வியாழன், 5 ஜூன், 2014


மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசி ஒருநாடு நீர்வளமும் நில வளமும் நிரம்பப் பெற்றிருந்தால் மட்டும் போதாது. நாட்டில் கலவரங்கள் ஏதும் நிகழாமல் அமைதிப் பூங்காவாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக மத, இனக் கலவரங்கள் நிகழாமல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் மன்னர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் மன்னனே மதம் மாறி ஒருபக்கமாகச் சாய்ந்தால், நாடு என்னவாகும்? நாட்டில் குழப்பங்கள் எழுவதைத் தடுக்க முடியாது. இதுதான் பாண் டிய நாட்டில் நிகழ்ந்தது. பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். அரசன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கேற்ப, மக்களும் மன்னனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; சைவர்கள் மிக்க துன்பமடைந்தார்கள். இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். நாடும் மக்களும் மன்னனும் இப்படித் திசைமாறிப் போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என எண்ணினாள். அதனால் அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள். சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்தார்கள். அவரால்தான் பாண்டிய நாட்டையும் மன்னனையும் மக்களையும் சமணர்களிடமிருந்து மீட்க முடியும் என்பதையும் உணர்ந்தார்கள். எனவே ஞானசம்பந்தரிடம் இந்தச் செய்தியைச் சொல்லும்படி தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லி அனுப்பினார்கள். பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் சொல்லியனுப்பிய செய்தியைக் கேட்ட திரு ஞானசம்பந்தர், திருநவுக்கரசரை அடைந்து, பாண்டிய நாட்டு அரசியும் அமைச்சரும் அழைத்த விஷயத்தைக் கூறினார். இதைக் கேட்ட நாவரசர் திடுக்கிட்டார். சமணர்களின் வஞ்சனையை நன்கறிந்தவர் அல்லவா? “பிள்ளாய்! அந்த சமணர்களின் வஞ்சனையை நான் நன்கறிவேன். நானே அவர்களால் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானேன் தெரியுமா? மேலும் நாளும் கோளும் சரியில்லை.அதனால் தாங்கள் அங்கு செல்வது உசிதமாகத் தோன்றவில்லை” என்றார். அதைக் கேட்ட சம்பந்தர் “அப்பரே! நாம் பரவுவது நம் பெருமான் திருவடிகள் என்றால் நாளும் கோளும் நம்மை என்ன செய்யும்? ”… ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே’’ என்று ‘கோளறு பதிகம்’ பாடி நாவரசரை சமாதனம் செய்தார். இதன்பின் சம்பந்தர் நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார். Mankaiyarkarasi இதேசமயம் மதுரையில் சமணர்களுக்குப் பல தீய சகுனங்கள் தோன்றலாயின. அவர்களுடைய பள்ளிகளிலும், மடங்களிலும் கூகை, ஆந்தைகள் அலறின. எனவே அவர்கள் மன்னனிடம் சென்று தங்கள் தீக்கனவைப் பற்றிக் கவலையோடு தெரிவித்தார்கள். மதுரை மாநகரம் முழுவதும் சிவனடியார்கள் மயமாகி விளங்குவதாகவும், மன்னன் கொடிய வெப்பம் மிகுந்த தழலில் வீழ்வது போலவும் கனவு கண்டதாகச் சொன்னார்கள். சிறிய கன்று ஒன்று தங்களை யெல்லாம் விரட்டியடிப்பதாகவும் கனவு கண்டார்களாம். இதையெல்லாம் மன்னனிடம் பதைபதைப்புடன் கூறினார்கள். இங்கே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார்க்கும் குலச்சிறையார்க்கும் நன்னிமித்தங்கள் தோன்றின. “வண் தமிழ்நாடு செய்தவப்பயன் விளங்க சைவநெறி தழைத்தோங்க, பரசமயக் கோளரி வந்தான் வந்தான்” என்று சின்னங்கள் ஒலிக்க சம்பந்தர் வருவதைக் கேள்விப் பட்ட அரசி, சம்பந்தரை எதிர்கொண்டழைக்க குலச்சிறையாரை அனுப்பினாள். குலச்சிறையாரும் உவந்து சென்று சம்பந்தரை எதிர்கொண்டழைத்து மரியாதைகள் செய்து உபசரித்தார். ஆலவாய் அண்ணல் உறையும் கோயிலைக் கண்ட சம்பந்தர் அண்ணலை வணங்கினார். பின் அரசியைப் பாடினார். மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணி செய்து நாள்தோறும் பரவப் பொங்கழலுருவன் பூத நாயகன் நால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாயாவதும் இதுவே என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார். சம்பந்தர் வந்ததை அறிந்த பாண்டிமாதேவி தானும் சென்று அவரை வரவேற்று சம்பந்தரின் அடிகளில் வீழ்ந்து, “யானும் என் பதியும் என்ன தவம் செய்தோமோ?’’ என்று வணங்கினாள். சம்பந்தரும், “சூழுமாகிய பரசமயத்திடைத் தொண்டு வாழு நீர்மையீர்!’ உமைக் காண வந்தனம்” என்றார். சம்பந்தரும் அவருடன் வந்த அடியவர் களுக்கும் தங்க திருமடம் ஏற்பாடு செய்தார்கள். பாண்டி மாதேவி மிக்க அன்போடு அவர்களுக்கு விருந்தளித்தாள். அடியார்கள் ஓதிய திருப்பதிக ஓசை பொங்கியெழுந்தது. இரவில் சம்பந்தரும் அடியார்களும் திருப்பதிகங்கள் பாடிய முழக்கத்தைக் கேட்ட சமணர்கள் பொறாமையால் மன்னனிடம் சென்று, சம்பந்தரையும் அவருடைய சீடர்களையும் மதுரையை விட்டு விரட்ட வேண்டும் என்றார்கள். சம்பந்தர் தங்கி யிருக்கும் மடத்திற்குத் தீ வைத்தால் சிறுவனான சம்பந்தன் பயந்து மதுரையை விட்டு ஓடி விடுவான்.” என்றார்கள். இதைக் கேட்ட மன்னனும் சற்றும் யோசிக்காமல் அப்படியே செய்யலாம் என்றான். சமணர்கள் சென்ற பின் மன்னன் கவலையோடு படுக்கையில் சாய்ந்தான். மன்னனுடைய முகவாட்டத்தைக் கண்ட பாண்டிமா தேவி “முகவாட்டம் எதனால் வந்தது?” என்றாள் “காவிரி நாட்டிலுள்ள சீர்காழி யில் பிறந்த ஒரு சிறுவன், சங்கரன் அருள் பெற்று இங்கு வந்திருக்கிறானாம். இங்குள்ள அமணர்களை வாதில் வெல்லப் போகிறானாம்” என்றான் மன்னன். இதைக் கேட்ட அரசி, “அப்படித் தெய்வத் தன்மை பெற்ற அவர் வாதில் வென்றால், வென்றவர் பக்கம் சேர்வோம்” என்றாள். பின் அமைச்சர் குலச்சிறையாருடன் தன் கவலையைப் பகிர்ந்து கொண்டாள் அரசி. “சமணர்கள் என்ன தீங்கு சூழ்வார்களோ? சம்பந்தருக்குத் தீங்கு ஏதும் வந்து விடக் கூடாது. அப்படி அவருக்குப் பெருந் தீங்கு ஏதும் வந்தால் நாமும் உயிரை விட்டுவிட வேண்டும்” என்றாள். இதற்குள் சமணர்கள் தங்கள் மந்திரத்தால் திருமடம் தீப்பற்ற மந்திரம் ஓதினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. மன்னன் இதையறிந்தால் தங்கள் பெருமை மங்கி விடும் என்று தாங்களே மடத்தில் சென்று அழல் வைத்தார்கள். ஆனால் சிவனடியார்கள் அத் தீயை மேலும் பரவவிடாமல் உடனே அணைத்தார்கள். இதை சம்பந்தரிடமும் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட திரு ஞானசம்பந்தர் மிகவும் வருந்தினார். இந்தத் தவறுக்குக் காரணம் மன்னரின் நிர்வாகமே. மன்னனே பொறுப்பேற்க வேண் டும் என்று நினைத்து அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். மங்கையர்க்கரசியாரின் மங்கல நாணைப் பாதுகாத்தும், அமைச்சர் குலச்சிறையாரின் அன்பினாலும் அரசன்பால் குற்றம் இருந்ததாலும், அவன் மீண்டும் சைவநெறியில் சேரவேண்டும் என்பதாலும் சம்பந்தரின் திருக் கைகளால் திருநீறு பூசும் பேறு பெறப் போவதாலும் ‘பையவே செல்க’ என்றார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. மன்னனுக்கு வந்த நோயை அறிந்த அரசியும் அமைச்சரும் மருத்துவர்களை அழைத்து வந்து காட்டினார்கள். ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோய் குறையவேயில்லை; மாறாக அதிகரித்தது. மன்னன் நோய்வாய்ப்பட்டதை அறிந்த சமணர்கள் நோயின் காரணத்தை உணராமல் தாங்கள் அறிந்த மந்திரங்களைச் சொல்லி மயிற்பீலி கொண்டு மன்னன் உடலைத் தடவினார்கள். ஆனால் அம் மயிற்பீலிகள் எல்லாம் வெப்பத்தால் கருகித் தீய்ந்தன. தங்கள் கெண்டியில் இருந்த நீரைத் தெளிக்க அந்நீர் கொதிநீர் போலப் பொங்கி யது. இதைக் கண்ட மன்னன் ஆத்திரமடைந்து சமணர்களை அந்த இடத்திலிருந்தே விரட்டி விட்டான். மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும், சம்பந்தருக்குச் செய்த தீமையின் காரணமாகவே மன்னனுக்கு இந்த நோய் வந்திருக்கிறது என்று தெளிந்து மன்னனிடம் தங்கள் எண்ணத்தை வெளியிட்டார்கள். இந்த நோய் சம்பந்தப் பெருமான் அருளால் தான் குணமாகும் என்றும் உணர்த்தினார்கள். எப்படியாவது தன் உடல் வெப்பம் குறைந்தால் போதும் என்று எண்ணிய பாண்டிய மன்னன் ”சம்பந்தர் அருளால் இந்த நோய் தீர்ந்தால் நான் அவர் பக்கம் சேர்வேன். உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவரை அழைக்கலாம்” என்றான். Mankaiyarkarasi2மன்னனின் துன்பத்தைத் தீர்ப்பதற்காக பாண்டிமாதேவி சிவிகையில் ஏறி சம்பந்தர் இருந்த மடத்திற்குச் சென்றாள். சம்பந்தரைக் கண்டதும், உரை குழறி, மெய் நடுங்கி, என்ன செய்வதென்று தெரியாமல் அடியற்ற மரம் போல் அப்படியே அவர் கால்களில் வீழ்ந்து பணிந்தாள். “ஐயனே! சமணர்கள் செய்த தீததொழில் போய் மன்னனிடம் கொடு வெதுப்பாய் நிற்கிறது. தாங்கள் சமணர்களை வென்று அருளினால் எங்கள் உயிரும் மன்னன் உயிரும் பிழைக்கும்” என்று வேண்டினாள். இதைக் கேட்ட சம்பந்தர் “ஆவதும் அழிவதும் எல்லாம் அவன் செயல். நீங்கள் அஞ்ச வேண்டாம். சமணர்களை வாதில் வென்று மன்னவனைத் திருநீறணியச் செய்கிறேன்” என்றார். இதன்பின் அரசி, அமைச்சருடன் அரண்மனை சென்றார் சம்பந்தர். அங்கு மன்னன் இவரைப் பீடத்தில் அமரச் செய்தான். இதனால் சீற்றமடைந்த சமணர்கள் சம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள். சமணர்களின் கூட்டத்தையும் சீற்றத்தையும், பாலனான சம்பந்தரையும் பார்த்து மங்கையர்க்கரசியார் மிகவும் கவலைப்பட்டாள். ஆனால் சம்பந்தரோ மிகவும் தன்னம்பிக்கையோடு. “தேவி! தாங்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் பாலனென்று எண்ண வேண்டாம். இந்தச் சமணர்களை நான் நிச்சயம் வெல்வேன்’’ என்று ஆறுதல் கூறி, மானின் நேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவி! கேள் பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீ பரிவெய்திடேல் ஆனைமாமலி ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்களுக்கு எளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே! ஆலவாய் அரன் அருளால் இவர்களை வெல்வேன் என்று ஆறுதல் அளித்தார். இதன்பின் மன்னனுடைய இடப் பக்கத்தை சமணர்கள் மயிற்பீலி கொண்டு தடவியும், மந்திரித்தும் குணப்படுத்துவதாகவும், மன்னனின் வலப்பக்கத்தைச் சம்பந்தர் திருநீறு கொண்டு தடவியும் ‘நமசிவாய’ மந்திரத்தை ஜபித்தும் குணப்படுத்துவது என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். சம்பந்தர் அரன் தாளை நினைந்து ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே’ என்று தொடங்கி பதிகம் பாடி மன்னனின் வலப்பக்கம் திருநீறு பூசினார். திருநீறு பூசப் பூச வெப்பம் படிப்படியாகக் குறைந்து வெப்ப நோய் தீர்ந்தது. ஆனால் இடப்பக்கம் வெப்பம் அதிகமானது. சமணர்களால் மன்னனின் வெப்பத்தைக் குறைக்க முடியவில்லை. நோய் மேலும் மேலும் அதிகரித்தது. மயிற்பீலியால் தடவிப் பார்த்தும் மந்திரங்கள் உரு வேற்றியும் பலனில்லை. ஒரே உடலில் வலப்பக்கம் குளிர்ச்சியாகவும் இடப்பக்கம் வெப்பம் அதிகமாகவும் இருப்பதைக் கண்ட மன்னன் ஆச்சரியமடைந்தான். “என்னை விட்டுச் செல்லுங்கள்” என்று சமணர்களைச் சீறினான் மன்னன். சம்பந்தரிடம், “என்னை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலாரே! இந்த வெப்ப நோயை முழுமையாகப் போக்க அருள் செய்ய வேண்டும் என்று அடிபணிந்தான். இதைக் கண்ட அரசியும் அமைச்சரும் மனமகிழ்ந்தார்கள். சம்பந்தர் அருளால் மன்னனுடைய வெப்பு நோய் முற்றும் நீங்க, மன்னன், “ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன்” என்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான். ஆனால் சமணர்கள் அவ்வளவு எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. மறுபடியும் சம்பந்தரை அனல்வாதம், புனல்வாதம் செய்ய வரும்படி வற்புறுத்தினார்கள். சம்பந்தர் சற்றும் தயங்காமல் அனல்வாதம், புனல்வாதம் செய்ய ஒப்புக் கொண்டார். அதன்படி சமணர்களும், சம்பந்தரும் தங்கள் தங்கள் ஏடுகளைத் தீயிலிட்டனர். சம்பந்தருடைய ஏடுகள் பசுமையாயிருக்க, சமணர்களுடைய ஏடுகள் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கின. இதன்பின் இருவரும் தத்தம் ஏடுகளை ஓடும் வைகை ஆற்றில் போட்டார்கள். சம்பந்தருடைய ஏடுகள் தண்ணீரை எதிர்த்துச் சென்று திருவேடகம் என்று வழங்கப்பெறும் இடத்தில் கரையேறின. சமணர்களின் ஏடுகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டன. இந்தக் காட்சிகளைக் கண்ட மன்னனும் மக்களும் அதிசயித்தனர். சம்பந்தரை வாழ்த்தி முழக்கமிட்டனர். மன்னனும் தன் தறை உணர்ந்தான். “ஆலவாய் அண்ணலே! அமணர்கள் மாய்கையால் மயங்கி நானும் உன்னை மறந்தேன். தக்க சமயத்தில் ஆளுடைப் பிள்ளையை அனுப்பி என்னை ஆட்கொண்டாயே!” என்று பணிந்தான். திருநீற்றின் மகிமையை உணர்ந்து சிவ பக்தனானான்; நாட்டில் சைவம் தழைக்க ஆரம்பித்தது. பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக