்ணெயை வாங்கிக் கூறிவிற்றுக் கொணர்ந்து, கூலி பெற்று, தாஞ்செய்யுந் திருத்தொண்டை வழுவாது செய்தார். சில நாளாயினபின் அவர்கள் கொடாதொழிய; அவர் மனந்தளர்ந்து, எண்ணெயாட்டும் இடத்திற்சென்று, தொழில் செய்து கூலி வாங்கி, திருவிளக்கிட்டார். பின்பு அத்தொழில் செய்வோர்கள் பலராய்ப் பெருகினமையால், அத்தொழிலால் வரும் பேறுங் கிடையாதுமுட்ட; ஒருநாள் கவலைகொண்டு, தம்முடைய மனைவியாரை விற்பதற்கு நகரெங்குங்கூறி, வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, "திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்" என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார். அப்பொழுது கிருபாசமுத்திரமாகிய பரமசிவன் நேர்வந்து அவருடைய கையைப் பிடித்து, அவருக்குமுன் இடபாரூடராய்த் தோன்றியருள; அவர் தாம் உற்ற ஊறுநீங்கி, சிரசின்மேல் அஞ்சலி செய்துகொண்டு நின்றார். சிவபெருமான் அவரைத் தமது திருவடியிலே சேர்த்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.
**********************************************************
கோட்புலி நாயனார் புராணம்
குருபூசை நாள் 13/08/2016 சனிக்கிழமை
சோழநாட்டிலே, நாட்டியத்தான்குடியிலே, வேளாளர் குலத்திலே சிவபத்தியிற் சிறந்த கோட்புலிநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டு, அதனாலே தமக்குக் கிடைக்கும் வேதனத்தைக்கொண்டு சிவாலயங்களுக்குத் திருவமுதின் பொருட்டு நெல்லுவாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலஞ் செய்து வந்தார்.
இப்படியொழுகுநாளிலே, அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தாந்திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார். சிலநாளிலே பஞ்சம் வந்தமையால் அந்தச்சுற்றத்தார்கள் "நாங்கள் உணவின்றி இறப்பதினுஞ் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டப்பட்ட இந்நெல்லைக் கொண்டாயினும் பிழைத்து, பின் கொடுத்துவிடுவோம்" என்று நெல்லைக் கூடுகுலைத்து எடுத்துச் செலவழித்தார்கள், கோட்புலிநாயனார் அரசனுடைய பகைஞரைப் போர்முனையிலே வென்று அவனிடத்திலே நிதிக்குவை பெற்றுக்கொண்டு, தம்முடைய ஊரை அடைந்து, தம்முடைய சுற்றத்தார்கள் அதிபாதகஞ்செய்தமையை உணர்ந்து, ஒன்று செய்யத் துணிந்து, தம்முடைய வீட்டிலே பகுந்து, அவர்களெல்லாரையும் அழைப்பித்து, தமது கோட்புலியென்னும் பெயரையுடைய காவலாளன் கடை காக்க, சிவதிரவியத்தை எடுத்துச் செலவழித்த அதிபாதகர்களாகிய தந்தை, தாய், உடன்பிறந்தார், மனைவி முதலிய சுற்றத்தா ரெல்லாரையும் பணிவிடைக்காரரையும் வாளினாலே துணிந்தார். அப்பொழுது காவலாளன் அங்கே பிழைத்த ஒரு ஆண்பிள்ளையைப் பார்த்து, "இக்குழந்தை அவ்வன்னத்தை உண்டதன்று. இது இக்குடிக்கு ஒரு பிள்ளை; இதனைக் கொல்லா தருள் செய்யும்" என்று வேண்ட; கோட்புலிநாயனார் "இது இந்நெல் உண்டவளுடைய முலைப் பாலை உண்டது" என்று அதை எடுத்து எறிந்து, வாளினாலே துணிந்தார். உடனே சிவபெருமான் கோட்புலிநாயனாருக்குத் தோன்றி, " அன்பனே! உன் கைவாளினாலே தங்கள் பாவத்தினின்றும் நீங்கிய உன் சுற்றத்தார்கள் சுவர்க்கத்தை அடைய நீ இந்தப்படியே நம்முடன் வருவாய்" என்று கருணை செய்து எழுந்தருளினார்.
திருச்சிற்றம்பலம்.
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக