வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சிவமஹிமை

சிவமஹிமை


சிவம் என்ற சொல்லுக்கு ஸர்வமங்களரூபியாய் இருக்கும் பரம் பொருள் என்பது பொருள். “சிவஸ்தாணு மஹேச்வர.” என்பது உபநிஷத்வாக்கியம். “சிவம் மங்களம் பரம்” என்பதும் எப்போதும் ஸர்வமங்களரூபியாய் ஸர்வஜகத்திலும் வியாபித்து அருள்பாலிக்கும் பரம்பொருள் என்பது ஆன்றோர் வாக்கு. “சிவ ஏகோத்யேய: சிவம் கர: ஸர்வமன்யத் பரித்யாஜ” என்பது அதர்வசிகோபநிஷத்வாக்கு. அதாவது மற்ற தேவதைகளை வழிபடுவதைவிட்டு பரனேச்வரன் ஒருவரே எல்லோராலும் பூஜிக்கத் தக்கவர் என்று வேதம் முடிவு செய்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது அத்வைத ஸித்தாந்தமும் ஏகநாயகன் ஒருவனே என்றும், “ஒன்றுகண்டீர் உலகுகொரு தெய்வம்” என்று திருமூலரும், “ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஸ்தே” “ஈசான: ஸர்வவித்யானாம் ஈச்வர: ஸர்வ பூதானாம்” என்ற வேதவாக்கியங்களும் சிவ மஹிமையைக் கூறுகின்றன. சகல உலகங்களுக்கும், ஸர்வோத்க்ருஷ்டமானவரும், எல்லோராலும் பூஜிக்கத்தக்கவருமான ஈச்வரன் ஒருவனே என்றும், அவருக்குச் சமமாவோ அவரைத்தவிர இரண்டாவதான தெய்வசக்தியோ கிடையாது என்றும் ஸகல வேத இதிஹாஸ புராணங்களும் கூறுகின்றன.

      அத்வைத சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து பார்ப்போமானாலும் இதே பொருளைத்தான் கூறுகிறது. எங்கும் வ்யாபித்துக் கொண்டு நிற்கும் உருவம், அருவம், அருவுருவம் என்ற மூன்று சக்திக்கும் அப்பாற்பட்ட துரீய நிலையாய் நிற்கும் பரப்ரம்மம் ஒன்று தான் வேதங்களாலும், உபநிஷத்துகளாலும், மற்ற இதிஹாஸங்களாலும் அறியப்பட்டு பல பெரியோர்களாலும் கூறப்படும் மஹாவாக்கியங்கள் பின்வருமாறு. “தமீச்வராணாம் பரமம் மஹேச்வரம்” என்றும், “அசிந்த்யமவ்யக்தமனந்த ரூபம், சிவம் ப்ரசாந்தம் அம்ருதம் ப்ரம்ம யோனிம்! தமாதிமத்யாந்த விஹீனமேகம் விபும் சிதானந்தமரூபம் அத்புதம்|| என்று கைவல்யோபநிஷத்தும், “சேர்ந்தறியாக் கையானை” என்று ஶ்ரீமணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது. பரமேச்வரன் யாரையும் கை கூப்பி வணங்கவில்லை என்றும், ஆனால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலான மற்ற எல்லாத் தேவர்களும் சிவலிங்க வடிவில் ஸாக்ஷத் பரமேச்வரனை அவரவருக்கு ஏற்ற பதவிகளையடைய ஸதாஸர்வ காலமும் பூஜித்துக் கொண்டிருப்பதாக வேதம் இதிஹாஸ புராணங்களும் கூறுவதைப் பார்க்கலாம்.

      ருக்வேதம்:-  தவச்சியே மருதோ  மர்ஜயத்த ருத்ரயத்தே ஜனிமசாகு சித்ரம் || என்றும்,

      ப்ரும்மண: ஸ்ருஷ்டி கர்த்ருத்வம் விஷ்ணோர்தானவ மர்த்தனம், ஸ்வர்க்காதிபத்யம் இந்த்ரஸ்ய சிவபூஜாவிதே: பலம் என்று மஹாபாரதமும் கூறுகிறது. இதிலிருந்து சிவபெருமானுடைய மஹிமையை நாம் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம்.

      தவிர, சிவபிரானுடைய மங்களமூர்த்தியின் மஹிமையையும், அவனுடைய திவ்ய நாமாவையும் புகழாதவர்கள் இந்த உலகத்தில் கிடையாது எல்லா மஹாமந்திரங்களைக் காட்டிலும் அதிக உத்க்ருஷ்டமாயும், ஸகல உலகங்களிலும் மஹாராஜ மந்த்ரமாயும் பாளித்து வருகிற, ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்களும், அதே போல சிவபெருமான் அணியும் விபூதி, ருத்ராக்ஷம் என்ற இரண்டு சிவசின்னங்களும், அந்த பரமேச்வரனைப் போலவே எல்லாத் தேவர்களாலும் போற்றப்பட்டும், அவரவர்கள் தாம் சிவபூஜை செய்யும்போது விபூதி, ருத்ராக்ஷத்தைப் பரம பக்தியோடு அணிந்து கொண்டு ஸதா மாலைப் பூஜிக்கிறார்கள் என்ற ரகஸியத்தை பிரம்மாவானவர் நாரதருக்கு கோடிருத்ர ஸம்ஹிதையில் உபதேசிக்கின்றார்.

      தவிர, ஶ்ரீ உமாபதிசிவாசாரியார் இயற்றிய ஶ்ரீகுஞ்சிதாங்க்ரிஸ்தவம் 91-வது ச்லோகத்தில் இந்த தத்துவத்தை நன்கு விளக்கியுள்ளார்கள். (ச்லோகம்) “யல்லிங்கே பிரமம் விஷ்ணுப்ரமுக ஸுரவரா பஸ்மருத்ராக்ஷ்ஹபாஜ: ஸஸ்த்ரீகாஸ் ஸாம்பமூர்த்திம் ஸகலததுப்ருதாம் ஸர்வதம் ஸர்வரூபம் | ------ குஞ்சிதாங்க்ரிம் பஜே (அ) ஹம் ||” அதாவது எந்த சிவலிங்க்ரூபத்தில் பிரமம் விஷ்ணு முதலிய தேவர்கள் பஸ்ம ருத்ராக்ஷதாரிகளாகவும், தங்கள் தேவிமார்களுடன் கூடிபூஜை செய்கிறார்களோ, அந்த ஸகல பிராணிகளுக்கு ஸர்வத்தையும் அளிப்பவரும், எல்லா உருவமும் உள்ளவருமான பரமேசுவரனுடைய குஞ்சிதபதத்தை நமஸ்கரிக்கிறேன் என்று ஸ்தோத்திரம் செய்கிறார்.

      “வித்யாஸு” ச்ருதிருத்க்ருஷ்டா ருத்ரைகாதசினி ச்ருதெள | தத்ர பஞ்சாக்ஷரி தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம் ||” என்று கூறப்படுகிறது. ஸகல வித்யைகளுக்குள் வேதம் சிறந்தது. அதற்குள் ஶ்ரீருத்ரம் சிறந்தது. அதற்குள் நம: சிவாய என்ற பஞ்சாக்ஷர மஹா மந்த்ரம் சிறந்தது. அந்த பஞ்சாக்ஷரத்திற்குள் ‘சிவ’ என்ற இரு அக்ஷரங்கள் மிகச் சிறந்தவை என்பது பெரியோர்களின் வாக்கு. “சிவநாம விநாச்யாதாம் பாதகாநாமபாவத” என்று சிவநாமாவை ஜபித்தால் அதனால் போக்கக் கூடிய பாபங்களை உலகில் யாராலும் செய்ய முடியாது என்பதாகும். தவிர, “சிவ” என்று வரும் மஹாபஞ்சாக்ஷர ஜபத்தை எவன் நியமத்தோடு நித்தம் தவறாமல் ஜபித்துக் கொண்டு வருகிறானோ அவன் நோயாளியையோ அல்லது தரித்ர தசையிலுள்ளவனையோ கண்ணால் பார்த்தாலே அந்த குறை அவர்களுக்கு உடனே நீங்கி சகல செளகர்யங்களையும் அடைகிறான் என்று மந்த்ரோபநிஷத் கூறுகிறது. “பஞ்சாக்ஷர மஹாமந்த்ரம் மஹாபாதக நாசநம் … நதஸ்ய பாபகந்தோபி தர்சனாத்பாப ஹாரிண:” என்பது மந்த்ரம்.

      அந்த சிவநாமாவுக்கே இப்படிப்பட்ட அபரிமிதமான சக்தியும் மஹிமையும் இருக்கும் போது இதற்கு மூலமாயுள்ள சிவபிரானுக்கு உள்ள மஹிமையை யார் தான் அறியமுடியும். தேவர்களாலும் அறிய முடியாது என்பது திண்ணம். இதைச் சேந்தனார் 9-ம் திருமுறையில் திருப்பல்லாண்டு கூறும்போது “ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்திற்கு அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே” என்று போற்றியிருக்கிறார். இப்படிப்பட்ட மஹாமஹிமை தங்கிய பரமேசுவரனுக்கு எந்தத் தெய்வத்துக்கும் இல்லாத சிறப்பு என்னவென்றால் இவருக்கு “ஆசுதோஷி” என்ற பெயர் உண்மையாம். யார் யார் எந்தெந்த முறையில் தம்தம் சக்திக்கேற்றவாறு உபாசிக்கின்றனரோ அவர்களுக்கு யாரும் பெறமுடியாத அபரிமிதமான அனுக்கிரஹத்தைச் செய்வதால் இப்பெயர் பெற்றார் என்பது மஹான்களின் வாக்கு. இதற்கு நம் சிவனடியார்களின் வாக்கே தக்க சான்றாகும்.

      ரிக், யஜுஸ், ஸாமம் என்னும் மூன்று வேதங்களிலும் பரமேசுவரன் ஸர்வோத்க்குஷ்டமாகப் போற்றப்படுகிறார். எனினும் மூன்று வேதங்களிலும் நடுவிலுள்ள யஜுர்வேதத்தில் வரும் “சதருத்ரீயம்” அல்லது “ஶ்ரீருத்ரம்” என்று எந்த மந்திரத்தால் சிவபிரானை எல்லாத் தேவர்களும் ஸ்தோத்ரம் செய்கிறார்களோ அந்த ஶ்ரீருத்ரத்தின் அர்த்தத்தை கொஞ்சம் நாம் ஆராய்ந்து பாதர்க்கும் போது சிவபெருமானைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் இவ்வளவு சிறப்பும் அபரிமிதமான மஹிமையும் இல்லையென்றும், சிவபெருமானே எல்லாத் தெய்வத்த்க்கும் மேம்பட்ட தெய்வம் என்றும், அவரே பரம்பொருள் என்றும் அறியலாம்.

      ஸகலோகங்களிலும் உள்ள ஈ எறும்பு முதல் ஹரிப்ரம்மேந்தராதி தேவர்கள் உள்பட ஸகல ஆன்மகோடிகளிடத்து உள்ள அபரிதமான கருணையால் சிவபெருமான் ‘க்ருபா சமுத்திரன்’ என்று வடமொழியிலும், ‘கரையில் கருணைக்கடல்’ என்று தமிழிலும், பல அடியார்களாலும் ஸ்தோத்ரம் செய்யப்பட்டுள்ளார். உதாரணமாக சிவபிரானது உடை, ஆபரணம், இருப்பிடம், வாஹனம், ஆஹாரம், பக்தர்களுக்குச் செய்த அனுக்ரஹம் இவைகளையெல்லாம் நோக்கும் பொழுது, இப்பெருமானது அபரிமிதமான கருணையையும், எல்லையற்ற மஹிமையையும் உணர முடிகிறது.

      சுருக்கமாகச் சொன்னால் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் பதவியைப் பெறுவதற்காகச் சிவபிரானைப் பூஜித்தலும், பூலோகத்தில் ஒரு நாள் தேவலோகத்திலிருந்து கங்கையை பூவுலகிற்குக் கொண்டு வந்ததும், அருச்சுனனுக்காக வேடனாக வந்து பாசுபதாஸ்த்ரம் கொடுத்ததும் குருதல்பசுமனம் செய்த மஹா பாபியாகிய சந்திரனை தலையில் தூக்கிவைத்துக் கொண்டதும், திருவிளையாடற்புராணத்தில் வரும் கேவலம் ஒரு பக்ஷியாகிய நாரைக்கு முக்தி கொடுத்து அதற்கு அடையாளமாக அதன் சிறகைத் தன் தலையிலே தாங்கிக் கொண்டதும், மார்க்கண்டேயர்க்காக இயமனையே காலால் உதைத்துக் கொன்று மறுபடியும் பூமிதேவிக்காகவும், மற்ற தேவர்களுக்காகவும், அவனைப் பிழைக்க வைத்ததையும், மஹாவிஷ்ணுவின் அவதாரமாகிய மத்ஸயம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமநம் இத்யாதி ரூபங்களினால் அந்தந்த அசுரர்களை ஸம்ஹரித்துவிட்டு விஷ்ணு தன் அஹங்காரத்தினால் மற்ற தேவர்களுக்கும் ஸகல உலகங்களுக்கும் செய்த துஷ்க்ருத்தியத்தை அடக்கும்பொருட்டு, மத்ஸ்யாவதாரத்திலிருந்து கண்களையும், கூர்மாவதாரத்திலிருந்து ஆமை ஒட்டையும், வராஹ அவதாரத்திலிருந்து தத்திப் பல்லஒயும், நரஸிம்மாவதாரத்திலிருந்து இரத்தம் தோய்ந்த தோலையும், வாமநராக வந்த திருவிக்கிரமாவதாரத்திலிருந்து முதுகெலும்பையும் அபகரித்துத் தன் திருமேனியில் ஆபரணாமாக அணிந்து கொண்டு சகல உலகங்களையும் ரக்ஷித்து அருள்பாலித்த அபரிமிதமானஅவரது (சிவபெருமானது) கருணையை நோக்கும் பொழுது ஆதியந்தம் இல்லாத மஹாகைலாஸத்திற்கு அதிபதியான ஸாக்ஷாத் பரமேச்வரனுடைய முப்பத்து முக்கோடி தேவர்களாலும் அறியமுடியாத சிவபரத்துவமும், அளவு கடந்த மஹிமையும் நன்கு தெரியவருகிறது.

      மஹாமஹிமை தங்கிய சிவபரம் பொருள் எல்லா ஜீவ கோடிகளும் உய்யும் பொருட்டு, தான் சிவலிங்கவடிவில் பாஸித்து வருகிறார் என்பது சிவபுராணத்தில் உள்ள கோடிருத்ர ஸம்ஹிதையில் விஸ்தாரமாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது:-

      “ஸர்வ லிங்கமயீம் பூமிம், ஸர்வம் லிங்கமயம் ஜகத், லிங்கமயான் தீர்த்தானி ஸர்வம் லிங்கே ப்ரதிஷ்டிதம், பாதாளேசாபி வர்த்தந்தே ஸ்வர்கேசாபி ததா புவி ஸர்வத்ர பூஜ்யதே சம்பு: ஸந்தேவாசுரமானுஷை: அனுக்ரஹாய லோகானாம் லிங்காதிச மஹேச்வர:”

      ஸகல பூமி, ஸகலதீர்த்தம், ஸர்வமும் லிங்கஸ்வரூமாகவே பாஸித்து வருகின்றன. காணப்படும் எல்லா வஸ்துக்களும் லிங்கஸ்வரூபமாகவே காணப்படுகின்றன. ஆதலால் பரமேச்வரன் ஸகல உலகங்களிலும் ஸகல ஆன்மாக்களுக்கும் அனுக்ரஹம் செய்வதற்காகவே எல்லா மூர்த்தங்கட்கும் அப்பாற்பட்ட சிவலிங்கரூபமாகப் பிரகாசித்து வகுகிறார் எனறு பொருள்படுகின்றது. தவிர ஸகல உலகங்களுக்கு மஹா மஹிமையுள்ள ஈச்வரன் தான் முழு முதற்கடவுள் என்பதும் தெளிவாக விளங்குகிறது.

      தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் அடைய வேண்டிப் பாற்கடலைக் கடையுபோது வாசுகி என்ற பாம்பினால் உமிழப்பட்ட விஷமும் கடலினின்றும் தோன்றிய விஷமும் கலந்து ஆலாலவிஷம் என்ற கொடிய விஷமாகி எல்லா உலகங்களிலும் பரவி அழித்துக் கொண்டு வரும்போது,

                “நாலம் வா பரமோபகாரகமிதம் த்வேகம் பசூனாம் பதே

            பச்யன் குஷிகதாம்ஸ்சராசர கணான் பாஹ்யஸ்திதான் ரக்ஷிதம் |

      ஸர்வாமர்த்ய பலாயறெளஷதமதி ஜ்வாலாகரம் பீகரம்

            நிக்ஷிப்தம் கரலம் கலே ந கலிதம் நோத்கீர்ணமேவ த்வயா ||”



என்பது அந்த சுலோகம்.

ஸகல உலகங்களையும் ரக்ஷிக்கும் பொருட்டு அந்த கொடிய விஷத்தை ஒரு நாவற்பழம் போல் தன்வாயில் போட்டு தன் கழுத்தில் நீலமணி போல் காட்சியளிக்குமாறு நிறுத்திவைத்து கொண்ட மஹாதேவனுடைய அபரிமிதமான் மஹிமையை யாரால் தான் முழுமையாக வகுணிக்க இயலும்? இதிலிருந்து பரமேச்வரனுடைய மேலான் கருணையையும் அன்பையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஆதலால் பரமசிவனுடைய அளவுகடந்த மஹிமையையும் அவருக்கு ஜீவகோடிகளிடமிருக்கும் அபாரமான கருணையையும் அறிவதற்கு இந்த விஷமுண்டு ரக்ஷித்த அனுக்கிரஹம் ஒன்றே போதாதா என்று ஆதிசங்கர பகவத்பாதர்கள் தாம் அருளிய சிவானந்தலஹரீ 31-வது சுலோகத்தில் குறிப்பிடுகிறார்கள்.

      இன்னும் விரிவாக எழுதாமல் இத்துடன் நிறுத்திக் கொண்டு நம்மவர்களாகிய சைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரமேச்வரனைப் பக்தி சிரத்தையுடன் பூஜித்து ஸர்வேச்வரனது அனுக்கிரஹத்துக்குப் பாத்திரர்களாக விளங்கி பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல ஈச்வரனைப் பிரார்த்தித்துக் கொண்டு இச்சிறு கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.

திருச்சிற்றம்பலம்
நன்றி சைவம் டாட் காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக