திருமூலரும் திருமந்தும் / உபதேசம் 13 . பெரியோர் இயல்பு
பற்றிநின் றார்நெஞ்சிற் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.
பற்றறாதவர் உள்ளத்தில் பல்லி ஒன்று உள்ளது; அஃது அவரது மூக்கையும், நாக்கையும் பற்றிக்கிடந்து, எந்த நேரமும், எவற்றையேனும் படபடவென்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. பற்றுக்களைத் துடைத்தவரது உள்ளத்திலோ பெரிய பொறுமை என்னும் நீர் வற்றாது நிறைந்து நிற்கின்றது.
கடுஞ்சொற் பேசுதற்குக் காரணமான வெகுளியை, அடக்கமின்றிப் பலகாலும் படபடத்து ஒலிக்கின்ற பல்லியாக உரு வகித்தார். அது மூக்கையும் நாக்கையும் மூடிக்கிடப்பதாகக் கூறியது, அவை இரண்டுமே எழுத்தொலி புறப்படும் இடமாய் இருத்தல் பற்றி. வெகுளியால் முணுமுணுக்கின்றவர்கட்குப் பேச்சுப் பெரும் பான்மையும் மூக்கின் துணையோடே நிகழ்தல் அறிக `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் முக்குற்றங்களுள் நடுவுநின்ற வெகுளியுளதாயின் ஏனை இரண்டும் நீங்கினவாகா ஆதலின், அவ்விரண்டையும் விட்ட மாகேசுரர் வெகுளியுடையராதல் கூடாது என்பதனை வலியுறுத்தற்கு, வெகுளி, காமமும், மயக்கமும் உடையாரையே பற்றிநின்று கடுஞ் சொற் பிறப்பித்தலை உடன் கூறினார். அதனானே, மாகேசுரர் கடுஞ் சொற் கூறலாகாமையும் பெறப்பட்டது. ஆளுடைய பிள்ளையார் சமணரால் இடப்பட்ட தீயைப் `பாண்டியன்பால் செல்க` என வெஞ் சொற் சொல்லியது` மாகேசுரராய அவர்க்குத் தகுவதோ` என ஐயுறாமைப் பொருட்டன்றே அவர், ``செல்க`` என வாளா கூறாது, ``பையவே செல்க`` எனப் பணித்தமையை எடுத்துக்காட்டி, ``பையவே `` என்றாராயினும் ``செல்க`` என்றது என்னை என்பார்க்கு.
பயிர்வளர்வதற்கு நீர்போலச் சிவபத்தி வளர்வதற்குப் பொறை யுடைமை இன்றியமையாததாதலின் அதனை நீராக உருவகம் செய்தார்.
மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தைவித்திப் பொய்ம்மையாம் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலியிட்டுச்
செம்மையுள் நிற்பராகில் சிவகதி
விளையு மாறே. -தி.4 ப.76 பா.2
என்று நாவுக்கரசரும் அருளிச்செய்தார்.
இதனால், `மாகேசுரர் பிறர் செய்யும் மிகையைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
வல்வகையால்உம் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யும்
கொல்லையில் நின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத இலயமுண்டாமே.
காட்டில் ஆடுகின்ற கூத்தனுக்கு அளவு கடந்த பொறுமையே பொருளாக அமைவது. அதனால், மாகேசுரர்களே, நீவிர் வாழும் இடத்திற்கு உள்ளும், புறம்பும் இயன்ற அளவில் பலவகையாலும் உள்ளத்தைப் பொறுமையோடு இருக்கப் பழக்கிப் பக்குவப்படுத்துங்கள்.
பொருண்மையாவது உளதாந் தன்மையாதலின், பொருளை `உள்ளது` என்றார். இங்ஙனம் அன்றிக் கிடந்தவாறேகொண்டு, `பதம் செய்தால் உம்மிடத்துக் கூத்தனுக்கு எல்லையில்லாத ஒற்றுமை (இரக்கம்) உண்டாகும்` என உரைத்தலும் ஆம். வெகுளியுடைய உள்ளத்தில் அன்பும், அருளும் தோன்றா ஆதலின், அன்பையும், அருளையும் பொருளாக விரும்பும் சிவ பெருமான் அதற்கு முதலாகிய பொறையைப் பொருளாக விரும்புவன்
இவ்வாறு, பொறையுடைமையை விதிக்கவே, அதனடியாகப் பிறக்கும் இன்னா செய்யாமையும் விதிக்கப்பட்டதாம். புலால் உண்ணாமையாகிய இயைபு பற்றி, கொல்லாமை முன்பே விதிக்கப் பட்டது.
உயிர்களின் பக்குவதற்கு ஏற்றபடி உடலும் உள்ளத்திலும் பலவகையாலும் இன்ப துன்பங்களை அனுபவிக்க செய்து இறைவன் அவர்களை பக்குவப்படுத்து கிறான், பொறுமையை கைக்கொள்வது சிறப்பு உடையவர்க்கே இறைவன் திருவடியில் இன்புறுதல் உண்டாகும்,
பொறுமையின் மேன்ைமைய நாலடியார் (பொறையுடமைப் பகுதி ) பாடலி்ல் விளக்கம் கொள்ளலாம்,
அறிவதறிந்தடங்கி அஞ்சுவதஞ்சி
உறுவதுலகுவப்பச் செய்து / பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
தகுதியான நூல்களை ஐயந்திரபற கற்று அவை கூறும் நல்வழியில் ஒழுகி அஞ்ச வேண்டிய தீயவற்றிக்கு அஞ்சி, தமக்கு பொருத்தமான செயல்களை உலகம் கண்டு மகிழும்படி செய்து தாம்பெற்ற பொருட்களுடன் இனிதே வாழும் தன்ைம யுடையவர் எக்காலத்திலும் துன்பமடைவதில்லை.
திருச்சிற்றம்பலம் / ஒம் நமசிவாயம் ஓம்
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக