திங்கள், 1 ஆகஸ்ட், 2016

" குரு " குழப்பம் வேண்டாம்,

" குரு " குழப்பம் வேண்டாம்,


ஆதி குரு தட்சணாமூர்த்தி வேறு /  நவகிரக குரு வேறு  மனதில் கொள்க !

“ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும் முப்பொழுது
ஏத்திய நால்வர்க்கு ஒளிநெறி காட்டினை”

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம் ஆகும்.

இறைவன் குணம் குறி இல்லாதவன்; உயிர்கள் உய்ய வேண்டும் என்பதற்காகப் பல்வேறு வடிவங்களைக் கொள்கின்றான்.

‘உயிர் வர்க்கங்கள் பொருள் இயல்பு உணர்ந்து வீடுபெறும் பொருட்டுத் திருமேனி ஒரு தலையான் வேண்டப்படும்’ என்பர் சிவஞானமுனிவர். உயிர்களின் பக்குவங்களுக்கேற்பத் திருவுருவங்கள் பலவகைப்படும். சைவத்தில் திருவுருவங்கள் இருபத்தைந்து என்பது மரபு. அவற்றுள் ஆலமர்செல்வன் உருவமும் ஒன்று. தென்முகக்கடவுள், தட்சிணாமூர்த்தி என்று வழங்கப்படும்.

புராண வரலாறு
உமாதேவி இமயமலையில் மலையரசன் மகளாகத் தோன்றி தவம் செய்தாள். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்ஆகிய முனிவர் நால்வரும் கடுந்தவம் செய்து ஞானநிலை அடைய முடியாமையால், திருக்கயிலை சென்று சிவபெருமானைத் தரிசித்து ஞானநிலையடைய உபதேசித்து அருளுமாறு வேண்டினார். சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ்த் தென்முகக் கடவுளாக வீற்றிருந்து அந்நால்வருக்கும் சின்முத்திரை காட்டி உபதேசித்தருளினார்.

இலக்கியங்களில் ஆலமர் செல்வன்

சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் ஆல்கெழு கடவுள், ஆலமர் செல்வன் என்று வழங்குவதைக் காணலாம்.

“அறங்கொண்ட சிவதன்மம் உரைத்த பிரான்”

என்றும்

“அணிபெற வடமர நிழலின் அமர்வொடும் அடியிணையிருவர்கள் பணிதர அறநெறி மறையொடும் அருளியபரன்”

என்றும் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.

“மடற்பெரிய ஆலிங்கீழ் நால்வர்க்கு அறம் அன்றுரைத்தான்”

“பணைத்தெழுந்த ஆலின் கீழ் இருந்து ஆரணம் ஓதி”

என்றும் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

“நன்றாக நால்வர்க்கு நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழ்இருந்து அறம் உரைத்தான்”

என்பது மணிவாசகர் வாக்கு. இன்னும் திருமுறைகளில் பலவிடங்களில் பலவாறாகக் காணப்படுகின்றன.

நால்வர்க்கு உணர்த்தியவை வேதங்களா? நாற்பொருளா?

திருமுறைகளில் சிலவிடங்களில் நால்வருக்கு வேதங்களை உணர்த்தியதாகவும், சிலவிடங்களில் அறமுதலிய நாற்பொருளை உணர்த்தியதாகவும் வருவது உண்டு.

“விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்”

“அழிந்த சிந்தை அந்தணர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்தவாயான்”

என்பன தேவாரப் பாடல் தொடர்கள்.

நான்கு வேதங்களில் உட்பொருள் அறம், பொருள், வீடு, இன்பம், என்பன. எனவே இரண்டிற்கும் வேறுபாடு இல்லை. அதனால் மணிவாசகப் பெருமான்,

“நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்றாலின் கீழ் இருந்து அறம் உரைத்தான்”

என்றார்.

திருமுறைகளில் ஆலமர் செல்வன் வேதங்களை உரைத்தான் என்று வரும் இடங்களில் வேதங்களின் உட்பொருளாகிய அறம் முதலிய நாற்பொருளை உரைத்தான் எனக் கொள்ள வேண்டும். அறம் உரைத்தான் என்று வரும் இடங்களில் அறம் முதலிய நாற்பொருள் எனக் கொள்ள வேண்டும். அவற்றின் வாயிலாக உணர்த்தியது ஞானமே ஆகும்.

உணர்த்தியது நால்வர்க்கா? மூவருக்கா? இருவருக்கா? ஒருவருக்கா?
திருமுறைகளில் பெரும்பாலான இடங்களில் நால்வர்க்கு உணர்த்தியதாகவே சுட்டப்படும். நால்வர்-முற்கூறிய சனகர் முதலிய நால்வர் ஆவர்.

‘மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்’ என்பது திருமந்திரம். சிவயோக மாமுனி, மன்றுதொழுபதஞ்சலி, வியாக்கிரபாதர் -ஆகியோர் மூவர் என்பது திருமூலர் கொள்கை.

‘அடியிணை இருவர்கள் பணிதர’ என்று முற்கூறிய திருஞானசம்பந்தர் பாடலில் இருவர் சுட்டப்பட்டுள்ளார். இருவர் - நாரதர்,அகத்தியர் என்பதைப் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.

“ஆல்வருக்கும் தனிலுயர்ந்த வடநிழற்கே தென்முகங்கொண்டு அறவோர் ஆய
நால்வருக்கும் இருவருக்கும் ஒருவருக்கும் நவின்றருளி நவிலொணாத
நூல்வருக்கும் ஒருவருக்கும் நுவலாமல் நுவன்றான்”

என்பது திருக்குற்றாலரைப் போற்றும் புராணப் பாடற் பகுதியாகும்.

ஒருவருக்கு உணர்த்தியது:
“கல்லால் நிழல் மலைவு, இல்லார் அருளிய,
பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே”

என்று சிவஞானபோத மங்கலவாழ்த்தில் குறிக்கப் பெறும் நந்தியெம்பெருமானுக்கு உண்ர்த்தியது ஆகும்.

ஆலமர் செல்வனாக,தென்முகக் கடவுளாக இருந்து இறைவன் உணர்த்தியது ஞானநிலையாகும். வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு தன்மையர்க்கும் உணர்த்தியது ஆகும். சனகாதி நால்வர்க்கும்உணர்த்தியது ஒரு காலம்.

சிவயோகமுனிவர் முதலிய மூவருக்கும் தனித்தனியே வெவ்வேறு காலத்தில் உணர்த்தியது ஆகும். அவ்வாறே நாரதமுனிவர்க்கும்,அகத்தியர்க்கும் உணர்த்தியது வெவ்வேறு காலமாகும். சந்தானக் குரவரில் முதற் குருவான நந்தியெம்பெருமானுக்கு உணர்த்தியது வேறு காலம் ஆகும். உணர்த்தியது சிவஞானமாகும்.

திருவுருவ அமைப்பு
எல்லாச் சிவன் கோவில்களிலும் கருவறையின் தென்புறக் கோட்டத்தில் தென்முகக் கடவுள் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பார். வலக்காலைத் தொங்க விட்டு இடக்காலை வீராசனமாக மடித்து வைத்திருப்பார். நான்கு கைகள் இருக்கும். மேல் வலக்கையில் நாகம் இருக்கும். மேல் இடக்கையில் திரிசூலம் அல்லது உடக்கையிருக்கும். கீழ் வலக்கை சின் முத்திரையாகப் பெருவிரல் அடியில் சுட்டுவிரலை மடக்கிச் சேர்த்து ஏனைய மூன்று விரல்களை விரித்துக் காட்டி வலப்புற மார்புக்கு நேராக இருக்கும். கீழ் இடக்கையில் ஏடு அல்லது செபமாலை இருக்கும். தலையில் சந்திரன், கங்கை, ஊமத்தம்பூ முதலியன இருக்கும். மேல் கல்லால மரக்கிளைகள் இருக்கும். கீழே பக்கத்துக்கு இருவராக நான்கு முனிவர் அமர்ந்திருப்பர். சிவன் கோவில் விமானம், கோபுரம் ஆகியவற்றில் தென்புரத்தில் சுதை வேலைப்பாட்டில் பல்வேறு நிலையில் ஆலமர் செல்வன் உருவங்கள் அமைந்து காணப்படும். யோகதட்சிணாமூர்த்தி, வீணாதட்சிணாமூர்த்தி முதலிய உருவ வேறுபாடுகள் உண்டு.

தத்துவம்
“மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க்காட்சியில் கதுவநல்கிய
செம்மலையலது உளம் சிந்தியாதரோ”

என ஆலமர் செல்வனின் உண்மைத் தத்துவத்தைக் கச்சியப்பமுனிவர் பாடியுள்ளார்.

கும்பகோணத்திற்கு அண்மையில் உள்ள திருவிரும்பூளை (ஆலங்குடி) சிறந்த வழிபாட்டுத்தலமாகும். கொங்கு நாட்டில் அன்னூர்க் கோவில்பாளையம் காலகாலேசுவரர் திருக்கோவில் ஆலமர்செல்வன் சிறப்புடையவர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டிக்கு மேற்கில் உள்ள முட்டத்து நாகேசுவரர் திருக்கோவில் - ஆலமர் செல்வன் காலை - பசு நாவால் தடவுவது போல் உள்ளது தனிச் சிறப்பாகும்.

                                                         

தவறான வழிபாடு
நாளை " குருப்பெயர்ச்சி "வருகிறது. அன்று எல்லாச் சிவன் கோவில்களிலும் தட்சிணாமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலங்குடியில் இலட்சார்ச்சனை - சிறப்பாக - ஆலங்குடி -தட்சிணாமூர்த்திக்குச் செய்தனர்.

குரு எனப்படுவார் நவக்கிரகங்களில் ஒருவர் ஆகிய வியாழன் ஆகும். நவக்கிரகங்களில் நடுவில் உள்ள சூரியனுக்கு நேர்வடக்கில் வடக்குப் பார்த்துக் குருவின் உருவம் அமந்திருக்கும். அந்தக் குருவே பெயர்ச்சிக்குரியவர்.

சூரியனை மையமாகக் கொண்ட கோள்களில் வியாழனாகிய குரு ஒராண்டுக்கொரு ராசியாக, ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உரிய இடம் வருவர்.

குருப்பெயர்ச்சியின் போது நவக்கிரகங்களில் உள்ள குருவுக்கே வழிபாடு செய்திருக்க வேண்டும். தட்சிணாமூர்த்தி ஞானகுரு ஆவார். அவர் என்றும் பெயரார். சிவபெருமானின் அம்சம் தட்சிணாமூர்த்தி ஆவார்.

வாரந்தோறும் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் துணியணிந்து, கடலை மாலை சாத்தி வழிபட்டு வருகின்றனர். இதுவும் தவறு.

நவக்கிரங்களில் உள்ள குருவுக்குக் கடலை மஞ்சள் நிறத்துணி முதலியன உரியன. அவற்றைத் தட்சிணாமூர்த்திக்கு அணியக்கூடாது. நவக்கிரங்களில் உள்ள குரு வேறு, தட்சிணாமூர்த்தியாகிய ஞானகுரு வேறு.

நவக்கிரகக் குருவை வழிபட்டால் சிறிதளவே பயன் உண்டாகும். ஞானகுருவாகிய தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பயனும் கிடைக்கும்.

நன்றி மூலக்கட்டுரை சைவசித்தாந்தம் முனைவர் சென்னியப்பன்
தொகுப்பு ; வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக