திருமூலரும் திருமந்திரமும் / உபதேசம் கல்லாமை
சென்ற உபதேசத்தில் கல்வியன் பயன்களை கூறிய திருமூலர் கல்லாமையால் ஏற்படும் துற்பலங்களையும் தனது முதல் தந்திரத்தில் கல்லாமை என்னும் உபதேசத்தில் கீழ்கண்ட வாறு விளக்குகிறார்,கல்லாதாரை பெண்ைமயை பெண்ணாக இருந்தும் பெண்ைம இல்லாதவருக்கு ஒப்பிடும் வள்ளுவர்
" கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதான் பெண்காமுற் றற்று" பெண்ணிற்கு பெண்ணின் தன்மையை உணர்த்தும் முலைகள் இல்லாத பெண்டிற்கு ஒப்பாவர் கல்லாதவரின் சபையின் கண் கூறும் கூற்று என்கிறார்.
கல்லாமை குறித்து திருமூலர்
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே.
பொழிப்புரை :
`கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.
`கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி.6 ப.32 பா.1) கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி`` ``கற்றார் இடும்பை களைவாய் போற்றி`` (தி.6 ப.5 பா.1) ``கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை`` (தி.9 ப.5 பா.2) ``உளர்என்னும் மாத்திரைய ரல்லால், பயவாக் களரனையர் கல்லாதவர்`` (குறள், 406) என்றாற்போல வரும் மெய்யுரைகள் பலவற்றிற்கும் மாறாமாகலின், அங்ஙனங் கூறுதல், `கையிலான் காட்டக் கண்ணிலான் கண்டான்` என்பதுபோல நகை விளைப்பதொன்றாய்ப் பொருந்தாது` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம், `புலால் மறுத்தல் இன்றியும் அருளாடல் கூடும்` என முரணிக் கூறுவாரை, ``பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி - ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு`` (குறள், 252) என ஓர் உவம அளவையான் மறுத்து, `புலால் மறுத்தல் இன்றி அருளாடல் உண்டாகாது` என புலால் மறுத்தலை வலியுறுத்திய திருக்குறள் போல, `கல்வி இன்றியும் மெய்ப்பொருளை உணர்தல் கூடும்` என முரணிக் கூறுவாரை உரையளவைகள் பலவற்றான் மறுத்து, `கல்வி இன்றி மெய்ப்பொருட் காட்சி உளதாகாது` எனக் கல்வியை வலியுறுத்தியது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. -குறள், 356
எனத் திருவள்ளுவரும் மெய்ப்பொருட் காட்சிக்குக் கல்வி கேள்விகள் இன்றியமையாதச் சிறப்பினவாகக் கூறுதல் காண்க. `கண்ணப்பர் முதலாயினார் முற்பிறப்பிற் கற்ற கல்வி உடையார்` என்பது மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.296 உரை) ``கல்வியாவது இது` என்பதனை நாயனார் `கல்வி` அதிகாரத்துட் கூறினமையை நினைவு கூர்க.
கருத்து - அறிவு. இதன்கண் `உள்` என்னும் பொருள் பட வந்த ஏழாவது விரிக்க. ``கருத்தறி காட்சி`` எனவே மெய்ப்பொருட் காட்சி யாயிற்று. ``அருள்`` என்றது, ஞானம் என்னும் பொருட்டு; இது கலை ஞானம். மதித்துளோர் - பொருள்களின் இயல்பை ஆய்ந்துணர்ந்தவர், `மதித்துளோர் நிற்பவராவர்` எனவும், `கற்றோரும் காணகிலாராவர்` எனவும் இயைத்துரைக்க. ``கற்றோரும்`` என மறித்தும் கூறினார், வலியுறுத்தற்பொருட்டு. `மதித்துளோரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``கல்லாதார் உண்மை`` ``கல்லாதார் இன்பம்`` என்பன காரகப் பொருண்மைக்கண் வந்த ஆறாவதன் தொகை. `பற்றாது` என்பதன் ஈறு குறைந்தது.
இதனால், கல்லாமை எவ்வாற்றானும் கடியப்படும் குற்றமாவ தன்றி, ஒருவாற்றானும் கொள்ளப்படும் குணமாகாமை கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக