திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 18
அண்ணலின் அருளால் ஆகிறவை
சிவனது அருள் சேர்ந்தால்செல்வங்கள் வாய்க்கும், அவனது அருளிருந்தால் நல்ல ஞானம் உண்டாகும், பெருந்தன்மை உண்டாகும், சிவமாம் பெருவாழ்வு உண்டு என்கிறது திருமந்திரம், அண்ணலின் அருள்வேண்டி தலங்கள் தோறும் செலவர் சரியையாளர், ஞானிகளோ தாங்கள் இருக்கிற இடத்திலேயே வழிபாடு செய்து பெரும்பயன் அடைகின்றனர், தங்கள் சரீரத்திலேயே சிவனை அவர்கள் உணர்கின்றனர், நடைமுறை வாழ்வின் நன்மை தீமைகள் நாம் செய்த புண்ணிய பாலங்களின் பலன்கள், வினையாகிய வேரினை அறுத்து தீயவிளைவுகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வர் ஞானிகள்,
"சிவனரு ளாற்சிலர் தேவருமாவர்
சிவனருளாற் சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனருளால் வினை சேரகி லாமை
சிவனருள் கூறில் அச்சிவலோக மாமே, "
சிவனருளால் சிலருக்குத் தேவவடிவம் கிடைக்கிறது சிலருக்கு தெய்வத்தன்மை வாய்க்கிறது, சிலருக்கு வினைகள் சேராது நின்று விடுகின்றன, இது பாடலின் பொருள்
விளக்கின் சுடராய் ஞானம் விளங்குவதும், மண்ணுலகில் ஞானிகளாவதும் விண்ணுலகில் தேவ உருவில் திகழ்வதும் என் அண்ணாலாகிய சிவன் வழங்கிய அருளால் அமைந்தவை என்கிறார் திருமூலர், பாடல்: புண்ணியன் எந்தை புனிதன் இணையடி........
பிறப்புக்களில் மக்கட் பிறப்பும், தெய்வப் பிறப்பும் சிறந்தனவாகலின் அவற்றை அடைதலையே எடுத்துக் கூறினார்.
இதனால், `உயர்வு யாதும் சிவனருள் இன்றி ஆகாது` என்பது கூறும் முகத்தால் ஞானம் அவனருள் இன்றி வாராமை என்கிறார் திருமூலர் மேலும் மற்றொரு பாடலில் அன்பாகிய தேரில்
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
`உடம்பு` என்னும் நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கைவன்மையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செல்லச் செலுத்துதலினால் வழியறியாது மயங்குகின்ற உயிர்கள் சிறிதே உணர்வு பெற்றுச் சிவன்மேற் செல்லும் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், அங்ஙனம் அதனைப் பெற்றவரது குழாமாகிய தேரின்மேல் ஏறிச் சீவன் சிவனை அடைந்து அவனாய் விடும்.
காயத்தைத் தேராக உருவகிக்கின்றவர் அதன் இயல்பை உணர்த்தவேண்டி அதனை ``மாயத் தேர்`` என்றும் கூறினார். கை, ஆகுபெயர். அன்றி, `கைகூட்டல்` என்பது, கையைப் பொருத்தி ஓட்டுதலாகிய காரியத்தைக் குறித்தது என்றலுமாம். ``உணர்`` என்னும் முதனிலைத் தொழிற் பெயரில் `உணர்வால்` என உருபுவிரிக்க. `உணர்ந்த பொருளிலன்றி அன்பு நிகழாது` என்பதனை உணர்த்த, `உணர்வால் நேயத்தேர் ஏறி` என்றார். உணர்வு சிவனை உணர்தற்கு இருவினையொப்பில் நிகழும் சத்திநிபாதம் காரணமாம். ``நல்லினத்தி னூஉங்கும் துணையில்லை``l என இன்பத்தை எய்துதற்கு நல்லினம் சாதனமாகக் கூறலின், அதனையும் தேராக உருவகித்தார், ``அவன் இவன் ஆமே` என்றதனை, `இவன் அவன் ஆமே` என மாற்றியுரைக்க. இது நிமலன் அருள் பெற்றதன் பயனை விளக்குவதாய் வேறு முடிபாகலின், திணை வழுவும், பால் வழுவும் ஆகாமையறிக.
இதனால், `சிவனருளைப் பெற்றுச் சிவமாவதற்கு முதற்கண் அன்பு வேண்டும்` என்பது கூறப்பட்டது.
http://vpoompalani05.wordpress.com,
http://poomalai-karthicraja.blogspot.in,
http://poompalani.weebly.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக